Skip to main content

கரோனா வைரஸ் பரவல் எதிரொலி... உண்மை நிலவரம் என்ன? வெளிவந்த தகவல்!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

நாடு முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், பார்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் எல்லாவற்றையும் மூட உத்தரவிட்டது அரசு. திருமண மண்டபங்களில் புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை. கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், மாநாடுகளுக்கும் அனுமதியில்லை. பேரிடர் சூழலை உருவாக்கிவிட்டது கொரோனா.

நேற்று வரை அன்னியராக இருந்த கோவிட்-19 என்கிற கரோனா வைரஸ் இப்போது நமது வீட்டு (நாட்டு) வாசலில் வந்து நிற்கிறது. உள்ளே நுழையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.

 

corona virus



பழம் தின்னி வவ்வாலின் உடம்பிலிருந்து மனித உடலுக்கு கரோனா வைரஸ் முதன்முதலில் பரவிய சீனாவின் வூஹான் மாநிலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையைவிட, உலகெங்கும் பரவிய கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

சீனாவில் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 800. உலக அளவில் அது 81 ஆயிரத்தை தாண்டிவிட் டது. அதேபோல் 4,000 உயிர்களை சீனாவில் பலிகொண்டிருக்கிறது கரோனா. உலகமெங்கும் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆறாயிரத்தை தாண்டிவிட்டது. சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா சாவுகள் ஐரோப்பிய நாடான இத்தாலியில் நடந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 368 பேர் கரோனாவால் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்கள்.

பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்களை தனிமைச் சிறையில் (குவாரண்டைன்) வைத்துவிட்டனர். ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கே கரோனா நோய் வந்துவிட்டது. 70வயதைக் கடந்தவர்களை கரோனா எளிதாக பாதிக்கும் என்பதால், 93 வயதான இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் 98 வயதான அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். இங்கிலாந்தில் 11 ஆக இருந்த கரோனா பலி ஒரேநாளில் 22 ஆக உயர்ந்து விட்டதால் வயதானவர்களை பாதுகாக்க இங்கிலாந்து அரசு எடுத்த அவசர நடவடிக்கை இது.


கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகனில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறன்று போப் பிரான்சிஸ் சிறப்பு மாளிகையில் இருந்து ஆசிர்வாதமும் ஜெபமும் செய்வார். அவரது பிரார்த்தனையை கேட்க லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். கரோனா காரணமாக, கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. அவர் ஆளில்லாத மைதானத்தில் ஆசிர்வாத பிரச்சாரம் செய்தார். ஈஸ்டர் திருநாளிலும் காணொலி மூலம் ஜெபக்காட்சியை பார்த்து அருள் பெறுமாறு கத்தோலிக்கர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. அது நெகட்டிவ் எனவும் அவருக்கு கோவிட்-19 இல்லை எனவும் வந்ததால் அமெரிக்கர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எனினும் அமெரிக்கா, எமர்ஜென்சி நிலையில் உள்ளது. கடந்த மாதம் மலேசியாவில் இஸ்லாமியர்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் பங்கெடுத்த 243 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துவிட்டன. உலகமெங்கும் மக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டன. எல்லா நாடுகளிலும் கரோனா சோதனைகள் கடுமையாக்கப்பட்டதால் ஏர்போர்ட்களில் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்தது.

 

 

corona virus



கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக அறிவித்த ஜெர்மனியன்  Cure Vac கம்பெனியை பல மில்லியன் டாலர் கொடுத்து கடத்திச் செல்ல அமெரிக்கா முயல்கிறது என புகார்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் உள்ள மருத்துவ ஆய்வகங்களும் கரோனா தடுப்பு மருந்துக்கான தீவிர ஆராய்ச்சியில் உள்ளன. சர்வதேச நிலைமைகள் இப்படி இருக்க இந்தியாவிலும் பிரதமர் மோடி கரோனாவை கட்டுப்படுத்த நல்ல யோசனை தந்தால் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். நாடு முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கூடுவதற்கு தடை விதித்திருக்கிறார்கள். பள்ளி-கல்லூரிகள் தொடங்கி பார்கள் வரை இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசும் மத்திய அரசின் உத்தரவை வழக்கம் போல் பின்பற்றி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கை கழுவும் சானிடைசர், முகத்தில் அணியும் மாஸ்க் உள்ளிட்டவற்றை பதுக்குவதும், அதிக விலைக்கு விற்பதும் கடும் நடவடிக்கைக்குரிய செயல் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அரசின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லையென சமூக வலைத்தளங்களிலும் தனியார் தொலைக்காட்சி விவாதங்களிலும் வரும் மருத்துவர்கள் விமர்சிக்கிறார்கள்.

