Skip to main content

சிலை வைப்பதும், பெயர் மாற்றுவதும்தான் பாஜகவின் வளர்ச்சியா?

Published on 15/11/2018 | Edited on 12/12/2018

படேலுக்கு சிலை வைத்தால் இந்தியாவின் ஒற்றுமை பாதுகாக்கப்படும் என்பதுபோல மோடி முழக்கமிட்டார். ரூ.3 ஆயிரம் கோடி செலவிட்டு, சீனாவில் செய்யப்பட்ட சிலையை குஜராத்தில் மிகுந்த ஆடம்பரமாக திறந்துவைத்தார்.

 

 

bbb

 

 

அவர் தொடங்கிய அந்த சிலை விளையாட்டை, இந்து மதத்தின் பெருமையைக் காப்பாற்ற ராமருக்கு சிலை வைக்கப்போவதாக அறிவித்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாமியார் முதல்வர் ஆதித்யநாத்தும் தொடர்ந்திருக்கிறார்.

 

அவர் அப்படி அறிவித்த நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியோ இப்போது காவிரித்தாய்க்கு சிலை வைக்கப்போவதாக அறிவித்துள்ளார். சிலைகளை வைத்து சுற்றுலாவை வளர்க்கப் போவதாக குமாரசாமி அறிவித்துள்ளார். நல்லவேளை காவிரித்தாயை வைத்து கன்னடர்களின் ஒற்றுமையை வளர்க்கப் போவதாக கூறவில்லை.

 

 

bb

 

 

ஒருபக்கம் இப்படி சிலைகள் வைக்கும் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற நகரங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை மாற்றும் விளையாட்டிலும் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. இஸ்லாமியர்கள் உருவாக்கிய பல நகரங்களின் பெயர்களை இந்துப் பெயர்களாக மாற்றுவதன் மூலம் இந்தியா இஸ்லாமியரின் பிடியில் இருந்ததை மறைத்துவிடலாம் என்று பாஜக நினைக்கிறதா என்பது தெரியவில்லை.

 

தங்களுடைய இந்த நடவடிக்கைகளை எதிர்த்தால் அவர்களை இந்துமத விரோதி என்று முத்திரை குத்தி அரசியல் ஆதாயம் தேடவே பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது என்று வரலாற்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

இந்த பெயர் மாற்றும் விளையாட்டை தங்களுக்கு மட்டுமே உரியதாக காட்டவும் பாஜக தவறவில்லை. ஆம், மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவதற்காக அந்த மாநிலத்தின் சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் இதுவரை நிறைவேற்றவில்லை. பங்களா என்ற பெயர் பங்களாதேசம் என்ற பெயருக்கு இணையாக இருப்பதாக மத்திய அரசு விளக்கம் கூறியிருக்கிறது.

 

bb

 

 

மேற்கு வங்கம் என்ற பெயரை மாற்றப்போவதாக 2011 ஆம் ஆண்டிலேயே மம்தா வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது மாநிலத்தின் பெயரை பஸ்சிம்பங்கா என்று மாற்றப்போவதாக கூறியிருந்த மம்தா, 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார். அதில், ஆங்கிலத்தில் பெங்கால் என்றும், வங்கமொழியில் பங்களா என்றும், ஹிந்தி மொழியில் பெங்காலி என்றும் அழைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

 

பின்னர் மூன்று மொழியிலும் ஒரே பெயரில் அழைக்கும் வகையில் தீர்மாநத்தை மாற்ற யோசனை தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பங்களா என்ற பெயர் மாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போது, பங்களா என்ற பெயர் மாற்றத்தை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.

 

பங்களா என்பது ஒரு மொழி என்றும் அதை ஒரு மாநிலத்தின் பெயராக மாற்ற முடியாது என்று மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியிருக்கிறார்.

 

பெயர் மாற்றத்திற்கு மம்தா கூறிய காரணங்களில் மேற்கு வங்கம் என்ற பெயர் மாநிலங்களின் பட்டியலில் கடைசியாக வருகிறது. பங்களா என்றால் இரண்டாவது இடத்தில் வந்துவிடும் என்று கூறினார். மம்தாவின் முடிவை மத்திய அரசு ஏற்க மறுப்பதற்கு ஒரே காரணம்தான் கூறப்படுகிறது. இந்த பெயர் மாற்றம் மம்தாவின் பெயரை மேற்கு வங்க வரலாற்றில் இடம்பெறச் செய்துவிடும் என்பதுதான் பாஜகவின் நிராகரிப்புக்கு காரணம் என்கிறார்கள்.

 

தமிழ் பேசும் மக்கள் நிறைந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றியதைப்போல, பங்களா மொழி பேசும் மக்கள் நிறைந்த மாநிலத்துக்கு பங்களா என்று பெயர் சூட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

 

பங்களா என்று பெயர் மாற்றப்பட்டால், தமிழ்நாடு, தெலங்கானாவுக்கு அடுத்தபடியாக மொழியை மாநிலப் பெயராக கொண்ட மூன்றாவது மாநிலமாக இடம்பெறக்கூடும்.