Skip to main content

மெர்சலைத் தொடர்ந்து பத்மாவதி?

Published on 20/11/2017 | Edited on 20/11/2017
மெர்சலைத் தொடர்ந்து பத்மாவதி? 

தீபிகா மூக்கு... இயக்குனருக்கு அறை... 
மல்லுக்கட்டும் அமைப்புகள்!





சென்ற  தீபாவளிக்கு விஜய் நடித்து   வெளியான  'மெர்சல்' படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப்  பெற்றது. இதற்கு படம் நன்றாக இருந்தது என்பது மட்டும் காரணமல்ல.  படம் வெளியான பின்னர் பாஜக  மாநில தலைவர் தமிழிசை மற்றும் தேசிய செயலாளர் எச். ராஜா, 'படத்தில் பேசப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி, பணமதிப்புநீக்கம் குறித்த வசனங்களை  நீக்க  வேண்டும், இல்லையெனில் தடை செய்ய வேண்டும்' என்று தங்களை ஒரு  தணிக்கைக்  குழுவாக எண்ணி  பேசிக்கொண்டிருந்தனர்.  கடைசியில் வழக்கமான தமிழ் படமான 'மெர்சல்' இந்திய அளவில்  ட்ரெண்டாகி வசூலில் சக்கைப் போடு போட்டது. இதற்கு முக்கிய காரணமாக தமிழக பாஜக எழுப்பிய எதிர்ப்பு இருந்தது. இப்பொழுது,  இதேபோன்று வட இந்தியாவிலும் 'பத்மாவதி' படத்திற்கு அதன் படப்பிடிப்பின் போது இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படம் டிசம்பர் 1 வெளியாவதாக இருந்தது. ட்ரைலரை பார்த்த பின்னர் இது அடுத்த பாகுபலியாக இருக்கும் என்று பலரால் சொல்லப்பட்ட நிலையில், பாஜகவும்   இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 





இந்தியாவில் படங்களுக்கு எதிர்ப்பு, தடை என்பது புதிதல்ல. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்தான் புதிது புதிதாக இருக்கும். இந்த பத்மாவதியின் வரலாறு தான் என்ன? டெல்லி அரசன்  அலாவுதீன்  கில்ஜி வடஇந்தியாவை தன் வசம் வைத்து இருந்த நேரம், சித்தூர் ராணி பத்மினியின்(பத்மாவதி என்றும் அழைக்கப்பெற்றார்) அழகின் புகழ் வடஇந்தியா முழுவதும் பரவி இருந்தது. பத்மினியை அடைய பல  வகைகளிலும் முயற்சி செய்து, ஒரு வழியாக அவளின் அழகைக் காண்கிறார்.  ராஜபுத்திரர்களிடம் போர் தொடுத்தார் கில்ஜி. பெரும்படை கொண்ட வீரர்களான ராஜபுத்திரர்களை வெல்வது எளிதாக இல்லை. இருந்தும் தொடர்ந்த போரில், ஒரு கட்டத்தில் தோல்வியை நெருங்கிய   ராஜபுத்திரர்கள்,  எதிர்த்துப்  போரிட முடியாத சூழ்நிலையில்  தங்கள் வாளாலேயே  தங்களை வெட்டி இறந்தனர். அந்தப்புரத்துப்  பெண்கள் எல்லாம் தீயிட்டு குதித்து இறந்தனர். ஆண்கள் இறந்த பின் உள்ளே வந்த கில்ஜி பெரிய தீமூட்டத்தைப்  பார்த்தான். அப்போது ராணி பத்மினி 'இதுதான் ராஜபுத்திர பெண்கள் உனக்கு தரும் வரவேற்பு' என்று தீயில் குதித்துவிடுவாள். இதுதான் வடஇந்தியாவில் காலகாலமாக சொல்லப்படும் கதை. இதற்கும் பெரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை.
 
இந்த வரலாற்றை இப்படத்தின் இயக்குனர் 'சஞ்சய் லீலா பன்சாலி' மாற்றி எடுக்கிறார் என்று எதிர்ப்பாளர் தரப்பு சொல்கிறது. அதாவது நிஜத்தில் காதலர்களாக இருக்கும் தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் இப்படத்தில் பத்மினியாகவும், கில்ஜியாகவும் நடிக்கின்றனர், இவ்விருவருக்கும் காதல் காட்சிகள் அமைந்து இருப்பது போன்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எதிர்த்து வருகின்றனர்.  'இதனால் குஜராத் தேர்தலில் மக்கள் மனநிலை மாற வாய்ப்புள்ளது'  என்கிறது  பாஜக.   உத்திர பிரேதச முதல்வர் யோகி  'இப்படம் வெளியானால்  சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகும்' என்று நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.



லோகேந்திர சிங் கல்வி



படப்பிடிப்பு நடந்த அரங்கிலிருந்து, படம் தயாராகி வெளியீட்டு தேதி சொல்லிவிட்ட பிறகும்   இன்றுவரை பல எதிர்ப்புகளை சந்தித்துக்  கொண்டுதான் இருக்கிறது இப்படக்குழு. தீபிகாவை சூர்ப்பனகை  என்றும் அவரின் மூக்கை அறுக்க வேண்டும் என்று 'ஸ்ரீராஜபுத்திரகர்னி சேனா' அமைப்பின்  தலைவர்  லோகேந்திர சிங் கல்வி   கூறியுள்ளார். இந்த இயக்கத்தினர் ஏற்கனவே படத்தின்   இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை தாக்கினர், சட்டையைக் கிழித்தனர். சித்தூர் கோட்டையிலுள்ள பத்மினி மகாலில், 'கில்ஜி பத்மினியை இதன் வழியாகத்தான் பார்த்தார்' என்று கூறப்படும் கண்ணாடியை உடைத்தனர்.  ' சர்வ பிராமண மகாசபை'யும் சேர்ந்து எதிர்க்கிறது.  


 இதை மிஸ் பண்ணிடாதீங்க...
 
விஜய்க்கு உதவிய பாஜக!





சஞ்சய் லீலா பன்சாலி

  இவர்களது எதிர்ப்பால், படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.    மக்களும் திரைத்துறையினரும்  தீபிகாவையும் படத்தையும்  ஆதரித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில்  'ராஜஸ்தானில் அவ்வளவு வழக்குகள், பிரச்சனைகள் இருக்கின்றன, உங்களுக்கு இந்தப்  படம்தான் முக்கியமாக இருக்கிறதா?' என்று எதிர்ப்பவர்களைக்  கேட்டுள்ளனர். நாட்டில் பொருளாதாரம், அரசியல், சமூகம், கல்வி, சாதிக்கொடுமை, மதவெறி போன்ற பல்வேறு பிரச்சனைகள்  கவனிக்கப்  படவேண்டியுள்ளது. ஆனால் இந்தக்  கட்சிகளும் அமைப்புகளும்  சினிமாக்காரர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். 'சின்னத்தம்பி' படத்தில் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட   கவுண்டமணி சொல்லுவார், ' இந்த நோயால் இவ்வளவு கஷ்டப்படுறேன்... ஆனா ஒன்னுடா, நான் கரண்ட் பில்லு கட்டுனதே இல்லடா' என்று. அதுபோல சஞ்சய் லீலா பன்சாலி சொல்லிக்கொள்ளலாம், 'ஆனா ஒன்னுடா, எவ்வளவு செலவு பண்ணுனாலும் இவ்வளவு விளம்பரம் எங்களுக்கு கெடச்சுருக்காதுடா' என்று...

சந்தோஷ் குமார்     

சார்ந்த செய்திகள்