பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டம் தொடர்பாக திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தியை சந்தித்து பல கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.
பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டம் முடிந்த பிறகு தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசியதை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழக முதல்வரின் எண்ணம் நிறைவேறும் விதமாக இந்த அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியமானதாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். மேலும் இந்த கூட்டம் நடைபெறாது என்று கதை எழுதிக் கொண்டிருந்த பாசிசர்களுக்கு பெரிய அடியாக இருந்து மாபெரும் வெற்றி கூட்டமாக அமைந்துள்ளது. மத்தியில் யார் வர வேண்டும் என்பது முக்கியமல்ல யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். அந்த வார்த்தைக்கு வடிவமாகத்தான் இந்த பாட்னா கூட்டம். மேலும் அந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் தனது கருத்துகளை எடுத்துரைக்கும் போது அதை பெருமையோடு மற்றவர்கள் ஆதரவு தந்து பேசினார்கள். இந்த வெளிப்படையான கூட்டத்தில் நிதிஷ் குமார் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் பத்திரிகையாளர்களிடம் கலந்து கொண்டு பேசினார்கள்.
சென்னை வந்த தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம், இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக மீண்டும் வரக்கூடாது என்றதன் பேரில் தான் இந்த மாபெரும் கூட்டம் நடைபெற்றுள்ளது என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் பாஜக வீழ்த்துவதையே அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒற்றை இலக்காக வைத்திருக்கிறோம் எனவும் கூறுகிறார். இந்த வெற்றிகரமான கூட்டத்தைப் பார்த்து யார் பயப்படுகிறார்களோ அவர்களை மக்கள் சரியான நேரத்தில் வீழ்த்துவார்கள்.
எதிர்க்கட்சிகள் ஒன்று கூடலாம் ஆனால் ஒற்றுமையாக இருக்க முடியாது என்று அமித்ஷா கூறுகிறாரே?
இந்த கூட்டம் நடைபெற்றாலும் அனைவரின் கருத்துகள் ஒன்றுபடாது என்று அமித்ஷா நினைத்திருந்தார். ஆனால் அமித்ஷாவின் எண்ணங்களுக்கு மாறாக இந்த கூட்டம் நடைபெற்றதால் அவர் பயப்படுகிறார்.
2019 ஆம் ஆண்டிலும் இதுபோன்று எதிர்க்கட்சிகள் ஒன்று கூடினார்கள். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படி ஒன்று கூடினாலும் 2024 தேர்தலில் மோடியை வீழ்த்த முடியாது என்று அமித்ஷா கூறுகிறாரே?
1977 ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திலும் சில குழப்பங்கள், பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார்கள். அதே போல இந்த கொடூரமான ஜனநாயக விரோதிகளை விரட்ட இன்று எல்லாரும் ஒன்றுபட்டுள்ளார்கள். மேலும் அந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை கலைத்து விட்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை கருத்துகளோடு ஒன்றிணைந்திருக்கிறோம் என்று அங்குள்ள தலைவர்கள் கூறுகிறார்கள். அதை மீண்டும் அமித்ஷாவிற்கு நினைவுபடுத்த வேண்டும்.
பாட்னாவில் நடந்த கூட்டம் மோடியை வீழ்த்துவதற்காக அல்ல அரசு கஜானாக்களை கைப்பற்றுவதுதான். மேலும் இது பல தலைகளைக் கொண்ட ஓநாய்களின் கூட்டம் என்று சுமிருதி ராணி கூறுகிறாரே?
பல புராணங்களை படித்து படித்து இப்படி பேசுகிறார்கள். மேலும் இந்த 8 ஆண்டுகளில் 4837.78 கோடிகளை பாஜகவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக அவர்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பணம் எப்படி வந்தது? எல்லாம் ஊழலிலும் லஞ்சத்திலும் பெற்ற பணமாகும். இப்படி ஊழல் செய்த பாஜகவில் இருந்த கொண்டு மற்ற கட்சியை குறை சொல்கிறார் சுமிருதி ராணி. அது மட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற மோடி இந்தியாவின் பெருமையைப் பற்றி பேசி பல கைத்தட்டுகளை வாங்குகிறார். அதை பெருமையாக இங்குள்ளவர்கள் செய்திகளில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி வருகையை எதிர்த்து ‘இந்தியாவில் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள். அதை கட்டாயமாக மோடியிடம் கேட்க வேண்டும்’ என்று கடிதமாக எழுதி ஜோ பைடனிடம் கொடுத்தார்கள்.
மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மோடியை எதிர்க்கும் வகையில் Crime minister of india என்று பதாகைகளை வைத்து ஊர்வலமாக வருகின்றனர். இங்கே சிறுபான்மையின மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு மத உரிமைகளின் அடிப்படையில் அவர்களை நசுக்கும் விதமாக மணிப்பூரில் இன்று 200க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. அதே போன்று பல கோவில்களை இடித்துவிட்டு, நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்று அமெரிக்காவில் பேசுகிறார்.
அமெரிக்காவில் பெருமளவு வியாபாரம் இன்று நமது இந்தியாவில் இருப்பதால் தான் அங்கு மோடி பேசும்போது அனைவரும் கை தட்டுகிறார்கள். மேலும் அங்கு மோடி பங்கேற்றுவிட்டு ஜோ பைடனின் மனைவிக்கு வைரக் கல் கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் உணவருந்தும் போது அம்பானியும் உடன் இருக்கிறார். இப்படி அதானி, அம்பானி போன்றோருக்கு கோடி கோடியான பணத்தை வாரி இரைக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல உலக உளவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து பாஜகவுக்கு கோடி கோடியாக பணம் வந்திருக்கிறது. இப்படி ஊழல் மிகுந்த பாஜகவில் இருந்து கொண்டு மற்ற கட்சிகளைப் பற்றிக் குறை சொல்லுகிறார் சுமிருதி ராணி. மேலும் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட எம்பியை எந்த நடவடிக்கையும் எடுக்காதது அமெரிக்காவில் எதிரொலிக்கிறது.