Skip to main content

விஜய் - விழுந்த இடங்கள், எழுந்த தடங்கள்...

Published on 22/06/2018 | Edited on 22/06/2018

'நாளைய தீர்ப்பி'ல் அறிமுகமாகி தனது தந்தையால் 'இளைய தளபதி' ஆக்கப்பட்டு தற்பொழுது ரசிகர்களால் 'தளபதி'யாக உயர்ந்து நிற்கிறார் விஜய்.

 

thalaiva vijay



இவரது தந்தை புகழ் பெற்ற, பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர்தான், அதனால் இவர் சினிமாவுக்குள் வந்தது மிக எளிதாகவும் இயல்பாகவும் நடந்துதான். ஆனால், அதன் பின்பு இவர் பெற்ற வெற்றிகளோ, இன்று அடைந்திருக்கும் புகழோ இவருக்கு எளிதாகவோ இயல்பாகவோ கிடைத்திடவில்லை. இவரது சினிமா பயணத்தில் வழியெங்கும் பலமுறை விழுந்திருக்கிறார், பின்பு ஆற்றலைத் திரட்டி எழுந்திருக்கிறார்.

 

 


இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக, பெரும்பாலும் சிறு வயது விஜயகாந்த்தாக நடித்த விஜய், கதாநாயகனாக அறிமுகமானது 1992இல் வெளிவந்த 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தில்தான். அறிமுகமானபோது இவரது தோற்றம், நடனம், நடிப்பு என அனைத்தும் விமர்சிக்கப்பட்டன, கேலி பேசப்பட்டன. சளைக்கவில்லை எஸ்.ஏ.சி. தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா என பல படங்களை தனது மகனை வைத்து இயக்கினார். இவற்றில் செந்தூரப்பாண்டி மட்டுமே ஓரளவு வெற்றியையும் பெற்று அனைவரும் பார்க்கும்படியும் இருந்தது. மற்ற படங்கள் அனைத்தும் கவர்ச்சி, அதீத மசாலாத்தனம் என விமர்சிக்கப்பட்ட படங்கள். அதிலும் 'ரசிகன்' திரைப்படம் கவர்ச்சி, ஆபாசம், மசாலா  கலவையில் உச்சமாக இருந்தது.

  naalaiya theerpu vijay



இதனால், அத்தனை படங்கள் நடித்தாலும் விஜய் என்னும் நடிகர் குடும்பங்களால், பெண்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நடிகராகவே அதுவரை இருந்தார். இத்தனை விமர்சனங்களிலிருந்தும் விஜயை மீட்கும் வண்ணம் 1996ஆம் வருடம் வெளியானது 'பூவே உனக்காக'. விக்ரமன் இயக்கிய அந்தப் படம்தான் அதன் பின்னர் பல ஆண்டுகள் விஜயைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக தமிழகத்தில் பலரும் நினைக்க வைத்த வெற்றித் திரைப்படம். திருமண வீடுகளெங்கும் 'ஆனந்தம் ஆனந்தம்', காதலர்கள் மனங்களெங்கும் 'மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்' என முழுமையாக மக்களிடம் விஜயைக் கொண்டு சேர்த்தது அந்தத் திரைப்படம். இதன் தொடர்ச்சியாக அமைந்தவைதான் பின்னர் வந்த காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற இந்த வகை வெற்றிப் படங்கள்.

 

 


அதன் பிறகு சில வெற்றிப்படங்கள் ஓரிரு தோல்விப் படங்கள் என சென்றது விஜயின் சினிமா பயணம். ஆனாலும் அப்பொழுது விஜயைப் பற்றி இருந்த பேச்சு, அவர் B, C சென்டர்களுக்கான நாயகன் என்பதே. இப்பொழுது தமிழ் சினிமா சந்தையில் இந்த A, B, C சென்டர் பிரிவுகள் குறைந்துவிட்டன. அப்பொழுதெல்லாம் அந்த வரையறை பலமாக இருந்தது. விஜய் ஸ்டைலான பாத்திரங்களுக்கு ஏற்றவரல்ல என்ற பார்வையே இருந்தது. அவரும் அதுபோல தனது உடைகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை, செலுத்தினாலும் ஏதோ ஒன்று குறைவது போன்றே இருக்கும். பிரஷாந்த் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது, திருடா திருடா, ஜீன்ஸ் என மணிரத்னம், ஷங்கர் நாயகனாக அவரும் இன்னொரு புறம் அழகான நாயகனாக அஜித்தும் பேசப்பட, விஜய்க்கு இது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த 'குஷி' அந்த பிம்பத்தை மாற்றியது. 'வாலி' என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற, வழக்கத்துக்கு மாறான படத்தை எடுத்திருந்த எஸ்.ஜே.சூர்யா, ஒரு வெகு வழக்கமான கதை, அதையும் படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு கொண்டு சென்ற 'குஷி' வாலியை மிஞ்சும் வெற்றியைப் பெற்றது. விஜயின் ஸ்டைலிஷ் தோற்றத்துக்கும் உடைகளுக்கும் துவக்கமாக அது அமைந்தது.

