தயான் சந்த் ஹாக்கி உலகின் மந்திரக்காரன். 29.08.1905ல் பிறந்த இவர் அலகாபாத்தைச் சேர்ந்தவர். தயான் சந்த் தனது 16 வயதில் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவத்தில் இணைந்தார். ராணுவத்தில்தான் அவர் ஹாக்கி விளையாட தொடங்கினார். இராணுவத்தில் சேர்வதற்கு முன்பு ஹாக்கி விளையாடியதாக எனக்கு நியாபகம் இல்லை என அவரே குறிப்பிட்டிருக்கிறார். அவரது இயற்பெயர் தயான் சிங், இராணுவத்திலிருக்கும்போது இரவு நேரத்தில்தான் பயிற்சி மேற்கொள்வார். இதனால் அவரது சக வீரர்களால் அவர் தயான் சந்த் என அழைக்கப்பட்டார். சந்த் என்றால் ஹிந்தியில் சந்திரன்.
ஹாக்கியில் 400ற்கும் மேற்பட்ட கோல்கள் அடித்த ஒரே வீரர் இவர்தான். இதனால்தான் இவரை ஹாக்கியின் மந்திரக்காரன் எனக் குறிப்பிடுகின்றனர். 22 (1926-1948) வருடங்கள் ஹாக்கி விளையாடிய இவர், ஒலிம்பிக் போட்டிகளில் 101 கோல்களும், மற்ற போட்டிகளில் 300க்கும் அதிகமான கோல்களும் அடித்துள்ளார்.
தயான் சந்த்தின் ஆட்டத்தை கண்டு வியக்காதோர் ஒருவருமிலர். இதில் ஹிட்லரும் அடக்கம். ஹிட்லர் அத்தோடு நிற்கவில்லை. ஜெர்மன் குடியுரிமையை ஏற்றுக்கொண்டு, ஜெர்மனிக்காக விளையாட வேண்டும், ஜெர்மனியின் இராணுவத்தில் கர்னல் பதவியும் அளிப்பதாக கூறினார். ஆனால் அதை தயான் ஏற்கவில்லை. தான் நாட்டிற்காக மட்டுமே விளையாடுகிறேன், பணத்திற்காக அல்ல என தயான் கூறியதாகவும் கூறுகின்றனர். கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மன் தயான், கிரிக்கெட்டில் ரன்களைக் குவிப்பதைப்போல் கோல் அடித்துக்கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
தயானின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான மற்றும் அவரது திறமையை உலகறியச் செய்த சம்பவங்களுல் ஒன்று. அவர் ஆட்டத்தைக்கண்ட நெதர்லாந்து அதிகாரிகளில் அவர் ஏதோ விதிமீறலில் ஈடுபடுகிறார் என நினைத்தது. அதனால் அவரது ஹாக்கி பேட்டை உடைத்து அதனுள் காந்தம் ஏதேனும் உள்ளதா எனப் பார்த்துள்ளது. உடைத்துப்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏனெனில் அதனுள் அப்படியாக எதுவும் இல்லை. அந்தளவுக்கு அவர் பந்து தன்னைவிட்டு மீறிப்போகாமல் பார்த்துக்கொள்வார். இப்படியாக பல சாதனைகளையும், சரித்திர நிகழ்வுகளையும் பதித்த தயான் சந்த் டிசம்பர் 3, 1979ல் இறந்தார். ஹாக்கி உலகின் நாயகனான தயான் சந்த்தின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது நடுவண் அரசு. ஹாக்கியில் இந்தியா தலைநிமிர்ந்தது அவரது காலகட்டத்தில்தான். அவருக்கு பாரதரத்னா வழங்காதது அரசுக்கான இழுக்கு...