கர்நாடகா தேர்தலில் மிகக்குறைந்த வா்ககுகள் வித்தியாசத்தில் பெரும்பாலான தொகுதிகளை காங்கிரஸ் இழந்திருக்கிறது. இதையடுத்து பாஜக 104 தொகுதிகளை பெற்றிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள் வெற்றி என்ற தோற்றத்தை ஏற்படுத்திய பாஜக இப்போது மூக்குடை பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவு பாஜகவுக்கு உதவியாக இருக்குமா, பின்னடைவைக் கொடுக்குமா? கொஞ்சம் பின்னோக்கி போகலாம்…
மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபிறகு, கடந்த 2014 மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன் பாஜக சந்தித்த சட்டப்பேரவை தேர்தல்கள் இப்போது வரிசையாக மோடியை எதிர்நோக்கி நிற்கின்றன.
கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்தே பாஜக தனது பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வராக இருந்த மோடியை புரஜெக்ட் செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால், முறைப்படி 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் கட்சி அறிவித்தது.
அதாவது கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்திருந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடகா தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. அந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்று பாஜகவால் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்ட குஜராத் முதல்வர் மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அப்படி இருந்தும் பாஜக அங்கு எதிர்க்கட்சி அந்தஸ்த்தைக்கூட பெற திணறியது.
ஆனால், 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அதாவது மக்களவை தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது.
அந்த வெற்றிக்கு வேறு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் மோடியின் பிரச்சாரமும், அவருடைய செல்வாக்கும்தான் காரணம் என்று மீடியாக்களால் ஊதப்பட்டது. இந்த வெற்றிகள் 2018 மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அளவில் உதவியது.
இப்போது நடைபெற்ற கர்நாடகா தேர்தலில் மோடி கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை எந்த பிரதமரும் மோடியைப் போல அதிக நாட்கள் பிரச்சாரம் செய்தது இல்லை. இந்தத் தேர்தலுக்கு முன், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல்கள் அனைத்திலும் பாஜக தோல்வி அடைந்தது. அந்தத் தொகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் பாஜகவினர் வென்ற தொகுதிகள் ஆகும்.
அந்தத் தோல்விகள் பிரதமர் மோடியை அச்சுறுத்தின. எனவே, அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன், பாஜகவின் இமேஜை தூக்கி நிறுத்தவேண்டியது அவசியம் என்று மோடி கருதினார். எனவேதான் கர்நாடாக தேர்தலில் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டார்.
இதோ, கர்நாடகா தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி இருக்கிறது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதாதளம் 38, சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எதிர்பாராத இந்தத் தோல்வி பாஜகவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதைவிட, மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைக்க ஆதரவு என்று காங்கிரஸ் அறிவித்தது. இது பாஜகவுக்கு மேலும் அதிர்ச்சியாக அமைந்தது. காலையில் அதிக இடங்களில் முன்னிலை என்ற அறிவிப்பு வந்தவுடனே, மோடியின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக தலைவர்கள் பேட்டி கொடுக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், பிற்பகலில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த தேர்தல் வெற்றியை எதிர்வரும் மூன்று மாநில சட்டமன்றத்தேர்தலுக்கும், மக்களவை தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள பாஜக விரும்பியது. ஆனால், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாலோ, தோல்வி அடைந்தாலோ எதிர்வரும் தேர்தல்களுக்கு எந்த வகையில் உதவும் என்பதை பார்க்கலாம்.
முதலில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் கடந்த முறை பாஜக வெற்றி பெற்றதின் பின்னணியை பார்க்கலாம்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றுகின்றன. 1990 தேர்தலில் ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்து பாஜக முதன்முதலில் அரசு அமைத்தது. அந்த அரசு 1993ல் கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பாஜக 95 இடங்களில் வெற்றிபெற்று தனித்து அரசு அமைத்தது. 1998 தேர்தலில் காங்கிரஸ் 153 இடங்களில் வெற்றிபெற்று அரசு அமைத்தது. அந்த ஆண்டுதான் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2003 ஆம் ஆண்டு வசுந்தரா ரஜே தலைமையில் தேர்தலைச் சந்தித்த பாஜக 120 இடங்களைப் பெற்று அரசு அமைத்தது. மத்தியில் அப்போது பாஜக அரசு இருந்தது. 2008 ஆம் ஆண்டு 96 இடங்களுடன் காங்கிரஸ் அரசு அமைத்தது. இந்நிலையில்தான் 2013 தேர்தலில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று அரசு அமைத்தது. ஆக, மோடியின் செல்வாக்கால் ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றது என்ற கூற்றே அடிபட்டு போகிறது.
