18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை விற்க கிழக்கு நாடுகளை நோக்கி படையெடுத்து வந்தன. சீனா, கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற இடங்களில் ஐரோப்பியர்கள் வர்த்தக உரிமையைப் பெற்று சந்தைகளை ஏற்படுத்தினார்கள்.
ஜப்பானில் மெய்ஜி பேரரசு வலுப்பெற்றிருந்தது. ஜப்பான் முழுவதையும் ஒருங்கிணைந்த பேரரசாக இருந்தது. எனவே, ஜப்பானிய போர்வீரர்களான ஆயிரக்கணக்கான சாமுராய்கள் வேலையிழந்தனர். பொருளாதாரரீதியாக நலிவடைந்தனர். இந்தச் சமயத்தில் கொரியாவைக் கைப்பற்றுவது தொடர்பான விவாதம் எழுந்தது. 1873 ஆம் ஆண்டு இந்த விவாதம் தீவிரமடைந்தது. இந்த விவாதத்துக்கு முக்கியமான காரணமாக சைகோ டகாமோரி என்பவர் இருந்தார். இவர் சாமுராய் வீரர்களில் முக்கியமானவர். பேரரசர் மெய்ஜி தலைமையில் ஜப்பானிய பேரரசை மீண்டும் அமைத்ததில் இவருடைய பங்கு முக்கியமானது. 1868 ஆம் ஆண்டு மெய்ஜி பேரரசு பொறுப்பேற்றது. அதன்பிறகு அங்கு தொழில்வளம் பெருகியது. ஆனால், வர்த்தகம் செய்ய போதுமான சந்தையோ, தொழில்களுக்கு தேவையான கச்சாப் பொருட்களோ இல்லை. எனவேதான் கொரியாவை கைப்பற்றுவது என்ற பேச்சு எழுந்தது. கொரியாவோ சீனாவின் குய்ங் பேரரசின் பாதுகாப்பில் இருந்தது.
ஜப்பானியப் பேரரசை கொரியா அங்கீகரிக்க மறுத்ததை காரணமாக வைத்து அந்த நாட்டை கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. முதலில் கொரியாவை குய்ங் பேரரசின் பிடியிலிருந்து விடுவித்து, அதன்பின்னர் அந்த நாட்டை தனது பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மெய்ஜி பேரரசு நினைத்தது. கொரியாவை கைப்பற்றுவதால் ஆயிரக்கணக்கான சாமுராய் வீரர்களுக்கு அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும். ஆசிய நாடுகளைக் கைப்பற்ற இது வழியை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. ஜப்பானிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை ஆசியநாடுகளில் இருந்த பெறமுடியும் என்றும் நினைத்தார்கள்.
இந்த விவாதங்களின் முக்கிய அம்சங்களில் ஏழு அம்சங்களை குறிப்பிட்டு 1873 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு ஆவணத்தை ஒகுபோ டோஷிமிச்சி என்பவர் தயாரித்தார். இவரும் நவீன ஜப்பானை உருவாக்கியவர்களில் முக்கியமான சாமுராய்களில் ஒருவர். அந்த ஆவணப்படி கொரியா மீது நடவடிக்கை எடுப்பது முதிர்ச்சியில்லா யோசனை. ஜப்பான் நவீனமயமாகும் நிலையில் இந்த நடவடிக்கைக்கு ஏராளமான செலவாகும் குறிப்பிடப்பட்டது. யுத்த எதிர்ப்புக் குழுவினர் இந்த ஆவணத்தை ஏற்றனர். குறிப்பாக நவீனமயம் குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பிய இவாக்குரா டோமோமொய் தலைமையிலான நிபுணர்கள் குழு யுத்தத்தை ஏற்கவில்லை. இதையடுத்து, கொரியா மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.
