
எலியாட் ஆல்டெர்சன் என்ற பெயர் முன்பே நமக்கு அறிமுகமானதுதான். இந்த பெயருக்கு பின் இருக்கும் ஹேக்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், உங்கள் 13 அடி பாதுகாப்பு அமைப்பு சுவற்றின் மீது உங்களுக்கு மிக அதிக அளவில் நம்பிக்கை இருந்தால் உங்களின் ஆதார் எண்ணை வெளியிடுங்கள் என சவால் விட்டிருந்தார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, தனது ஆதார் எண்ணையும் சேர்த்து பதிவிட்டார். மேலும் அவர், “நான் இப்போது உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். முடிந்தால் என் ஆதார் எண்ணை வைத்து எனக்கு ஏதாவது தீங்கு விளைவிக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் காட்டுங்கள் பார்ப்போம்” என பதில் கூறினார்.
ஆதார் எண் வெளியான சில மணி நேரத்திலேயே எலியாட் ஆல்டர்சன் என்ற பெயர் கொண்ட அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆர்.எஸ்.சர்மாவின் முகவரி, தொலைபேசி எண், பான் எண், பிறந்தநாள், மற்றும் அவருடைய வாட்ஸ் அப் புகைப்படம் உட்பட அனைத்து தகவல்களையும் வரிசையாக பதிவிட்டார். அத்துடன் உங்கள் ஆதார் எண் எந்த வங்கிக் கணக்குடனும் லிங் செய்யப்படவில்லை என்றும் ட்வீட் போட்டுள்ளார். இதற்கு அந்த தொலைபேசி எண் என்னுடையதல்ல என டிராய் தலைவர் மறுத்துகூற, அது உங்களுடைய உதவியாளருடையது என அந்த மர்மநபரிடமிருந்து பதில் ட்வீட் வந்தது. மேலும் அவர் “நான் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். பொதுவாக சமூக வலைத்தளங்களில் ஆதார் எண்ணை பதிவிடுவது நல்ல முறை அல்ல என்பதை நீங்கள் உணர்வீர்கள் என நான் நம்புகிறேன், உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுங்கள்” எனவும் கூறியுள்ளார். இது குறித்து டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா இன்னும் பதிலளிக்கவில்லை. மேலும் அவர், பிரதமர் நரேந்திர மோடி உங்கள் ஆதார் எண்ணை பதிவிடமுடியுமா? (உங்களிடம் இருந்தால்) எனக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர், “நான் ஆதாருக்கு எதிரானவன் கிடையாது. ஆதாரை யாரும் எதுவும் செய்யமுடியாது, அது மிகமிக பாதுகாப்பானது என்று கூறுபவர்களுக்குதான் நான் எதிரானவன்.” எனவும் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கரான ராபர்ட் பாப்டிசைட் என்பவர்தான் எலியட் ஆண்டர்சன் என்ற பெயரில் ட்விட்டரில் இந்தத் தகவல்களை வெளியிட்டதாக அப்போது கூறப்பட்டது.
தற்போது இவர்தான் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டாக் குறித்து பதிவிட்டுள்ளார். கடந்த 6ம்தேதி நான் கோ பேக் சேடிஸ்ட் மோடி என்ற ஹேஷ்டேக்கை கவனிக்க தொடங்கிவிட்டேன் என பதிவிட்டார். அதைத்தொடர்ந்து, ட்வீட்களின் வருகை அதிகமாக இருந்தபோது நான் கவனித்தேன், ஒரு நிமிடத்திற்கு 250 ட்வீட்களும், ஒரு மணிநேரத்திற்கு 12000 ட்வீட்களும் வருகின்றன. இதில் 41174 ட்வீட்கள் #gobacksadistmodi என்ற ஹேஷ்டேக்கிலும், 16818 ட்வீட்கள் #gobackmodi என்ற ஹேஷ்டேக்கிலும், 1631 #gobackmodii என்ற ஹேஷ்டெக்கிலும் வந்துள்ளது என அதன் வரிசைகளை குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின் மொத்தம் வந்த 68544 ட்வீட்களில் 30% பேர் மட்டுமே லொகேஷனை ஆன் செய்து வைத்திருந்தனர். அதாவது 20629 பேரின் லொகேஷன்களை வைத்து பார்க்கும்போது, பெரும்பான்மையானவை தமிழ்நாடு மற்றும் சென்னையிலிருந்தே வந்துள்ளன. அதற்கடுத்து அதிக ட்வீட்கள் முறையே பெங்களூரிலிருந்தும், டெல்லியிலிருந்தும் வந்துள்ளன. மேலும் இந்தியா முழுமைக்குமிருந்தும் கிட்டதட்ட 2590 ட்வீட்கள் வந்துள்ளன. இதற்கடுத்து அவர் எந்த கணக்கிலிருந்து அதிக ட்வீட்கள் வந்தன என்பது விஷயங்களை வெளியிட்டார்.

கடைசியாக அவர் கூறியது இதுதான்... மன்னிக்கவும், உங்கள் கனவுகளை கலைத்துவிட்டேன். இந்த ஹேஷ்டேக்குகள் பின்னால் பாகிஸ்தான் இருப்பதற்கான எந்த தடயமும் இல்லை. நான் இதோடு முடித்துக்கொள்கிறேன்.
ஆனால் இந்த தரவுகளை வைத்து பார்க்கும்போது அந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் தமிழ்நாட்டிலிருந்துதான் அதிகமாக பரவியுள்ளது. இது மக்கள் கொந்தளிப்பின் வெளிப்பாடு. தமிழ்நாடு பிரச்சனைகளை சந்தித்தபோதெல்லாம் வராதவர், தேர்தல் நேரங்களில் மட்டும் வரும்போது கோ பேக் மோடி உலக ட்ரெண்ட் ஆனாலும் அது ஆச்சர்யம் இல்லை.