Skip to main content

முகவை எனும் பெயர் வந்ததன் காரணம்..?

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

Historical name of Ramanathapuram

 

முற்காலத்தில் ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிகளவில் நெல் விளையும் இடமாக இருந்துள்ளன. அச்சமயத்தில் நெல் கதிரடிக்கும் பொட்டல் பகுதியாக இருந்ததால் ராமநாதபுரத்திற்கு முகவை என்ற பெயர் வழங்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு தெரிவித்துள்ளார்.

 

வைகை முகத்துவாரம்
 

வைகையின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளதால் ராமநாதபுரத்திற்கு முகவை எனப் பெயர் ஏற்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் வைகை, ராமநாதபுரத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் ஓடுகிறது. இதன் முகத்துவாரத்தில் அழகன்குளமும் ஆற்றங்கரையும்தான் அமைந்திருக்கின்றன. ராமேஸ்வரத்திற்குச் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்திருப்பதால் முகவை எனப் பெயர் வந்ததாகச் சொல்வதும் பொருத்தமானதாக இல்லை.

 

இந்நிலையில், இதுகுறித்து ஆய்வுசெய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, முகவை என்ற பெயர் ஏற்பட்டது பற்றிக் கூறியதாவது,
 

சங்க இலக்கியங்களில் முகவை
 

புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முகவை என்ற சொல்லுக்கு அள்ளுதல், நெற்பொலி உள்ளிட்ட பல பொருளை பேரகரமுதலி குறிப்பிடுகிறது. மேலும், சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் முகவைப்பாட்டு, நெல் கதிரடிக்கும் இடத்தில் பாடப்படும் பாட்டு ஆகும். எனவே முகவை என்ற சொல்லை நெல்லுடன் தொடர்புடையதாகவும், நெல் கதிரடிக்கும் இடத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். 

 

நெல்லைக் குறிக்கும் ஊர்கள்
 

ராமநாதபுரம் எனும் ஊர் உருவாவதற்கு முன்பு இப்பகுதி நெல் கதிரடிக்கும் பொட்டலாக இருந்துள்ளதால் முகவை என பெயர் ஏற்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் பல உள்ளன. சமீபகாலம்வரை பெரிய கண்மாய் மூலம் இப்பகுதிகளில் அதிக அளவில் நெல் விளைச்சல் இருந்துள்ளது. ராமநாதபுரத்தைச் சுற்றிலும் நெல்லை நினைவுபடுத்தும் சூரன்கோட்டை, சக்கரக்கோட்டை, மேலக்கோட்டை, களத்தாவூர், அச்சுந்தன்வயல், நொச்சிவயல் முதலிய ஊர்கள் உள்ளன. 

 

இதில் மூன்று ஊர்கள் கோட்டை என முடிகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கோட்டை என முடியும் ஊர்களில் எங்கும் கற்கோட்டைகள் இல்லை. அவை பாரம்பரிய நெல்லின் பெயரில் அமைந்த நெல் விளையும் கோட்டைகளாக இருந்துள்ளன. எனவே சூரன்கோட்டை, சக்கரக்கோட்டை, மேலக்கோட்டை ஆகிய ஊர்கள் நெல்லால்தான் இப்பெயர் பெற்றுள்ளன என அறிய முடிகிறது. அதேபோல் களத்தாவூர், அச்சுந்தன்வயல், நொச்சிவயல் ஆகிய ஊர்களும் நெல்லைக் குறிக்கும் பெயரில்தான் அமைந்துள்ளன. 

 

Historical name of Ramanathapuram
                             சேதுபதி மன்னர்களின் கோட்டை (கோப்புப் படம்)

 

அக்காலகட்டத்தில் சுற்றியுள்ள இவ்வூர்களில் விளைந்த நெல்லை, கதிரடிக்கும் மையமாக இருந்த பொட்டல் பகுதி (தற்போதைய ராமநாதபுரம் நகரம்) முகவை என அழைக்கப்பட்டிருக்கலாம். மேலும், கிழவன் சேதுபதி காலத்தில் இப்பகுதியில் தோண்டப்பட்ட ஊருணி முகவை, ஊருணி என்றே அழைக்கப்படுகிறது. கி.பி.1711ஆம் ஆண்டு அவர் வழங்கிய செப்பேட்டில் ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் இருக்குமிடமும் முகவை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரம்

 

கி.பி.1601இல் சேதுபதிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ராமநாதபுரம் என்னும் ஊர் இருந்துள்ளது. கி.பி.1607இல் திருமலை உடையான் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில் ராமநாதபுரம் எனும் ஊர் முதன்முதலில் குறிப்பிடப்படுகிறது. அப்போது சேதுபதிகளின் தலைநகரம் போகலூர் என்பது கவனிக்கத்தக்கது.

 

Historical name of Ramanathapuram
                                               முகவை ஊரணி (கோப்புப் படம்)

 

ராமநாதபுரம் நகரம் உருவாவதற்கு முன், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில், களத்தாவூர், அச்சுந்தன்வயல், சூரன்கோட்டை ஆகிய ஊர்கள் சிறப்புற்று இருந்துள்ளன. எனவே சேதுபதிகளுக்கு முன்பே விஜயநகர, நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், முகவைப் பகுதியில், ஊர் உருவாக்கப்பட்டபோது ராமநாதபுரம் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலும் ராமநாதபுரம் எனும் ஒரு ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.