Skip to main content

அம்பானியை ‘ஓவர் டேக்’ செய்யும் அதானி... மோடி ஆட்சியில் அசுர வளர்ச்சியின் பின்னணி!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

ambani adani

 

“எதிர்காலம் குறித்த குறுகிய திட்டம் உடைய, பணம் சம்பாதிக்க விரும்பும் அரசியல்வாதிகளால் நான் ஈர்க்கப்படுவதில்லை. எதிர்காலம் குறித்த சரியான திட்டம் உள்ளவர்களைத்தான் நான் விரும்புகிறேன்” என்று தனது வளர்ச்சிக்கான பாதை குறித்த தெளிவான பார்வையை முன்வைத்தவர் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி. அண்மையில் தொழில் வளர்ச்சி குறித்து டை குளோபல் கூட்டத்தில் பேசும்போது, “புதுப்பிக்கத்தக்க மின்சார தயாரிப்பின் வளர்ச்சி காரணமாக, மின்சாரத்தின் விலை ஓரளவு வீழ்ச்சியடையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா மிகக் குறைந்த விலையில் ஆற்றலை உற்பத்தி செய்யும்” என்று தனது தொலைநோக்கு பார்வையை அவருடைய சில எ.கா மூலம் எடுத்துக்கூறினார். கடந்த ஒருசில ஆண்டுகளில் மட்டும் தான் ஈடுபடும் தொழில்களில் பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ளார் அதானி. கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் ஏறுமுகம்தான். ஆசியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் முகேஷ் அம்பானியின் அந்த ரேங்கை வெகு விரைவில் தட்டிச் செல்வார் என்று பலரால் எதிர்பார்க்கப்படுபவர் கவுதம் அதானி.

 

கவுதம் அதானி, நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து இவரது பெயர் தினசரி ஒரு முறையாவது பலரால் பேசப்பட்டு வருகிறது. பிரதமரின் திட்டங்களெல்லாம் அதானிக்கும் அம்பானிக்கும் வேண்டுமானால் உதவலாமே தவிர, பாமர மக்களுக்கு உதவாது போன்ற வசனங்கள் யாராவது பேசக் கேட்டிருப்போம். முகேஷ் அம்பானி, நரேந்திர மோடி, கவுதம் அதானி, இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு அது குஜராத்தி என்பதுதான். அம்பானியையும் தாண்டிய நட்பு அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோதுதான், அதானியின் தொழில்கள் விரிவடையத் தொடங்கின. 

 

அதானியின் அந்த திடீர் வளர்ச்சி குறித்து ஃபோர்ப்ஸ் எழுதிய ஒரு கட்டுரையில், மோடியின் ஆட்சியில் கட்ச் வளைகுடா பகுதியில் மட்டும் அதானி குழுமத்துக்கு 7,350 ஹெக்டேர் நிலம், ஒரு சதுர மீட்டர் ஒரு ரூபாய் என்ற தொகைக்கு 30 வருஷக் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அப்படி அளிக்கப்பட்ட நிலத்தை சுமார் 15 மடங்கு அதிக தொகைக்கு ‘இந்தியன் ஆயில்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதானி குழுமம் உள்குத்தகைக்கு விட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. மோடியின் குஜராத் அரசுக்கும் அவருக்கும் தொழில்முறை உறவு இருக்கிறது என்று பல விமர்சனங்கள் அப்போதிலிருந்தே இவர்கள் மீது வைக்கப்பட்டு வருகின்றன. குஜராத் பாஜகவுக்கு அதானிதான் பல ஆண்டுகள் ஆதரவு கொடுத்ததாகவும் விமர்சனங்கள் உண்டு.

 

கரோனாவால் இந்தியக் குடிமகன்கள் ஸ்தம்பித்திருந்த அதே வேளையில் அதானி குழுமத்தின் வளர்ச்சியில் எந்த தடையும் இன்றி மேல்நோக்கி சென்றுகொண்டேதான் இருந்தது. இதுமட்டுமல்லாமல் தனது இன்வெஸ்டர்ஸ்களை தக்க வைத்துக்கொண்டு, புது துறைகளிலும் காலெடுத்து வைத்துள்ளது அதானி குழுமம். நிலக்கரி சுரங்கம், எரிவாயு, துறைமுகங்கள் உள்ளிட்ட அவருடைய நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட ஷேர்கள் வளர்ச்சியடைந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்த வருடத்தில் மட்டும் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் ஆறு மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. அதில் 6 பில்லியனுக்கு சோலார் பவர் டீல் ஒன்றையும் முடித்திருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் அதானியின் நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக உருவாகுவதற்கு அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

மத்திய அரசின் புதிய கொள்கைகளுடன் இக்குழுமம் மேற்கொள்ளும் திட்டங்களும் ஒத்துப்போவதால், அதானி ஸ்டாக்ஸ் எந்த பாதிப்பும் இல்லாமல் வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருகிறது. இதனால் அடுத்த ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று சில பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர். இந்தியாவின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் முகேஷ் அம்பானி இடம்பிடித்திருக்கிறார். அவரை தொடர்ந்து கவுதம் அம்பானி 32.6 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த வருடத்தில் மட்டுமே ஸ்டாக்கில் 21.1 பில்லியன் டாலர் வளர்ச்சியடைந்துள்ளார் கவுதம் அதானி. இது அம்பானியின் லாபத்தைவிட அதிகம்.

