வாழ்வின் உச்சத்தை எட்டுமளவுக்கு, தென் மாவட்டம் மட்டுமல்லாது ஓவர் நைட்டில் தமிழகமே விழிகள் விரியுமளவுக்கு இண்டு இடுக்கெல்லாம் பிரபலமான '16 வயதினிலே' மயிலான ஸ்ரீதேவியின் பூர்வீகமான இந்த கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையிலிருக்கிறது.
முற்றிலும் நாயக்கர் சமூக மக்களைக் கொண்ட மீனம்பட்டடியில் அய்யப்ப நாயக்கர் அவரது இரண்டாம் மனைவி ராஜேஸ்வரிக்கும் பிறந்த இரண்டு மகள்களில் மூத்தவர் ஸ்ரீதேவி. அய்யப்பனின் முதல் மனைவியான ஜானகி அம்மாள் அவரின் உறவினர் வழியில் வந்தவர். முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். இவர்களில் மூத்த மகன் காலமானதால் அவரின் பிள்ளைகளைக் கவனிப்பதற்காக தாய் ஜானகி சென்னையிலேயே தங்கிவிட்டார்.
தனது வழக்கறிஞர் பணியை அய்யப்பன் சென்னையிலேயே வைத்துக் கொண்டதால் அங்கு அவர் ராஜேஸ்வரியை இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டார்.
மீனம்பட்டி, அதையொட்டிய பாரைப்பட்டியில் விவசாய நிலங்களைக் கொண்ட வழிவழியாக வந்த பண்ணையார் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவியின் தாத்தா கிராமத்தில் பள்ளி அமைவதற்காக முயற்சி எடுத்தவர் அதற்காக தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தையும் கொடுத்தார். ஆரம்பப் பள்ளியை மீனம்பட்டியில் அமைத்தார். அதை விரிவாக்கம் செய்த ஸ்ரீதேவியின் பெரியப்பா ராமசாமியும், தந்தை அய்யப்பனும், அரசு உதவி பெறுகிற மேனேஜ்மெண்ட் பள்ளியாகப் மாற்றினார்கள். அவர்கள் மறைந்து விட்டாலும் இன்றளவும் அந்தப் பள்ளி பொறுப்பான மேனேஜ்மெண்ட் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது.
ஸ்ரீதேவி பிறந்த சில வருடங்களில் தாய் தந்தையோடு சென்னைக்கு இடம் மாறினாலும், ஒரிரு தடவைகள் தான் பிறந்த மீனம்பட்டிக்கு வந்து போயிருக்கிறார்.
கிராமத்தோடு அன்னோன்யமான உறவு இல்லாவிட்டாலும் ஸ்ரீதேவியின் திடீர் மரணம் கிராமத்தை துக்கத்தில் கலங்கடித்து விட்டது. மீனம்பட்டிக்கு நக்கீரனின் இணையதள குழு போய் இறங்கிய மறுகணம் அப்படி ஒரு சோகம் அப்பியிருந்ததைக் காணமுடிந்தது.
ஸ்ரீதேவியின் பூர்வீக வீடு தற்போதைய நாகரீக வாழ்வியல் முறைக்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டாலும், தற்போது அங்கு யாருமில்லை. ஸ்ரீதேவியின் சகோதரனான (பெரியம்மாவின் மகன்) ஆனந்திற்கு கிராமத்தில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது.
