42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்! - அமைப்பாக செயல்பட்டு சாதிக்கும் குடும்பம்
இந்த உலகில் இறந்தபின்னும் வாழும் ஓர் அற்புத வாய்ப்பு உடல் உறுப்பு மற்றும் கண்தானத்தால் மட்டுமே கிடைக்கிறது. விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும், இறந்தவரின் உடலை எரித்தோ, புதைத்தோ வீணாக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் உடல் உறுப்புகள், கண்கள் என விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதுமாதிரியான முயற்சிகளின் பின்னணியில் ஒரு அமைப்பு இணைந்து மக்களை அணிதிரட்டி செயல்படுத்தக் கேட்டிருப்போம். ஆனால், ஒரு குடும்பமே ஒரு அமைப்பாக மாறி, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடல் உறுப்புகள் மற்றும் கண் தானம் செய்ய முன்வந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மதன் என்பவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து இந்த முயற்சியை எடுத்துள்ளனர். அவர்களில் 42 பேர் கண்தானமும், 35 பேர் உடலுறுப்பு தானமும் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர். இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனை டீனைச் சந்தித்து, அதற்கான விண்ணப்பங்களையும் குடும்பத்தோடு சமர்ப்பித்துள்ளனர்.

இதுகுறித்து இந்த முடிவை வழிநடத்திய மதனிடம் பேசியபோது, ‘என் தாத்தா ஆறுமுகம் பாட்டி குப்பாயம்மாளின் பேரப்பிள்ளைகள், அவர்களது பிள்ளைகள் என 45 பேர் இருக்கிறோம். நாங்கள் வெறும் குடும்பமாக மட்டுமின்றி, ஒரு அமைப்பாகவும் செயல்படுகிறோம். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தடைநீக்கக்கோரி மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில், ஒரேமாதிரி உடையணிந்து கலந்துகொண்டோம். அதேபோல், மதுரை தத்தனேரி சுடுகாட்டில் சேவைசெய்யும் ஹரி என்பரின் மகள் திருமணத்தில் எங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு நடத்திவைத்தோம். அந்த வரிசையில் இந்த ஆண்டு கண்தானம் செய்ய முடிவெடுத்தோம். பிறகு கண்தானத்தோடு சேர்ந்து உடல்தானமும் செய்ய திட்டமிட்டோம். வருகிற 23ஆம் தேதி எங்கள் பாட்டியின் நினைவுதினம் வருவதால், அதை முன்னிட்டு இன்று தானம் செய்து வந்திருக்கிறோம். ராஜாஜி மருத்துவமனை டீன் உடல் உறுப்புதானம் என்றால் என்ன, அதில் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை முழுமையாக விளக்கி, அதைக் கேட்டபின்புதான் எங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தனர். இன்று தானம் செய்தவர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே. மேலும், இதுபற்றி விவரம் தெரியாத என் அப்பா, அம்மா இருவரும் சேர்ந்து தாங்களும் உடல் உறுப்பு தானம் செய்ய தயாராகியிருக்கின்றனர். எங்கள் குடும்பத்தைப் பொருத்தவரை, இதுமாதிரியான எந்த முயற்சியையும் அனைவரின் சம்மதம் கிடைத்த பின்னரே செயல்படுத்துவோம். அப்போதுதான் இதுபோன்ற முயற்சிகள் காலத்திற்கும் நீடிக்கும். ஒரு குடும்பமாக செய்வதில் எந்தளவிற்கு மகிழ்ச்சியோ, அந்தளவிற்கு நல்லவிதமான உள்நோக்கமும் அதில் உள்ளது. எங்கள் தாத்தா ஆறுமுகத்துடன் பிறந்தவர்கள் நான்குபேர். நாங்கள் இதைச் செய்தவுடன், மற்ற தாத்தாக்களின் பேரப் பிள்ளைகளும் தானம் தர முன்வந்ததுதான் எங்களது வெற்றி. மேலும், ஒரு குடும்பமாக இதைச் செய்யும்போது, சயான நேரத்தில் முறையாக நம் தானம் பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இதன்மூலம் கிடைத்திருக்கிறது’ என்கிறார் நம்பிக்கையான குரலில்.
ஒரு குடும்பத்திற்குள்ளேயே அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் பல பாராட்டத்தக்க செயல்களைச் செய்து வருகின்றனர் மதன்குமாரின் குடும்பத்தினர். பலருக்கு முன்னுதாரணமாக செயல்படும் இந்தக் குடும்பத்தின் நல்ல முயற்சிகளை நாமும் பாராட்டலாம்.
- ச.ப.மதிவாணன்