ஆனால், கொரியாவில் ஆட்சி அதிகாரம் சீர்குலையத் தொடங்கியது. கொரியா மன்னர் ஜியோங்ஜோ இறந்தவுடன், அவருடைய 10 வயது மகன் சுஞ்சோ மன்னராக பொறுப்பேற்றார். நிர்வாகப் பொறுப்புகளை அவருடைய மாமனார் கிம் ஜோ சுன் கவனித்துக் கொண்டார். இந்தச் சமயத்தில்தான் அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடியது. குறிப்பாக நில வரி, ராணுவ சேவை உள்ளிட்டவற்றிலும் ஊழல் அதிகரித்தது. விவசாயிகள் பெருந்துன்பத்தில் சிக்கினார்கள். மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு, மக்களை வாட்டி வதைத்தது. அடிமைகளை வைத்திருக்கக்கூடாது என்று 1801 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டாலும், அந்த முறை சட்டப்பூர்வமாக 1894 ஆம் ஆண்டுவரை நீடித்தது.
கொரியாவில் ஆதிக்க வகுப்பினராக இருந்த யாங்பான் மக்கள் மத்தியில் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்தினர் ஊடுருவி இருந்தனர். உட்பகையும், துன்பறுத்தல்களும் கிறிஸ்தவ பாதிரியார்களையும் பின்பற்றுகிறவர்களையும் ஒரு பிரிவினர் கொன்று குவித்தனர். அவர்கள் கொரிய தியாகிகள் என்று அழைக்கப்பட்டனர். இதையடுத்து உயர்வகுப்பினர் யாரும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதில் தயக்கம் காட்டினர். ஆனால், சமத்துவத்தை விரும்பிய கொரிய உழைப்பாளிகளும், விவசாயிகளும் கிறிஸ்தவ மதத்தில் சேரத்தொடங்கினர்.
இந்தச் சமயத்தில் சோ ஜெ யு என்பவர் புதிய இயக்கத்தை தொடங்கினார். கிறிஸ்தவ ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தவும், சீனாவைப் போல கொரியாவை பிரிட்டனும் பிரான்சும் ஆக்கிரமிக்காமல் தடுக்கவும், கொரியாவில் ஜனநாயகத்தையும், மனித உரிமையையும் அமல்படுத்த வேண்டும். தேசியவாதம், சமூகசீர்திருத்தம் வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரம், வழக்கமாக கொரியா விவசாயிகள் மத்தியில் இருந்த கொரில்லா போராளிகளை உசுப்பிவிட்டது. புரட்சிகர அமைப்புகள் உருவாகி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதையடுத்து, சோ ஜெ யு மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு 1864 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் மலைகளில் சென்று ஒளிந்துகொண்டனர்.
இந்நிலையில்தான் கோஜோங் என்ற 12 வயது சிறுவன் கொரியாவின் மன்னரானார். இவருடைய ஆட்சிக் காலத்திலும் உறவினர்களின் ஊழல் குறையவில்லை. அரசு நிர்வாகத்துக்கு இணையாக சோவோன் என்ற தனியார் நிறுவனங்கள் போட்டி நிர்வாகத்தை நடத்தின. மேற்கத்திய சிந்தனைகளும், தொழில்நுட்பங்களும் கொரியாவில் நுழைவதைத் தடுக்க கொரியா தன்னை தனிமைப்படுத்த முடிவெடுத்தது. இதையடுத்து, 1873 ஆம் ஆண்டு மன்னர் கோஜோங்கிற்கு கட்டாய ஒய்வு கொடுத்துவிட்டு, ராணி மியோங்சியோங் பொறுப்புக்கு வந்தார்.
அவர் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் 1876 ஆம் ஆண்டு ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜப்பானின் சந்தையாக கொரியா மாற இந்த ஒப்பந்தம் வழிசெய்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, ஜப்பான் சீனாவின் பிடியிலிருந்த நாடு என்ற நிலை மாறி, கொரிய துறைமுகங்கள் அனைத்தும் ஜப்பானிய வர்த்தகத்துக்கு திறந்துவிடப்பட்டன.
(இன்னும் வரும்)
முந்தைய பகுதி:
2 லட்சம் கொரியர்களின் மூக்கை நறுக்கிய ஜப்பான்! கொரியாவின் கதை #4