  vijay kushi



நல்ல வெற்றிகள், புகழ், மெல்ல பெருகிக்கொண்டிருந்த ரசிகர்கள் எண்ணிக்கை, என தொழில் வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருந்த அந்த சமயம், விஜயின் சொந்த வாழ்க்கை குறித்து சில செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அவர் காதலில் விழுந்ததாகவும் அதை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் அதனால் தற்கொலை முயற்சி அளவுக்கு சென்றதாகவும் அப்போது சில பத்திரிகைகளில் 'கிசுகிசு' வகை செய்திகள் வந்தன. ஆனால், எதுவும் பெரிதாக வெளிப்படையாகப் பேசப்படவில்லை. அதற்கு விஜய் தரப்பில் யாரும் பதிலும் சொல்லவில்லை, பதில் சொன்னது 1999ஆம் ஆண்டு நடந்த விஜய்-சங்கீதா திருமணம். லண்டனில் வாழ்ந்துவந்த இலங்கைத் தமிழரும் தன் ரசிகையுமான சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார் விஜய். இன்று வரை அவர்களது அன்பில் எந்தக் குறையுமின்றி செல்கிறது அவர்கள் உறவு.

 

ajith in vijay's wedding



காதல் படங்கள், குடும்பப் படங்கள், காமெடி படங்கள் என பல வெற்றிகளைக் கொடுத்த விஜய்க்கு அப்பொழுது வரை ஆக்ஷன் என்ற ஒன்று அமையவேயில்லை. தனது தந்தையின் இயக்கத்தில் அவர் நடித்த பல படங்கள் ஆக்ஷன் படங்களாக ஆக்க முயற்சிக்கப்பட்டவைதான். ஆனால் எதுவும் வெற்றி பெறவில்லை. விஜயின் பட போஸ்டர்களோ பாடல்களோ வெளிவரும்போதே அவை ஆக்ஷன் படம் போல  இருந்தால், 'படம் அவ்வளவுதான்' என்று மற்றவர்கள் பேசக்கூடிய அளவுக்கு இருந்தது விஜய் கிராஃப். ஆரம்ப கால அப்பாவின் படங்களும் அதற்குப் பின் அவ்வப்போது முயற்சித்த ஆக்ஷன் படங்களான நெஞ்சினிலே, பகவதி, தமிழன், புதியகீதை போன்ற படங்களும் தோல்வியை சந்தித்ததால், 'காதல், காமெடி, குடும்பம் தாண்டிய கதைகள் விஜய்க்கு செட் ஆகாது' என பேசப்பட்டது. இன்னொரு புறம் அவரது போட்டியாளராக இருந்த அஜித் அமர்க்களம், தீனா, சிட்டிசன் என ஆக்ஷனில் கலக்கிக் கொண்டிருந்தார்.

 

 


இந்த நிலையில் தோற்றம், உடை, பேச்சு, சூழல் ஏன் படத்தின் கலர் வரை அனைத்திலும் அதுவரை விஜய் நடித்த படங்களிலிருந்து மாறுபட்டு வந்தன 'திருமலை' பட போஸ்டர்கள். மெக்கானிக் ஷாப்பில் விஜய் உட்கார்ந்திருக்கும் படங்கள். இந்த முறை உண்மையாகவே மெக்கானிக் போல தோற்றமளித்தார் விஜய். ஆனாலும் 'இதெல்லாம் அவருக்கு செட் ஆகாது' என்றே நினைத்தனர் எதிர்தரப்பினர். வெளிவந்த திருமலை வெற்றி பெற்றது. அஜித்துக்கு 'ஆஞ்சநேயா', விக்ரம், சூர்யாவுக்கு 'பிதாமகன்' விஜய்க்கு 'திருமலை' என அப்பொழுது தமிழ் சினிமாவில் போட்டியில் இருந்த நால்வரின் படங்களும் வெளிவந்த தீபாவளி (2003) அது. விஜய் ரசிகர்களுக்கு வெற்றி தீபாவளி ஆனது. திருமலை தொடங்கி வைத்த ஆட்டம், கில்லி, திருப்பாச்சி, சிவகாசி என தொடர்ந்தது. இடையில் வெளிவந்த 'மதுர' இந்த வெற்றி வெளிச்சத்தில் சேர்ந்துகொண்டது. பின்னொரு காலகட்டத்தில் விஜய் ஒரே மாதிரியான மசாலா படங்களில் மட்டுமே நடிப்பவர் என்ற பேச்சு வந்தபொழுதும் ஒரு சிறிய பின்னடைவுக்குப் பிறகு நண்பன், துப்பாக்கி என வெரைட்டியாக வெற்றிகளைக் கொடுத்தார்.

