Skip to main content

தமிழ்ப்படத்தில் குறியீடுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? 10 எளிய வழிமுறைகள் உங்களுக்காக...  

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

குறியீடு என்ற வார்த்தை தற்போதைய தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக முக்கியமாக வளம் வந்து கொண்டிருக்கிறது. முன்னெல்லாம் உலக சினிமா ரசிகர்கள்தான் 'படத்தில் அந்தக் குறியீட்டை பாத்தியா, இது அதுக்கான குறியீடு' என்றெல்லாம் விவாதித்துக் கொள்(ல்)வார்கள். அந்த வழக்கம் இப்போது தமிழ் சினிமா வட்டாரத்தையும் வந்தடைந்துவிட்டது. அதுவும் சும்மா வெளியிடும் போஸ்டரில் ஆரம்பித்து, டீசர், டிரைலர் மற்றும் படம் வரை குறியீடுகளின் லிஸ்ட் ஏறிக்கொண்டே போகிறது. எங்கும் குறியீடு எதிலும் குறியீடு என்று மாறிவிட்டது. குறியீடு தெரியாமல் படம் பார்த்தால் அது வேஸ்ட் என்பது போன்ற ஒரு கட்டமைப்பும் இங்கு கட்டப்பட்டுவிட்டது. அதன் காரணமாகத்தான் குறியீடு கற்றுக்கொள்வது எப்படி என்கிற பத்து புள்ளிகளை உங்களுக்கு ஒரு கையேடாகப் (பயப்பட வேண்டாம் இது குறியீடு இல்லை கையேடு) போட்டுத் தர உள்ளோம்.

 

kaala first look
  • நீங்கள் பார்க்கும் ஹீரோ எந்த கலரில் உடை அணிகிறார் என்பதுதான் முதல் குறியீடு. ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு அர்த்தம். கலரைப் பொறுத்துதான் அவர் நல்லவரா இல்ல கெட்டவரா என்பது நமக்குத் தெரியவரும். அவரது பேச்சு,செயல் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். முன்பெல்லாம் ஹீரோக்கள் வொயிட் அண்ட் வொயிட்டில் வந்து அறிமுகமாவார்கள். வெள்ளை நாயகர்களின் நிறமாகவும், கறுப்பு, வில்லன்களின் நிறமாகவும் இருந்தது. இப்போது அது மாற்றப்பட்டிருக்கிறது கறுப்பு ஹீரோக்களின் நிறமாகவும் வெள்ளை வில்லன்களின் நிறமாகவும் இருக்கிறது. இவை தவிர நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை  உள்ளிட்ட பல நிறங்களுக்கும் பல குறியீடுகள் இருக்கின்றன. நாயகன் கையில் மந்திரிச்ச கயிறு எதுவும் கட்டியிருந்தால் அதன் நிறம் மிக முக்கியம். கலர் ரொம்ப முக்கியம் ப்ரோ...

     

     

     
  • நாயகன் உள்ளிட்ட பிற கதாபாத்திரங்களின் பெயரை மறக்காமல் குறித்துக்கொண்டு வரவும். ட்ரைலர், டீசர் வெளிவரும்பொழுதே பெயர்களைக் குறித்து வைத்து கூகுள் செய்துவிட்டு பின்னர் சென்று படம் பார்த்தால், அது கூடுதல் நலம். அந்தப் பெயர்கள் கொண்ட தலைவர்கள், வெளிநாட்டு மனிதர்கள் போன்றோரைப் பற்றித் தெரிந்தால்தான் உங்களுக்கு இந்தப் பாத்திரங்களைப் பற்றி முழுமையாகத் தெரியும். நீங்கள் பார்ப்பது மட்டும் பாத்திரம் கிடையாது. அதற்கு பின்னால் வரலாறு மறைந்திருக்கிறது. வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே...

     komban
     
  • அடுத்ததாக நாயகனின் பெட் அனிமல், அதாவது வளர்ப்புப் பிராணி எது என்று நீங்கள் கவனிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் வளர்ப்புப் பிராணிகளை வைத்தும் நாயகனின் குணாதசியங்களைத் தீர்மானிக்கலாம். அவர் வளர்ப்பது நாயா, பூனையா, காளையா, குதிரையா, யானையா  என்பதை உற்று நோக்க வேண்டும். நாய் என்றால், நாயை மட்டும் கவனித்தால் பத்தாது, நாயின் நிறமும் மிக முக்கியம். அது போலத்தான் பிற விலங்குகளுக்கும்.

     
  • உங்கள் அபிமான ஹீரோ வசனம் பேசினால் அவரது வாயைத்தான் பார்க்கவேண்டுமென்பது இல்லை. சுற்றி உள்ள ஓவியங்கள், பின்புறம் உள்ள சிலைகள், சிலை போல் யாரேனும் நின்றால் அவர்கள், சைடில் தெரியும் போஸ்டர்கள், கடந்து போகும் வண்டிகள், வண்டிகள் கொடுக்கும் ஹாரன்கள், வண்டி ஓட்டிச் செல்பவர்களின் பார்வை என அனைத்தும் மிக முக்கியம். பின்னாடி வண்டிகள் எதுவும் பார்க் செய்யப்பட்டிருந்தால், அந்த வண்டிகளில் உள்ள ஸ்டிக்கர்களும் முக்கியம். குறியீடுகள் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்திருக்கலாம், அலர்ட்டாக இருக்கவேண்டும். நேரம் மட்டுமல்ல, குறியீடும் கூட கடந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான்.

     thupparivaalan

     
  • புத்தகங்கள்... புத்தகங்கள், சமகால சினிமாக்களில் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய குறியீடுகள். முன்பெல்லாம் புத்தகங்கள் படிக்காவிட்டால் இலக்கியத்தில் மட்டும்தான் உங்களுக்கு இழப்பு. இப்பொழுது சினிமாவிலும் இழப்பு ஏற்படலாம். நாயகனின் அறையில் இருக்கும் புத்தகங்களை கவனிப்பது முக்கியம். மிஸ் பண்ணிட்டா படத்தில் ஒரு பாதியை வேஸ்ட் பண்ணிட்டீங்க நீங்க...