"பிறந்த பின் ஸ்ரீதேவி தன், தாய் தந்தையருடன் சென்னைக்கு இடம் பெயர்ந்த பிறகு, இரண்டு மூன்று தடவைகள் கிராமத்திற்கு வந்திருக்கிறார். நடிகையாக பிரபலமான நேரத்தில் அவர் கிராமம் வந்தாலும், கௌவரம் பார்க்காமல் அனைவரிடமும் சகஜமாகவே பேசுவார் பழகுவார்" என்கிறார் பாலகிருஷ்ணன். தொடர்ந்து, சுமார் 15 வருடங்களுக்கு முன்பு அவரது தந்தை காங்கிரஸ் சார்பில் சிவகாசி எம்.பி. தேர்தலில் போட்டியிட்ட போது பிரச்சாரத்திற்காக வந்து போன ஸ்ரீதேவி அதன் பின் வரவில்லை. பெருந்தலைவர் காமராஜர் கூட இங்கு வந்து போயிருக்கிறார். அப்போது ஸ்ரீதேவிக்கு நான்கு வயதிருக்கும். கவிஞர் கண்ணதாசனோடு அய்யப்பனின் வீட்டிற்கு வந்த தலைவர் காமராஜர், ஸ்ரீதேவியைப் பார்த்தவர், இந்தச் சிறுமியைச் சினிமாவில் சேர்த்துவிடப்பா நல்லா வருவான்னு கண்ணதாசனிடம் சொன்னார். காமராஜர் சொன்னதைத் தட்டாமல் அப்போதே ஸ்ரீதேவியைக் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் கண்ணதாசன்.
காமராஜரால் வழிகாட்டப்பட்டு கண்ணதாசனால் திரையில் அறிமுகமான ஸ்ரீதேவி, இன்றைக்கு வாழ்க்கையில், திரையில் உச்சத்தில் இருக்கிறார் என்றால், அதற்கு இவர்கள் தான் அடிப்படைக் காரணம். அப்படிப்பட்ட ஸ்ரீதேவி மரணமானது எங்களுக்குச் சங்கடமாயிருக்கு என்றார்.
நாம் அங்கிருந்த போது இந்தி பேசுகிற ஒரு வடநாட்டு வாலிபர் ஸ்ரீதேவியின் வீட்டையே வெறித்துப் பார்த்தபடி நின்றார். அரைகுறை தமிழில் பதில் சொன்னவரிடம் அவருடைய தாய் மொழியான இந்தியில் பேசினோம். உத்திரப்பிரேதேச மாநிலத்தின் முஸாபர் நகரைச் சேர்ந்த ‘ரசத்கான் என்கிற அந்த வாலிபர், துணி வியாபாரத்திற்காக ஊர் ஊராகச் செல்பவர்.
"ஸ்ரீதேவி எனக்கு ரொம்பப் பிடித்தமான நடிகை. அவர் நடித்த ஹிம்மத் வாலா, தர்மேந்திராவுடன் நடித்த சாந்திதன் படங்கள் பிரபலமானது. சிவகாசிப் பக்கம் நான் துணி வியாபாரத்திற்காக வந்த போது அவரது இந்தக் கிராமத்தைக் கேள்விப்பட்டு ரெண்டு வருஷம் முன்ன கூட இங்க வந்து அவருடைய உறவினர் கிட்ட பேசியிருக்கேன். ஸ்ரீதேவி மரணம் கேட்டு துக்கமாயிருக்கு" என்றார் வேதனையோடு.
ஸ்ரீதேவியின் பூர்வீக வீட்டை பராமரித்து வருகிறவர் ஆண்டாள். இவரது தாய்மாமன் தான் ஸ்ரீதேவியின் தந்தை. வயதான ஆண்டாள், கணவர் சீனிவாசன் இவர்களின் பராமரிப்பில் தானிருக்கிறது அந்த வீடு. "அடிக்கடி ஸ்ரீதேவி இங்கு வராவிட்டாலும், இரண்டொரு தடவை இங்க வந்திருக்கா. பாசமாப் பழகுவா. அவ இறந்த செய்திய டி.வி.யில பாத்ததும் துடிச்சிப் போயிட்டோம். மனசு கனக்குதுயா" என்றார் கண்கள் கலங்க.
தங்கள் ஊரைச் சேர்ந்த பெண் என்று அவர்களின் ஆச்சரியத்தால் விழிகள் விரிய சிகரம் தொட்ட நடிகை ஸ்ரீதேவியின் மரணம், அந்த விழிகளை கண்ணீர் குளமாக்கியிருக்கிறது.