நாமும் சரி, நம் கல்வி முறையும் சரி மதிப்பெண்ணை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறோம். இதை மாற்ற யாரேனும் முயற்சித்தாலும் அது சாத்தியப்படுவது என்பது மிக,மிக கடினமாகிவிட்டது. கல்வி வியாபாரமானதிற்கும் அதுதான் காரணம், நம் நாட்டில் கல்வியின் நிலை மோசமானதிற்கும் அதுதான் காரணம். தேர்வில் அதிக வார்த்தைகள் கொண்டு பதில் எழுதத் தவறியதால் இரண்டு மதிப்பெண் குறைந்ததனால் விரக்தியடைந்த காஷ்மீர் சிறுவன், வார்த்தைகளை எண்ணக்கூடிய பேனா (counting pen) ஒன்றை உருவாக்கியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக அச்சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் அந்த சிறுவனை வாழ்த்துவது என்பது நம் கடமைதான். ஆனால் அதே அளவிற்கு முக்கியமானது நம் கல்விமுறை எதை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதை ஆய்வது. எழுதும் பதிலில் உள்ள கருத்து சரியானதா என்பதை பார்க்காமல், அது எவ்வளவு நீளமாக உள்ளது, எத்தனை வார்த்தை உள்ளது என்பதின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதால்தான் மாணவர்கள் சாராம்சத்தை படிக்காமல் மொட்டை மனப்பாடம் செய்வது, இடத்தை நிரப்ப பாடல்கள், கதை என அனைத்தையும் எழுதிவைப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது மட்டுமில்லாமல் வார்த்தைகளில் கவனம் செலுத்தும் அளவிற்கு அவர்கள் மையக்கருத்தில் கவனம் செலுத்துவதில்லை.
ஒரு சில ஆசிரியர்களைத் தவிர, பெரும்பாலான ஆசிரியர்கள் பெரியதாக எழுதுவதையே ஊக்குவிக்கின்றனர். விடைத்தாள் திருத்தும் பணியில் இருக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் முழுமையாக படித்துவிட்டு மைய கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பெண் அளிப்பதைவிட, எழுத்து அழகாக இருக்கிறதா, எத்தனை வண்ணங்கள் இருக்கிறது, பதில் பெரியதாக இருக்கிறதா என்பதைத்தான் பார்க்கிறார்கள். அதுவும் தமிழ்நாட்டில் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். ஒரு தேர்வில் தோற்ற ஒருவர் உடனே ரீ-வேல்யேஷன் போட்டு பாஸ் ஆவதும், என்ன எழுதினோமென்றே தெரியாமல் பக்கம் பக்கமாக எழுதி பாஸ் மாணவர்களும் ஆயிரக்கணக்கில் உண்டு.
அதெல்லாம் எப்படி, மைய கருத்தை தாண்டி அவைகளும் அவசியம்தான் என்பவர்களுக்கு.... மற்றவை அவசியம்தான். ஆனால் மையக்கருத்து என்பது அத்தியாவசியம். நாம் இன்றுவரை போற்றிப் புகழும் தலைவர்கள் பலரின் கையெழுத்து அழகாக இருந்ததில்லை. வண்ணம் மாற்றி, மாற்றி எழுதியதில்லை, தேவையான கருத்தைத் தாண்டி தேவையில்லாத கதைகளை எழுதியதில்லை. மாணவர்களை, மாணவர்களாக பார்ப்பதை விடுத்து தலைவர்களாகப் பார்ப்பதில்தான் இதன் தீர்வு உள்ளது. படித்து முடித்த பலருக்கும், குறிப்பாக பொறியியல் மாணவர்களுக்கு வேலை கிடைக்காததற்கு மொட்டை மனப்பாடம் செய்வதே காரணமாக உள்ளது.
இந்த மொட்டை மனப்பாட கல்வியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாததே. என்ன இருந்தாலும் இந்த கண்டுபிடிப்பிற்காக, இந்த சிறுவனை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.