வடமாவட்ட அரசியலைத் தாண்டி தென் மாவட்ட அரசியலுக்குள் நுழையும் நோக்கத்தில் "வைகை ஆற்றைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார்.
தேனி மாவட்டத்தில் வைகை ஆறு உருவாகும் மேகமலையின் அடிவாரமான வாலிப்பாறையில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். வைகையின் மூலஆற்று நீரை கையில் அள்ளி மோந்து பார்த்துவிட்டு, சிறிதுதூரம் அந்த ஆற்றுநீரில் நடந்தார். பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசும்போது, “""இந்த தண்ணீரில் சாக்கடை கலந்திருக்கிறது. மேகமலைப் பகுதியில் மரங்களை வெட்டியதால்தான் மழைப்பொழிவு இல்லாமல் போனதற்கு காரணம். மரக்கன்றுகளை நட வேண்டும். அப்போதுதான் எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான பூமியை விட்டுச் செல்லமுடியும்''’என்றவர் மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கினார்.
அப்போது அவரிடம் பேசிய மக்கள், ""எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு இதுவரை செல்போனில்கூட சிரமம் இல்லாமல் பேச முடியவில்லை. 108-க்கு அவசரமாக போன் செய்யவேண்டும் என்றால்கூட 20 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வருசநாட்டுக்குத்தான் போகவேண்டும்'' என்று குமுறினார்கள். உடனே, ""உங்கள் சிரமத்தைப் போக்கும்வகையில் விரைவில் செல்போன் டவர் நிறுவ ஏற்பாடு செய்கிறோம்'' என்று அன்புமணி சொன்னார்.
பின்னர் வைகை அணையை பார்வையிட்ட அவர், ""வைகை அணையில 21 அடி உயரத்துக்கு சகதி தேங்கிக் கிடக்கிறது. சகதியை அகற்ற இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை. குளம் குட்டைகளையும் தூர் வாரவில்லை. இப்படி இருந்தால் நீராதாரத்தை எப்படி பாதுகாக்க முடியும்?'' என்று வினா எழுப்பினார்.
பின்னர் நிலக்கோட்டையில் தனது கட்சியினர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, ""ஆட்சியில் இருக்கிறவரைக்கும் கொள்ளையடித்துவிட்டுப் போகலாம் என்று செயல்படும் இந்த அரசு தொடர்ந்து பதவியில் நீடிப்பது ஆபத்து. பா.ஜ.க. ஆட்டுவிக்கிறபடி ஆடும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்குகிறது. எடப்பாடி உட்பட அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்'' என்றார்.
"வைகை ஆற்றைக் காப்போம் என்று தொடங்கியிருக்கிற இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், காவிரி ஆற்றுக்காகவும் தொடரும்' என்ற அன்புமணி, ஆகஸ்ட் 2-ஆம் தேதி மதுரையில் இருந்து விரகனூர், திருப்புவனம், பரமக்குடி, ராமநாதபுரம்வரை சென்று பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.