     

     


     
  • சுற்றி உள்ளதெல்லாம் முடிந்துவிட்டதா? இப்பொழுது வசனங்களுக்கு வரலாம். வசனங்களில் நாயகனும் பிற பாத்திரங்களும் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் கூட குறியீடுதான். 'பகத்சிங்கை தொறந்துவிட்ருவேன்', 'ராசா வண்டிய விட்ருவேன்', என்பதில் தொடங்கி 'இது நல்ல எண்ணையா?' வரை அனைத்தும் குறியீடுகளே. புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டுப் புரிந்துகொள்ளவேண்டும்.

     vikram vedha

     
  • 'இசை எதுல இருந்து வருது?' என்பது இன்றும் உயிர்ப்போடு இருக்கும் கேள்வி. அதற்கு பதில் தெரியுமோ தெரியாதோ, குறியீடு இசையிலிருந்தும் வருகின்றது என்பது மட்டும் உண்மை. ஹீரோவுக்கான இசை, வில்லனுக்கான பின்னணி இசை, அதில் பயன்படுத்தப்படும் ராகம், ராப், மந்திரம், என அனைத்திலும் குறியீடுகள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம். 'ஓமகசீயா, அசிலி பிஸிலி' என அனைத்திலும் அன்றே குறியீடு வைத்தார் ஹாரிஸ்.

     
  • கதை எங்கு நடக்கிறது. ஹீரோவுக்கு எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்றும் பார்ப்பது அவசியம். ஹீரோ வாழும் வீட்டு டோர் நம்பர், பயன்படுத்தும் வண்டியின் நம்பர், பயன்படுத்தும் ஃபோன் நம்பர், என அனைத்தும் முக்கியம். படத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளும் குறியீடுகள்தான். கொண்டாடப்படும் பண்டிகைகள், பண்டிகையின் போது தூவும் கலர் பொடிகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதில்தான் உலக அரசியல், சமூக, சினிமா சிந்தனைகளே அடங்கியிருக்கும்.

     joker
     
  • படத்தின் இயக்குனர்கள் குறித்து முன்பே அறிந்து வைத்து படம் பார்த்தால் குறியீடுகளை எளிதில் உள்வாங்கலாம். இயக்குநருக்கே தெரியாத பல குறியீடுகளை சொல்லிக் கொடுக்கலாம். வில்லனின் பெயர் ஏதாவது ஒரு புலவரின் பெயராகவோ, தலைவரின் பெயராகவோ, உங்கள் உறவினரின் பெயராகவோ இருந்தால் அதை எதிர்த்து போராட்டங்களும் செய்யலாம்.

     
  • முன்பெல்லாம் படங்களின் டைட்டில் கார்டு வடிவமைப்பு என்பது வெறும் வார்த்தை மட்டுமே. இப்பொழுதெல்லாம் டைட்டில் டிசைன்கள் ஒரு வரலாற்றை சொல்பவை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும்பொழுதே டைட்டில் டிசைனை நன்றாக ஜூம் செய்து பார்க்கவும். அந்த எழுத்துகளில் இருக்கும் வளைவுகளிலும், நெளிவுகளிலும், உள்ளே மறைந்திருக்கும் உருவங்களிலும் மனித குல வரலாற்றின் முக்கிய பக்கங்கள் இருக்கலாம் என்பதை மறந்துவிட்டு டைட்டில் டிசைனை கடந்துவிட வேண்டாம். கவனமாகச் செல்லுங்கள்...

     velai

     

theeran


 

asuravadham

 

imaika nodigal



இதற்கு பிறகும் 'ஒரு தமிழ்ப்படத்தில் குறியீடுகளைக் கண்டுபிடிப்பது எப்படி' என்பதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால்... உங்கள் நண்பர்களில் எப்படியும் ஒரு குறியீடு ஸ்பெஷலிஸ்ட் இருப்பார். 3 படங்களாவது அவருடன் சேர்ந்து பாருங்கள். பின்னர் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவது இன்னும் எளிது.

 

 


'பொழுது போகலையேன்னு படம் பாக்கத்தானடா வந்தேன்... நான் ஏண்டா இதையெல்லாம் பாக்கணும்' என்று வடிவேல் ஸ்டைலில் கேட்கிறீர்களா? நீங்கள், சிறுத்தை சிவா, சிங்கம் ஹரி, தெறி அட்லீ போன்றோரின் படங்களைப் பார்ப்பது நலம். ஆனால், மறந்துவிடாதீர்கள், அங்கும் குறியீடுகள் உங்களை வேறு வழியில் துரத்தும். ஏன்னா... அது சாமியில்ல, பூதம்!!!