அதே காலகட்டத்தில் தேர்தல் நடைபெற்ற மத்தியப் பிரதேச அரசியலை கவனித்தால், அதுவும் மோடியின் செல்வாக்கிற்கு சம்பந்தமில்லாத மாநிலமாகத்தான் இருக்கிறது. அந்த மாநிலத்தில் 1967 காலகட்டத்திலேயே பாரதிய ஜனசங்கமாக பாஜக இருந்த காலத்திலேயே வலுவான எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறது. 78 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்த்துடன் செயல்பட்டிருக்கிறது.
2000 ஆம் ஆண்டு இந்த மாநிலத்தைப் பிரித்து சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து பாஜகவே ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக நீடிக்கிறார். ஆகவே, மத்தியப்பிரதேசத்திலும் மோடியின் செல்வாக்கால்தான் பாஜக ஜெயித்தது என்பதற்கான காரணம் இல்லை.
அடுத்து, சட்டீஸ்கர் மாநில அரசியலுக்கு வருவோம். இந்த மாநிலமே 2000மாவது ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டபோது, மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு இருந்தது. எனவே, சட்டீஸ்கரிலும் அஜித் ஜோகி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. அதன்பிறகு 90 உறுப்பினர்கள் கொண்ட அந்த மாநில சட்டப்பேரவைக்கு 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 50 இடங்களையும் காங்கிரஸ் 37 இடங்களையும் பெற்றன. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பாஜக 50 இடங்களை தக்கவைத்தது. காங்கிரஸ் 38 இடங்களைப் பெற்றது. 2013 ஆம் தேர்தலில் பாஜக 49 இடங்களைப் பெற்றது காங்கிரஸ் 39 இடங்களைப் பெற்றது. அந்த மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ராமன் சிங் முதல்வராக நீடிக்கிறார்.
சட்டீஸ்கரில் காங்கிரஸின் பின்னடைவுக்கு அந்தக் கட்சியின் முதல் முதல்வரும், பழங்குடியின தலைவருமான அஜித் ஜோகி இந்தூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தவர். அவருடைய செல்வாக்கை சீர்குலைக்க பாஜக அரசு அவர் மீது கொலை வழக்கு போட்டது. பாஜகவை உடைத்து காங்கிரஸ் அரசு அமைக்க எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு காங்கிரஸில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் 2016 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி சட்டீஸ்கர் ஜனதா காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.
வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுடன் உடன்பாடுக்கு தயார் என்று அறிவித்துள்ளார். அது எந்த அளவுக்கு கைகூடுகிறதோ அந்த அளவுக்கு காங்கிரஸுக்கு வாய்ப்பு என்கிறார்கள். ஆக சட்டீஸ்கரிலும் மோடி செல்வாக்கால்தான் பாஜக ஜெயித்தது என்று சொல்லிக்கொள்ள காரணம் இல்லை.
எனவே, இந்த மூன்று மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அந்தந்த மாநில ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்துள்ளதைத்தான் சமீபத்திய இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி பிரதிபலிக்கிறது.
அதுமட்டுமல்ல, நேற்று மகாராஸ்டிராவில் பாலஸ் கடேகவோன் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனது வேட்பாளரையே திரும்பப் பெற்றுள்ளது பாஜக. அந்த அளவுக்கு அது தோற்பதையே தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
கர்நாடகாவில் மோடியின் பல நாள் பிரச்சாரத்துக்கு பிறகும் அந்தக் கட்சிக்கு போதுமான மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு வழி ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் கர்நாடாகவில் பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காத நிலை உருவாகி இருக்கிறது என்பதுதான் உண்மை. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை துடைத்தெறிய எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பயன்படும் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகத்தான் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.