நல்லவேளை அரசு கேபிள் டிவி வந்தது, இல்லையென்றால் என்ன ஆவது, எவ்வளவு காசு இருந்துச்சு. இப்போ 120 ரூபாவோட முடுஞ்சது. ஏழைகளுக்கேத்த திட்டம் இப்படி நாம் எவ்வளவோ பேசிருப்போம். ஆனால் உண்மையில் இந்த திட்டம் நல்லதல்ல.
என்ன ஊரே இந்த திட்டம் நன்மை என்று சொல்கிறது. ஆனால் நீங்கள் மாற்றி சொல்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்... அதற்கு காரணம் உண்டு. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட வெர்னாகுலர் தடைச்சட்டம், இந்திராகாந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி போன்றவை பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குவதாகவே இருந்தது. தற்போதும் அந்த ஒரு நிலைமையைதான் இந்த அரசு கேபிள் டிவி திட்டமும் செய்கிறது. இது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் வேலை.
ஒருபக்கம் இவர்கள் அதில் ஊழல் செய்வார்கள் என்றாலும் அதைத்தாண்டிய முக்கிய பிரச்சனை ஒன்று உள்ளது. கேபிள் டிவியின் மொத்த உரிமைகளையும் தனியாரிடம் இருந்து அரசு பெற்றுக்கொண்டது. இது தனியாருக்கு மட்டும் நஷ்டமில்லை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த அரசியல் அறிவு பெறவேண்டும் என நினைப்பவர்களுக்கும்தான். சில விஷயங்கள் அரசிடம்தான் இருக்கவேண்டும் அதற்கு எடுத்துக்காட்டு கல்வி, ரயில்வே, அணுஉலை போன்றவை. சில விஷயங்கள் தனியாரிடம்தான் இருக்கவேண்டும் அதற்கு எடுத்துக்காட்டு செய்தித்தாள், செய்தி சேனல்கள் போன்றவை. தனியாரிடம் இருந்தால்தான் ஊடகங்கள் உண்மையைக் கூறும் இல்லையென்றால் அனைத்து சேனல்கள்களும் பொதிகை ஆகிவிடும். இதற்கும், அதற்கும் என்ன சம்மந்தம்?
எந்த ஒரு நாட்டில் ஊடகங்களும், பத்திரிகைகளும் சுதந்திரமாக செயல்படுகிறதோ அந்த நாடே சிறந்த நாடாக இருக்கும் என்று ஒரு கூற்று உண்டு. செய்தி சேனல்கள் உட்பட அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கும் பெரும்பாலான வருமானம் என்பது கேபிள் டிவி, டி.டி.ஹெச். வழியாகத்தான் கிடைக்கிறது. தற்போது அரசு கேபிள் டிவி மூலம் ஒட்டுமொத்த கேபிள் டிவி பயனாளர்களும், கணிசமான டிடிஹெச் பயனாளர்களும் இந்த அரசு கேபிள் டிவி திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். இதன்மூலம் ஒரு மோனோபோலியை (monopoly) அரசு பெறும். இதனால் அனைத்து சேனல்களும் அவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வரும். அரசு சொல்படிதான் செயல்படவேண்டும் என்ற நெருக்கடி ஏற்படும். அது அப்படியே கேட்பாரற்று தொடர்ந்தால் அனைத்து சேனல்களும் பொதிகை சேனல் ஆகிவிடும் (பொதிகை அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் ஒரு சேனல். ஆளும் அரசிற்கு எதிராக செயல்படாத ஒரு சேனல்). அரசின் கட்டளைகளை ஏற்க மறுக்கும் சேனல்கள் கேபிள் டிவியில் இடம்பெறாது.
இது நல்ல கற்பனையாக இருக்கிறதே என்பவர்களுக்கு... கடந்த நாட்களில் ஸ்டெர்லைட் போராட்டத்தை முழுமையாக காட்டாமல் சில சேனல்கள் இருந்தன. இன்னும் சில விஷயங்களும் அதைத்தொடர்ந்து நடந்தன. இவையனைத்திற்கும் காரணம் இந்த திட்டம்தான். இது முற்றிலும் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குவதாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.