 

கல்லூரி ட்ராப் அவுட்டான கவுதம் அதானி, 1980களில் வைர தொழிலில் சம்பாதிக்கலாம் என்கிற எண்ணத்தில் குஜராத்திலிருந்து மும்பை சென்றுள்ளார்.  அது சரிவரவில்லை என்றவுடன் ஊருக்கே திரும்பிய அதானி, தனது அண்ணனின் பிளாஸ்டிக் இம்போர்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். 1988ஆம் ஆண்டு அதானி எண்டர்பிரைஸஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அடுத்த பத்து வருடங்களில், அரபிக் கடல் பகுதியில் உள்ள முந்த்ராவில் தனி துறைமுகத்தையே கட்டமைத்தார். தற்போது இந்தியாவின் பெரிய தனியார் துறைமுகங்களைக் கொண்ட நிறுவனமாகியுள்ளது அதானி குழுமம். இக்குழுமம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையிலும் காலெடுத்து வைத்தது. தற்போது நிலக்கரி சுரங்கத்துறையில் பெரும் புள்ளியாகியுள்ளது. இந்த தொழில் நீண்டு, வெளிநாடுகள் வரை சென்றுள்ளது. 

 

அரசாங்கம் மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கும் துறைகளில், திடீரென நுழைகிறது அதானி குழுமம். அதேபோல அந்த துறைகளில் மிகவும் குறைவான போட்டிகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டுதான் களமிறங்குகிறது. இதுவே அதன் வழக்கமாக உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லப்போகிறேன் என்று சொன்னபோதுதான் கவுதம் அதானியின் தொழில்கள் பெரிய அளவில் பன்முகத்தன்மையுடையவையாக மாறின. 

 

பாதுகாப்புத் துறை சார்ந்த தயாரிப்புகளை இந்திய நிறுவனங்களே தயாரிக்க வேண்டும் என்றபோது அதானி பாதுகாப்பு கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். மூன்று வருடங்கள் கழித்து, எரிவாயு துறையை அரசு ஊக்குவித்ததைத் தொடர்ந்து, எரிவாயுவை சில்லரை விற்பனை செய்யும் பெரிய தனியார் நிறுவனமான தன்னை தகவமைத்துக் கொண்டது இந்நிறுவனம். 2019ஆம் ஆண்டு விமான நிலையங்களைக் குத்தகைக்கு எடுப்பதில் கவனம் செலுத்தினார். தற்போது தரவு ஸ்டோரேஜ், நிதி நிறுவனங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் அதானி. பிரதமர் மோடியின் புதிய இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஆத்மன் நிர்பார் உள்ளிட்ட ஸ்லோகங்களுடன் அதானியின் இந்த திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த சில விஷயங்கள் தெளிவாகலாம். 

 

இந்த குழுமத்திற்கு 17 பில்லியன் டாலர் கடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், இக்குழுமம் வளர்ச்சியடைந்துகொண்டேதான் இருக்கிறது. வளர்ச்சிப் பாதையில் இருப்பதால் வெளிநாட்டு வங்கிகளும் இவருக்கு கடன் கொடுத்து உதவத் தயாராக இருக்கின்றன. இவருடைய வளர்ச்சியைக் கவனிப்பவர்கள் வெகு விரைவில் இவர் அம்பானியின் சொத்து மதிப்பை எளிதில் தாண்டிவிடுவார் என்றும் சொல்கிறார்கள். அம்பானியுடன் இவர் தொடர்ந்து ஒப்பிடப்பட்டாலும், இருவரது தொழில் களங்களும் முற்றிலும் வேறானதே. தொலைத்தொடர்பு, சூப்பர் மார்க்கெட்கள், பெட்ரோலியம் என வணிகம் சார்ந்த களத்தில் ரிலையன்ஸ் பயணித்து லாபமீட்டும் நேரத்தில், துறைமுகம், ரயில்வேத்துறை, விமான நிலையங்கள், எரிசக்தி என அடிப்படை சேவை சார்ந்த களத்தில் பயணித்து லாபமீட்டி வருகிறது அதானி குழுமம். அரசாங்கத்தின் புதிய கொள்கைகளும் இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்காற்றுவதாகக் கூறப்படும் நிலையில், அரசு கொள்கைகளால் இந்த வளர்ச்சி ஏற்பட்டதா அல்லது இந்த வளர்ச்சிக்காக அரசாங்க கொள்கைகள் ஏற்படுத்தப்பட்டனவா என்பது சார்ந்தோருக்கே வெளிச்சம்.