'ரோம் நகரம் எரிந்துகொண்டிருக்கும் போது, நீரோ மன்னன் வயலின் வாசித்துக்கொண்டிருந்தான்' என்ற மேற்கோள் அனைவரும் அறிந்ததே. இதற்கு என்ன பொருள், பேரரசராகிய நீரோ மன்னனின் ஆட்சியில் இருந்த ரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கையில், அதை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாமல் வயலின் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறார். இது தான் இங்கு குற்றச்சாட்டு, ஒரு நாட்டின் அரசன், பேரரசன் யாராக இருந்தாலும் தன் நாடு, தன் நாட்டு மக்கள் என்று யோசிப்பார்கள், யோசிக்க வேண்டும். ஆனால், இவரோ அது யாருடையதோ என்ற ரீதியில் வயலின் வாசித்துக்கொண்டிருந்திருக்கிறார். இவரை நம்பி இருந்த மக்களின் கதி, இவர் பொறுப்பில் இருந்த நாட்டின் கதி என்ன ?
இது ஒரு வரலாறு. உண்மைத்தன்மை எவ்வளவு இருக்கும் என்பது வரலாற்றை பதிவு செய்தவர்களுக்குத்தான் வெளிச்சம். வரலாற்றை விட்டு நிகழ்காலத்திற்கு வருவோம், அதே போல ரோம் நகரத்தை விட்டு தமிழ்நாட்டுக்கு வருவோம். என்ன நடக்கிறது என்று பாருங்கள், மேலே சொல்லப்பட்ட மேற்கோள்தான் நடந்து கொண்டிருக்கிறது. நீரோ மன்னன் காலத்திலாவது அது மன்னராட்சி, அவர் வைத்ததுதான் சட்டம். மன்னராட்சி என்ற ஒன்றில் கண்டிப்பாக பொதுமக்கள் இரண்டாம் பட்சம்தான். ஆனால், தற்போது உலகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆட்சிமுறையாக இருப்பது ஜனநாயக முறைதான். அதிலும் இந்தியாவில் ஜனநாயக முறைதான் பின்பற்றுகின்றனர் என்று சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து எல்லாவற்றிலும் சொல்கின்றனர், நாமும் நம்புகிறோம். கர்நாடக தேர்தலின் முடிவை அடுத்து பாஜகவும், காங்கிரசும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி, "இது ஒரு ஜனநாயகக் கேடு" என்று குறை கூறி வந்தனர்.
ரோமில் ஏற்பட்ட அந்த கடும் தீ விபத்திற்கு காரணம் நீரோ மன்னன்தான் என்றும் கூட சிலர் சொல்கின்றனர். காரணம், நாட்டை எரித்துவிட்டு புதுமையான நகரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். அது பலனளிக்கவில்லை என்று தெரிந்ததும், சோகத்தைப் போக்க வயலினை வாசித்துக்கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதே போலத்தான் கலவரத்தை கட்டுப்படுத்துகிறேன் என்று இங்கு துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரத்தை நீடிக்க வைத்திருக்கிறது அரசு. அந்த சோகத்தைப் போக்க பத்து லட்சம் நிவாரணம் என்றது. மேலும் மேலும் இது கார்ப்பரேட்களுக்கான அரசு என்று மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டு உரைத்து வருகின்றனர். வடக்கு முனையில் காஷ்மீர் கலவர பூமியானது போல, தெற்கு முனையில் தமிழ்நாடும் மாற்றப்பட்டுவிடுமோ என்ற கவலை வரத்தொடங்கிவிட்டது. இது மன்னராட்சி இல்லை, மக்களாட்சி என்பதை புரிந்துகொள்ளுங்கள். மக்களுக்கு கேடுவிளைவித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி என்ன பயன்? நீரோ மன்னனும் இவ்வாறு தங்க அரண்மனை கட்டுகிறேன் என்று மக்களின் வரிப்பணத்தின் மீது கைவைத்தார். கடைசியில், அவரே காணாமல் போனார். நமக்கு மாநிலத்திலும் சரி மத்தியிலும் சரி இருவரும் நீரோ மன்னர்கள்தான்.
அமைதியாக நடந்த போராட்டத்தை, கலவரமாக மாற்றிவிட்டனர். தூத்துக்குடியிலிருந்து வரும் வீடியோக்களைப் பார்த்தால், காவலர்கள் நாஜிப்படைகள் போல வீதிகளில் நடைபோடுகின்றனர்.மக்களை லத்தியைக்கொண்டு அடிக்கின்றனர். இதுவரை 12 பேர் காவுகொடுக்கப்பட்டுள்ளனர். தற்போது கருப்பு உடை அணிந்த கமாண்டோ படைகள், வஜ்ராயுத வாகனம் எல்லாம் தூத்துக்குடியில் சூழ்ந்திருக்கிறது, பதற்றத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, இந்த ஆயுதப் படைகள் எதற்கு? இந்த அரசு, தயக்கமே இல்லாமல் மக்களைத்தான் காரணம் சொல்கிறது.
நேற்று தமிழக அமைச்சர்கள் நட்சத்திர ஹோட்டலில் பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்டனர். இன்று இந்திய பிரதமர் விராட் கோலியிடம் ஃபிட்னெஸ் சவால் விட்டு விளையாடுகிறார். முதலாளி அனில் அகர்வால் ( ஸ்டெர்லைட்டுக்குதான்) நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிடுகிறார். முதல்வர், சாவகாசமாக இன்று மதியம் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, "இவ்வளவு நடந்தது எங்களுக்கு தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரியும்" என்கிறார். வரும்காலம் இதை மேற்கோளாகக் காட்டும்.