''இரண்டு பக்க ஆதரவாளர்களை துாண்டிவிட்டு, தலைவர்களுக்குள் தவறான புரிதலை ஏற்படுத்தி, குழப்பம் விளைவிப்பது, எதிர்க்கட்சியினருக்கு கைவந்த கலை. இதைவிட, இந்தியாவில் அதிகமாக செய்து வெற்றி கண்டது தான், தி.மு.க., தற்போது நாடியிருக்கும், 'ஐ பேக்' நிறுவனம்.
இந்நிறுவனம், இதை கச்சிதமாக செய்கிறது. நம் கட்சியினர், இந்த சூழ்ச்சியை புரிந்து, அவர்கள் வீசும் வலையில் விழக்கூடாது என சென்னை, மயிலாப்பூர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ., நடராஜ், தன் முகநுால் பக்கத்தில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையத்தளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்ட தி.மு.க.வின் மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா,
''தேர்தல் நெருக்கிவிட்டதால் தேர்தல் பணிகளில் திமுக ஈடுபட்டுள்ளது. மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அடுத்தக் கட்சியில் என்ன நடக்கிறது என்று பார்க்கவோ, அதைப் பற்றி பேசவோ எங்களுக்கு நேரமில்லை. அதைப்பற்றிய கவலையும் இல்லை.
இவர்களை கலைக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்றால் ஜெயலலிதா மறைந்த உடனேயே அந்த வேலையை செய்திருக்கலாம். அந்த மாதிரியான கீழ்த்தரமான அரசியலை நாங்கள் பண்ணமாட்டோம் என்பதைத்தான் திமுக சொன்னது. திமுக தலைவர் அப்போதே சொன்னார், பின்வாசல் வழியாக திமுக செல்லாது என்றார். கலைப்பது, உடைப்பது என்பதை ஆட்சியின் ஆரம்ப காலத்தில் செய்யாதவர்கள், ஆட்சியின் இறுதி காலத்தில் செய்வார்களா?
அவர்களுக்குள் ஈகோ மோதல் நடக்கிறது. அங்கு எது நடந்தாலும் திமுகதான் காரணம் என்று சொல்லுவது காலம் காலமாக அவர்கள் செய்யும் அரசியல். அவர்கள் வீட்டில் கல்யாணம், காட்சி, நல்லது கெட்டது எது லேட்டாக நடந்தாலும் திமுகதான் காரணம் என்பார்கள். அப்படி சொல்லி பழகியவர்கள் அவர்கள்.
எதற்கெடுத்தாலும் திமுகவை இழுப்பவர்களுக்கு இந்த விஷயத்திலும் திமுகவை இழுத்து பேசியது புதிதல்ல. ஏற்கனவே போலீஸ் அதிகாரியாக இருந்து பல்வேறு பஞ்சாயத்து பண்ணியவர். பஞ்சாயத்து பண்ணிய அனுபவம் அதிகம் இருக்கும். திமுகவை குறை சொல்லுவதை விட்டுவிட்டு அவர்கள் தலைவர்களை அழைத்து ஆக்கப்பூர்வமான பஞ்சாயத்து பண்ணலாம்'' என பதிலடி கொடுத்துள்ளார்.