  villu press meet



விஜய், தனிப்பட்ட முறையில் பேட்டிகளிலோ, மேடைகளிலோ அதிகமாகப் பேசாதவர். அமைதியானவர், ரிஸர்வ்ட் டைப் என்றே அறியப்பட்டவர். ஆனால், சூழ்நிலைகள் எப்பேர்பட்டவரையும் கட்டுப்பாட்டை இழக்கவைக்கும் அல்லவா? அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு என தொடர் தோல்விகள் நேர்ந்த காலகட்டம். 'வில்லு' படம் வெளியான பின் நிகழ்ந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. அதில் 'வில்லு' தோல்வி குறித்து விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த விஜய், அங்கிருந்தவர்கள் சிலர் சத்தம் ஏற்படுத்த, சட்டென கோபமுற்று, "ஏய்...சைலன்ஸ்...பேசிக்கிட்டிருக்கேன்ல.." என்று சத்தமாக சொல்ல, அந்த வீடியோ பரவி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சமூக ஊடகங்கள், மீம்ஸ்கள் பரவலாக இல்லாத அந்த காலத்திலேயே அந்த வீடியோ பரவி விஜய்க்கு எதிர்மறையாக அமைந்தது.

 

vijay with stalin

 

sac jeyalalitha



விஜயின் ரசிகர்மன்றங்கள் 'விஜய் மக்கள் இயக்க'மானதும் அதே 2009ஆம் ஆண்டுதான். அதுகுறித்த ஆரம்பகட்ட கூட்டங்களும் விஜய்க்கு சரியாக அமையவில்லையென்றே கூற வேண்டும். ஒரு முறை விழுப்புரத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட விஜய், ஏதோ ஒரு அவசரத்தில் ரசிகர்களை சந்திப்பதைத் தவிர்த்து விறு விறுவென தன் காரை நோக்கி நடந்தார். அந்த சம்பவம் 'விழுப்புரம் ரன்' என கேம் தயாரிக்கும் அளவுக்கு சேட்டைக்கார இளைஞர்களுக்கு பயன்பட்டது. தூத்துக்குடியில் நடந்த கூட்டத்திலும் விஜய், தான் நினைத்ததை பேச முடியாமல், கட்டுப்படாத ரசிகர்களின் அன்புக்கிணங்கி 'வேலாயுதம்' பட பாடலைப் பாடிவிட்டு இறங்கினார். இப்படி ஆரம்பத்தில் சில தருணங்களில் சொதப்பிய விஜயின் மேடை பேச்சுகள், 2014 விஜய் அவார்ட்ஸ் மேடையில் மின்னியது. கிரீடம் எவ்வளவு கனமாக இருந்தாலும் அதைத் தாங்கும் தலை கனமாக இருக்கக் கூடாது என்ற அவரது பேச்சில் 'தலைவா' பட அனுபவம் தந்த பக்குவமும் எதிர்கால திட்டங்கள் கோரிய தயாரிப்பும் தெரிந்தது. அதன் பிறகு அனைத்து மேடைகளிலும் அது தொடர்கிறது.

 

vijay stamp



விஜயின் அரசியல் தொடர்புகளும் குறிப்பிடத்தக்கவை. ஆரம்பத்தில் திமுக குடும்பத்துடன் நெருக்கம், 2006ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்ட அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது, ராகுல் காந்தியை சந்தித்தது, 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்தது, 2014 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்தித்தது என அரசியலோடு அவ்வப்போது தொடர்பிலேயேதான் இருந்தார் விஜய். அதே அரசியல் இவருக்கு சில சங்கடங்களையும் தந்திருக்கிறது.

 

 


தான் ஆதரித்து, அணிலாய் உதவிய அதிமுக அரசும் ஜெயலலிதாவும் தன் 'தலைவா' பட்டத்தை, இல்லை, படத்தை வெளிவர விடாமல் தடுப்பார்கள் என எண்ணவில்லை விஜய். அது குறித்து ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு செல்ல முயன்றும் தோல்வியே. அதுபோல 'மெர்சல்' வெளியானபோது பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசையும், அதைத் தொடர்ந்து ஹெச்.ராஜாவும் காட்டிய எதிர்ப்பைக் கூட இவர் எதிர்பார்த்திருப்பார், அந்த எதிர்ப்பே இவ்வளவு பெரிய கவனத்தையும் வெற்றியையும் பெற்றுத் தருமென இவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். 'ஜோஸப் விஜய்' என்று குறிப்பிட்ட ஹெச்.ராஜாவுக்கு பதிலடியாக அதே பெயர் கொண்ட லெட்டர் பேடில், விஜய் அறிக்கை விட்ட போது ரசிகர்களில் பலர் கொண்டாடினர், சிலர் குழப்பம் அடைந்தனர்.

இவைதான் விஜய் விழுந்த இடங்களும் மீண்டும் எழுந்து இன்னும் வேகமாக பயணித்த தடங்களும். இன்று தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒருவராக உயர்ந்துவிட்டார் இந்தத் தளபதி. சினிமாவில் இவர் தளபதி, அரசியலில் ஏற்கனவே ஒரு தளபதி இருக்கிறார். இவரும் அரசியலுக்கு வந்துவிட்டால்? பொறுத்திருந்து பார்ப்போம்.            

                              

                                                                

 

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை'- மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 'Treatment given to Ajith' - manager Suresh Chandra explains

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.