கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை முன்பே தொடங்கிவிட்டாலும், தனது கட்சி பயணத்தை இன்று (21-02-2018) முதல் தொடங்குகிறார். திரையுலகில் உலகநாயகனாக இருக்கும் கமல் அரசியலில் எப்படி இருப்பார் என பலதரப்பட்ட மக்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
கமல்ஹாசனின் குடும்பத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அரசியல் தொடர்புகள் உண்டு. ராஜாஜி, காமராஜர் கால தலைவர்கள் பலர் கமலின் தந்தையுடன் நட்பு கொண்டிருந்தனர். கமலின் அண்ணண் சாருஹாசன் தி.மு.கவிற்கு நெருக்கமான வழக்கறிஞராக இருந்து வந்தார். எம்.ஜி.ஆருடனும் கலைஞருடனும் ஆரம்பத்திலிருந்தே நட்பாக இருந்தவர் கமல். இப்படி அரசியல் தொடர்புகள் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு. அதைத் தாண்டி மக்களை நேரடியாக சந்தித்த தருணங்கள் பல. ஒரு இளைஞனாக இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டதை அடிக்கடி நினைவு கூர்ந்திருக்கிறார் கமல்.
தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி அதன் மூலம் இரத்த தானம், உடல்தானம், சமூக நலம், போன்ற பொது காரியங்களில் ஈடுபட வைத்தார். இதில் முதல் ஆளாக தானே உடல் தானம் செய்தும் காட்டினார். இப்படி பொதுவாழ்வில் அவரது தொடர்பு அவ்வப்போது இருந்தே வந்திருக்கிறது. மக்களை நேரடியாக சந்தித்த தருணங்கள் இருந்திருக்கின்றன. இதற்கெல்லாம் பிறகு இப்பொழுது அரசியலில் நேரடியாக இறங்கிவிட்டார்.
பாபர் மசூதி இடிப்பிற்கு எதிர்ப்பு
1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து மத நல்லிணக்கம் சிதைவதைப் பற்றிய தன் கவலையைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து செயல்பட்டார்.
காவேரி நதிநீர் பங்கீடு பிரச்சனை
இன்றுவரை முழுமையாக முடியாத பிரச்சனை காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை. இதற்கு அனைத்து நேரங்களிலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாகவும், மாட்டுக்கறிக்கான தடை உத்தரவை எதிர்த்தும் குரல் கொடுத்ததில் முதலாக இருந்தார்.
விருமாண்டி படத்தின்போது முதலில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 'சண்டியர்' என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர் படத்தின் பெயரை 'விருமாண்டி' என மாற்றினார். அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டார். ஆனால் ஜெயலலிதா மறுத்துவிட்டார். பின்னர் சென்னை கேம்பகோலா மைதானத்தில் படப்பிடிப்பை நடத்தினார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து தனது செல்வாக்கை நிரூபிக்க விரும்பிய கமல், விருமாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் பொதுக்கூட்டம் போல நடத்தினார்.
அதன் பின் கமல்ஹாசன் படம் என்றாலே பிரச்சனை இல்லாமல் வாராது என்பது அனைவரின் மனதிலும் பதிந்துபோனது. விஸ்வரூபம் படத்தின்போது ஏற்பட்ட பிரச்சனைகளில் அது உச்சத்தை தொட்டது. அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகள் சூழ்ந்துகொண்டிருக்க, இதனால் வெறுத்துப்போன கமல் தான் "நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை" என கூறினார். அப்போதும் அவருக்கு மக்களின் ஆதரவு இருந்தது. அப்பொழுதும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுத்து காவல்துறை ஆற்றலை வீணடிக்க முடியாது என்று கூறினார் ஜெயலலிதா. கமலின் வாழ்க்கையில் எது மாறினாலும் கடைசிவரை கமலுக்கும், ஜெயலலிதாவிற்குமான பிரச்சனை ஓயவே இல்லை. புகழ்பெற்ற வளர்ப்புமகன் திருமணத்தின் பொழுது கூட, திருமண விழாவுக்கு சென்ற கமல், மணப்பெண்ணின் தாதாவான சிவாஜி கணேசனை சந்தித்துவிட்டு ஜெயலலிதாவை சந்திக்காமலேயே வந்தார். இப்படி, அவருக்கும் ஜெயலலிதாவுக்குமான உறவு ஜெயலலிதா மரணத்தின் பொழுது "சார்ந்தோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" தெரிவிக்கும் அளவுக்குதான் இருந்தது.
அரசியல் ஆர்வம் தொடர்பான முதல் அறிவிப்புக்கும் கட்சி தொடங்குவதற்குமான இடைவேளை மிகக் குறைவே. அவரின் சினிமா போட்டியாளரான ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட அவகாசம் மிக அதிகம். சிலரால் அவசர கோலம் என விமர்சிக்கப் படுகிறது கமலின் அரசியல் கோலம். சொல்லப் போனால் முதல் புள்ளியை இப்பொழுது வைத்திருக்கிறார், கோலத்தை பொறுத்திருந்து காண்போம்.