அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் முக்கியமான பகுதியினர் பெண்கள். அந்த வாக்கு வங்கியை இலக்காக வைத்து, தி.மு.க தொடர்ச்சியாக வேலை செய்து வருவது இந்தத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிகின்றது. 2024 தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய மூன்று முக்கியமான விஷயங்கள், மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை. இத்துடன் காலை உணவுத் திட்டம். இவை அனைத்தும் பெண் வாக்காளர்களின் மனங்களை ஒட்டுமொத்தமாக கவரும் நோக்கத்திலானவை என்பது வெளிப்படையான உண்மை !
முந்தைய தலைமுறைக்கு முன்னர் பெண்கள் படிப்பதும், படித்து முடித்து வேலைக்கு செல்வது என்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. இதனால் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கு கல்வியும், பொருளாதார விடுதலையும் முக்கியமானதாக பேசப்பட்டது. டாக்டர் பட்டமே பெண் பெற்றிருந்தாலும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டவில்லை எனில், அந்தப் பட்டம் வெறும் திருமண பத்திரிக்கையில் பெயருடன் இணைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். உலகம் முழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்பது பல மடங்கு இந்தியாவை விட உயர்ந்திருப்பதற்கு காரணம், அங்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதுதான்.
திராவிட இயக்கங்களின் மிக முக்கியமான இலக்கு பெண் உரிமையும், சமத்துவமும் தான். பெரியார், பெண் உரிமைகளுக்கு எனத் தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றி இருக்கிறார். 1929 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் ‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’ எனும் தீர்மானம். பெரியார் உயிருடன் இருக்கும் வரை, அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், 1989 ஆம் ஆண்டு கலைஞரால் தமிழ் நாட்டில் பெரியார் கண்ட கனவு சட்டமாக்கப்பட்டது.
இந்த வரலாற்றில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம், பெண் பொருளாதாரச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பெண்களின் உயர் கல்விக்கு மாதம் 1000 ரூபாய் இவையும் பெண்களைக் கவரும் திட்டங்கள். இத்திட்டங்களின் மூலம் 1 கோடியே 6 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இது உளவியல் ரீதியாக பெண்களுக்குப் பெரும் பலத்தைக் கொடுக்கிறது.
கலைஞர் கொண்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தைத்தான், ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 50000 ஆகவும், தாலிக்கு தங்கம் என்றும் அறிவித்தார். இதே திட்டத்தைதான், இன்றைய கால வளர்ச்சிக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின், ‘புதுமைப் பெண் திட்டம்’ ஆக மாற்றி, தாலிக்குத் தங்கம் என்பதைவிட, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 என்ற முற்போக்கான திட்டமாகக் கொண்டுவந்தார். இது இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தால் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை 29 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் 48.6% பெற்று பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் புதுமைப் பெண் திட்டம் மூலமாகத் தமிழ்நாடு மிக பெரிய அளவில் முன்னேறி இருக்கும்.
தாலிக்குத் தங்கம் தராமல் இருப்பதைத் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக் கொள்ள முடியுமா என்று இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் முயலுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதைத்தான் தாய்மார்கள் விரும்புகின்றனர். 1921-இல் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது நீதிக்கட்சி. அப்போது தொடங்கி, பெண்கள் உரிமையில் இரண்டு திராவிடக் கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதில், எம்.ஜி.ஆர் என்கிற ஆளுமை பிம்பமும், ஜெயலலிதா என்கிற பெண் ஆளுமைப் பிம்பமும் அ.தி.மு.கவிற்குப் பெண்கள் வாக்கு வங்கியை உருவாக்கித் திடப்படுத்தியது.
இப்போது அந்த வாக்கு வங்கியைத் தனக்கானதாக மாற்ற ஸ்டாலின் முயன்றுள்ளார். அதில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமாக வெற்றி பெறவும் செய்தார். 2024 இல் இன்னும் பெரிய அளவில் பெண்கள் தி.மு.கவிற்கு வாக்கு அளிப்பார்கள் என்று கணிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு 1 இலட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம், மத்திய வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு ஆகியவையும் பெண் வாக்காளர்களைக் கவர்ந்திருப்பதாகவே சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே இம்முறை 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேர் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், இந்த முறை பெண்கள் அளிக்கும் வாக்குகள், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வெற்றியை க்ளின் ஸ்வீப் செய்ய உதவும் என்கிறார்கள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.