நமக்கு ஹிரோசிமா, நாகசாகியின் அழிவுகளைப்பற்றி தெரியும் ஒரு நிமிட முடிவில் நடந்த ஓரு நூற்றாண்டு துயரம், இரண்டாம் உலகப்போரின் போது (1945) இதேநாளில்தான் ஹிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது. குண்டு வீசப்பட்ட 2-3 மாதங்களிலேயே ஹிரோசிமாவில் 90,000-166,000 பேரும், நாகசாகியில் 60,000-80,000 பேரும் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பாதிப்பேர் முதல்நாளிலேயே இறந்தவர்கள். சரி இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா... அந்த இரு அணுகுண்டுகளின் பெயர் அதுதான்...
லிட்டில் பாய் (Little boy) என்ற அணுகுண்டு ஹிரோசிமாவில் 1945 ஆகஸ்ட் 6ல் வீசப்பட்டது. ஃபேட் மேன் (Fat man) என்ற அணுகுண்டு ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் வீசப்பட்டது. இந்த இரு அணுகுண்டுகளும் நேச நாடுகளால் வீசப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது அதில், இந்த இரு அணுகுண்டு வீச்சுகளால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும், இதன்மூலம் அப்போது இறந்ததைவிட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் அமெரிக்கா பார்த்துக் கொண்டது எனக் குறிப்பிட்டிருந்தது. இத்தனை கொலைகளை நியாயப்படுத்தி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை இன்றுவரை சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.