நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்கிற பயம் அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் அதிகரித்துவரும் நிலையில், கட்சியின் சீனியர்களிடமிருந்து வரும் நெருக்கடியால் அப்-செட்டாகியிருக்கிறாராம் எடப்பாடி.
கொங்கு மண்டலம் மற்றும் வட தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு சாதகமா இருக்கும்னு நம்பிக்கையில்லை. அப்பீல் வரை போனாலும், ஆட்சி கவிழும் அபாயம் இருக்கு. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி விலகுவார். அதற்கான திட்டங்களை கடந்த 2 மாதங்களாக உருவாக்கி வைத்திருக்கும் பா.ஜ.க. தலைமை, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தவே விரும்புகிறது.
இதற்கிடையே திருவாரூருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஜனவரிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனா, மத்திய அரசின் மனமறிந்து செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையம், ஒருவேளை நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தலை சேர்த்து நடத்தும் பா.ஜ.க.வின் மனநிலைக்கேற்ப இடைத்தேர்தலை தள்ளிப்போடலாம். எம்.பி., தேர்தலின்போது, தமிழகத்தில் வலிமையான ஒரு கூட்டணிக்குள் இருக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் விரும்புகின்றனர். தி.மு.க. அல்லது ரஜினி என்பது அவர்களின் முதல்கட்ட சாய்ஸ்.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதுபற்றி அனைத்துக்கட்சியினரோடு தலைமைத் தேர்தல் ஆணையம் டெல்லியில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை கடந்த வாரம் நடத்தியது. அன்று இரவு தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக இடைத்தேர்தல் குறித்து தனி ஆலோசனை நடத்தியுள்ளது பா.ஜ.க. இதையறிந்துதான், ஆட்சி குறித்த பயம் எம்.எல்.ஏ.க்களிடம் வந்திருக்கிறது'' என்கின்றனர்.
இதுகுறித்து அமைச்சர்கள் சிலரின் உள் வட்டத்தில் நாம் விசாரித்தபோது, "கட்சி-ஆட்சி இரண்டிலும் எடப்பாடியின் கை ஓங்கியிருப்பதை அமைச்சர்கள் மற்றும் கட்சியின் சீனியர்கள் பலராலும் ஜீரணிக்க முடியவில்லை. அதேசமயம், ஆட்சிக்கு ஆபத்து நெருங்கியிருப்பதை எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் எடப்பாடிகூட, தேர்தலை எதிர்கொள்ள பல கோடிகள் தேவைப்படுமென்பதால், முக்கிய அமைச்சர்களிடம் கட்சி நிதி வசூலிக்க முயற்சித்தார். அது துவக்கத்திலேயே அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் மோதலாக வெடித்தது. அவரவர் இலாகாவின் வலிமைக்கேற்ப கட்சிநிதி தரவேண்டும் என எடுக்கப்பட்ட அசைன்மெண்ட், ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அமைச்சர்களிடம் அதிருப்தியையே உருவாக்கியது. "கட்சி நிதி கேட்டு நெருக்கடி தராதீர்கள்; தேர்தல் வந்தால் அமைச்சர்கள் அவரவர் மாவட்டத்தைப் பார்த்துக்கொள்வார்கள். அம்மா பாணியில் நிதி வசூலிக்க முயற்சித்தால் தேவையில்லாத பிரச்சனைகள்தான் உருவாகும்' என எடப்பாடியிடமே தெரிவித்துவிட்டனர். இது, எடப்பாடியை அப்-செட்டாக்கியது.