கரோனா பாதிப்புள்ளதா என இரண்டாயிரம் பேருக்கு கேரளாவில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 750 பேருக்கு கரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அரசாங்க மருத்துவ வசதிகள் குறைவான உத்தரப்பிரதேசம் 300 பேர்களுக்கு கொரோனா சோதனை நடத்தியுள்ளது. மகாராஷ்டிரா அரசு 850 பேருக்கு கொரோனா சோதனை நடத்தியிருக்கிறது. தெலுங்கானாவில் கூட 850 நோயாளிகளை அம்மாநில அரசு கொரோனா சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை 88 நோயாளிகளைத் தான் கொரோனா நோய் அறிகுறிகளுக்காக பரிசோதித்திருக்கிறார்கள். அதில் 19 பேருக்கு கோவிட்-19 நோயின் அறிகுறிகள் தெரிய வந்திருக்கிறது. 

எனினும், 88 பேருக்கு 19 பேர் என்றால் இன்னமும் அதிகமானவர்களை தமிழக அரசு பரிசோதித்தால் நிறைய நோயாளிகள் தெரிய வருவார்கள் என்கிறார் சென்னை மாநகராட்சியின் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரியான சி.பி.குகானந்தம். இந்தியா முழுவதும் வெறும் 60 பரிசோதனைக் கூடங்கள்தான் இயங்குகின்றன. அதில் தினமும் 5,000 நோயாளிகளின் ரத்த மாதிரிகள்தான் பரிசோதிக்க முடியும். ஆனால் 60 முதல் 70 நோயாளிகளின் பரிசோதனை தான் இங்கு நடத்தப்படுகிறது.

கொரோனாவை முழுவதுமாக எதிர்கொண்ட சீனாவில் பார்க்குமிடமெல்லாம் ஜுரத்தை குணமாக்கும் மருத்துவமனைகளும் பரிசோதனைக் கூடங்களும் அமைக்கப்பட்டன. அதேபோல் தென்கொரியாவில் ஒருநாளில் 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்தியாவில் வெறும் 60 முதல் 80 பேருக்கு மட்டும் கொரோனா சோதனை நடத்தப்படுவது, இந்த நோயை கண்டுபிடிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உதவாது. மாறாக இந்த நோய் பெருகத் தான் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

"தமிழகத்தில் நான்கு இடங்களில் கோவிட் 19 சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் கேரளாவை விட அதிக மருத்துவ வசதி கொண்ட மாநிலம். தமிழகம் எத்தனையோ தொற்று நோய்களை சந்தித்து சமாளித்துள்ளது. கொரோனாவை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்'' என்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷும் இதனை உறுதிப்படுத்துகிறார். "மத்திய அரசு எச்சரித்துள்ள நாடுகளில் இருந்து விமானத்தில் வருகிறவர்களை 14 நாட்கள் தனியறையில் வைத்து பரிசோதித்த பிறகே வெளியே அனுப்புகிறோம்' என்கிறார் அமைச்சர். அதே நேரத்தில், பதற்றத்தைக் குறைப்பது என்ற பெயரிலும், அரசுக்கு அவப்பெயர் வரக் கூடாது என்பதாலும் தமிழகத்தில் தொற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காண்பிப்பது என்பது ஜெயலலிதா ஆட்சியிலிருந்தே தொடர்கிறது. சிக்குன்குன்யா, பன்றிக் காய்ச்சல் பரவியபோது, அதனை நேரடியாக சொல்லாமல் மர்ம நோய் என்றே அரசு குறிப்பிட்டது. காலராவாக இருந்தாலும் சரி, வெறி நாய்க்கடி மரணம், குடல் புழுக்களால் ஏற்படும் பேதி, அம்மை, டி.பி., எய்ட்ஸ் என எதுவாக இருந்தாலும் அதில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படும் என்கிறார்கள் தமிழகத்தை அறிந்த சுகாதார வல்லுநர்கள்.


சென்னையில் பணக்காரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றில் பணிபுரியும் அந்த டாக்டர் நம்மிடம், "எனக்குத் தெரிந்து 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. அவர்களை வீட்டிலிருந்து சிகிச்சை பெற சொல்லி அரசு டாக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இது கரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி. மறைப்பதற்கு கரோனா தனியாக ஒதுங்கும் ஒரு நோயல்ல. தமிழகத்தில் கரோனா நோய் இருப்பதாக சுமார் 2000 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள் என சொல்லும் அரசு வெறும் நூறுக்குள் அடங்கிய ரத்த மாதிரிகளை மட்டும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருப்பது ஏன்?

பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டது என அலட்சியம் காட்டாமல் தமிழக அரசு மருத்துவமனைக்கு வருபவர்களிடம் மட்டும் சோதனை நடத்தாமல் தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் சோதனை நடத்தாவிட்டால் நிலைமை மிகவும் விபரீத மாகிவிடும்'' என எச்சரிக்கிறார்.

மருத்துவர்கள் பலரும் இதே எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வை வலியுறுத்துகின்றனர். உலகை அச்சுறுத்தும் கரோனாவிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது. பயமுறுத்தவும் கூடாது, உண்மையை மறைக்கவும் கூடாது. மனித குலம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலை நம்பிக்கையுடனும் மருத்துவத்தின் துணையுடனும் தமிழகம் சமாளிக்கும்.