ஒரு இழுபறிக்குப் பிறகு, ஜூன் 14ஆம் தேதியன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்றத் துணைத்தலைவராக ஓ.பி.எஸ்., கொறடாவாக எஸ்.பி. வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக கே.பி. அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கட்சியைக் கைப்பற்றுவதற்காக நாடகமாடி கட்சியினருடன் சசிகலா தொலைபேசியில் உரையாடுவதாகவும், கட்சிக்கு எதிராக செயல்பட்டோரைக் கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சசிகலா குடும்பத்தினர் என்றே வந்திருக்கிறது. முதன்முறையாக இப்போதுதான் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவின் காலில் விழுந்து கும்பிட்டு பதவியைப் பெற்றவர்கள், சசிகலாவையே எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஆச்சர்யமான ஒன்றாகும்.
எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்சும் இதுவரை கிழக்கும் மேற்குமாகத்தான் இருந்தார்கள். எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது கூட்டத்திலிருந்து பாதியில் கிளம்பியவர்தான் ஓ.பி.எஸ். அந்தச் சண்டையின்போது, சசிகலாவின் ஆதரவாளரென்ற இமேஜ் ஓ.பி.எஸ்சுக்கு இருந்தது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 21ஆம் தேதி கூடியது. எனவே அதிமுக சட்டமன்ற நிர்வாகிகள் தேவை. எதிர்க்கட்சித் துணைத் தலைவராவதற்கு மறுத்தவர் ஓ.பி.எஸ். கொறடாவாக எஸ்.பி. வேலுமணியை எடப்பாடி பழனிசாமி கைகாட்ட, மனோஜ் பாண்டியனைக் கைகாட்டியவர் ஓ.பி.எஸ். இந்தச் சண்டை நடந்துகொண்டிருந்தபோதுதான் இன்னொரு பக்கத்தில் அதிமுகவினரோடு சசிகலா பேசிய ஆடியோக்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. சசிகலாவும் ஓ.பி.எஸ்சும் கைகோர்த்து அதிமுகவைக் கைப்பற்றுவார்கள் என்றும், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சண்டையால் ஒத்திவைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, சைலண்ட்டாக எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியை ஓ.பி.எஸ். ஏற்றுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமி சொன்னபடி எஸ்.பி. வேலுமணி கொறடாவாக வந்ததன்மூலம், அதிமுகவை கொங்கு வேளாளர்கள்தான் நிர்வகிக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டதுபோல சசிகலாவை எதிர்த்து ஓ.பி.எஸ். கையெழுத்து போடுகிறார். இது அரசியல் பரமபத ஆட்டம்போல திருப்பத்தை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் பேசியது குறித்து விசாரிக்கையில், "ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்றுதான் எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், செங்கோட்டையன் மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோர் ஒரு காம்ப்ரமைஸ் ஃபார்முலாவோடு பேசியிருக்கிறார்கள். அதன்படி, நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக வந்தால், மாநில அமைச்சர் அந்தஸ்துதான் கிடைக்கும். ஆனால் உங்கள் பையன் மத்திய அமைச்சரானால் மாநில முதல்வருக்குரிய அந்தஸ்து கிடைக்கும். எது உங்களுக்கு வேண்டுமென ஒரு டீலிங்கை கேள்வியாக ஓ.பி.எஸ். முன்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் இதில் நம்பிக்கையில்லாததால் ஓ.பி.எஸ். அந்த டீலிங்கை ஏற்க மறுத்திருக்கிறார்.
ஏற்கனவே, தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வரென்றும், ஒருவேளை அதிமுக தோற்றால், ஓ.பி.எஸ். எதிர்க்கட்சித் தலைவர் என்றும்தான் டீலிங் போட்டிருந்தனர். ஆனால், இப்போது அந்த டீலிங்குக்கு மாறாக, எடப்பாடி பழனிசாமியே எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார். “முன்பு என் மகனை மத்திய அமைச்சராக்குவதை எதிர்த்தவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது மட்டும் என் மகனை மத்திய அமைச்சராக்க எப்படிச் சம்மதிப்பார்” என கேள்வி எழுப்பியிருக்கிறார் ஓ.பி.எஸ். ஆனால், கண்டிப்பாக சொன்னபடி நடக்குமென்று உறுதி சொன்னபிறகே தனது பதவி, மற்ற நிர்வாகிகளின் பதவிகளுக்கும் ஓ.பி.எஸ். ஓகே சொல்லியிருக்கிறார்.
இப்படி டீலிங் ஓகே ஆகுமென்பதை சசிகலா எதிர்பார்க்கவில்லை. ஓ.பி.எஸ்சை விமர்சித்த அன்புமணியை திட்டிய பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியது, அன்புமணி மீதான மரியாதைக்காக இல்லை... புகழேந்தி, சசிகலாவின் ஆதரவாளராக மட்டுமல்லாது, சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்குமிடையே இணைப்புப் பாலமாக இருந்தவர். எனவே புகழேந்தியை நீக்கி, சசிகலாவுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் "என்னை முதுகில் குத்த இனி இடமே இல்லை... அவ்வளவு பேர் குத்தியிருக்காங்க. ஓ.பி.எஸ்சை நான் பதவியிலிருந்து நீக்கல... அவரேதான் பதவி விலகினார்” என்றெல்லாம் புலம்பியிருக்கிறார் சசிகலா. ஆனால், ஓ.பி.எஸ். ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது தினகரனும் டாக்டர் வெங்கடேசும்தான்.
சசிகலாவின் சொத்துக்கள், தினகரன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார், இளவரசி ஆகியோரின் கைகளில்தான் உள்ளன. எனவே அவர்களை மீறி சசிகலாவால் வெளியே வர இயலாது. சசிகலா தனிப்பட்டு வந்தால் அவரை ஏற்க அதிமுகவில் எல்லோரும் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சசிகலாவைச் சுற்றியிருக்கும் அனைவரையும் ஏற்க அதிமுகவினர் தயாராக இல்லை. சசிகலாவின் சொத்துக்களை எதையுமே வைத்திருக்காத திவாகரனை, சசிகலா தன்னோடு சேர்க்கவில்லை. ஆனால் அந்த திவாகரனோ அதிமுகவினர் மத்தியில் நல்ல டச்சில் இருக்கிறார். அவர் களத்துக்கு வந்தால் சசிகலாவின் முயற்சிகள் வெற்றிபெறும் என்று அதிமுகவினர் பேசிக்கொள்கிறார்கள்.
சசிகலாவுக்கு தற்போது வேறு வழியே இல்லை. தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதால், உறவினர்களின் கூட்டைவிட்டு சசிகலா வெளியே வரத்தொடங்கியுள்ளார். தன்னை நம்பிவரும் கட்சி நிர்வாகிகளுக்கு ஃபைனான்ஸ் உதவியும் செய்கிறார். சசிகலாவின் கை ஓங்கும்போது இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். தானாக வழிக்குவருவார்கள்'' என்பது சசிகலா தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது