Skip to main content

எல்லா காமெடியையும் நீங்களே பண்ணிட்டீங்கனா அப்பறம் நாங்க எதுக்கு... 

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

நாடாளுமன்ற பிரச்சாரப்புயல் ஓய்ந்து இடைத்தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கிறது. பிரச்சாரம் நடப்பது நான்கு தொகுதிகளில்தான் என்றாலும் அங்கு அரசியல்வாதிகள் பேசும் பேச்சு தமிழகம் முழுவதும் சென்று சேர்கிறது.
 

dmk


இந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களை நன்கு கவனித்திருந்தால் ஒரு விஷயம் பிடிபட்டிருக்கும். முன்பெல்லாம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் என்றால் அதில் பலவகையான பேச்சாளர்கள் இருப்பர். முதன்மை பேச்சாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், தலைவர்கள்... இவர்களெல்லாம் கொள்கை சார்ந்து, மிகவும் உணர்ச்சி மிகுந்து பேசுவர். இதைத்தாண்டி இரண்டாம் கட்ட பேச்சாளர்கள், நகைச்சுவை பேச்சாளர்கள், நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள் ஆகியோரும் இருப்பர். இவர்கள் சிலர் கொள்கை குறித்தும், சிலர் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தும், சிலர் நகைச்சுவையாகவும் பேசுவர். 

முன்பெல்லாம் திமுக பிரச்சாரக்கூட்டங்களில் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் பேச்சு என்றால் கூட்டம் பெரிதாகக் கூடும். ஆனால், இவர்களது பேச்சில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளோ கோட்பாடுகளோ இருக்காது. தொண்டர்களை குஷிப்படுத்தும் விதமாக இறங்கி இரண்டாம் மூன்றாம் தரமாகப் பேசுவார்கள் இதுபோன்ற பேச்சாளர்கள்.

ஒவ்வொரு கட்சியிலும் இப்படிப்பட்ட பேச்சாளர்கள் உண்டு என்றாலும் இவர்கள் இருவரும் அந்த வரிசையில் பிரபலமானவர்களாக இருந்தார்கள். இவர்கள் ஒரு வகையென்றால் ஒவ்வொரு கட்சியிலும் நகைச்சுவை பேச்சாளர்கள் என்ற வகையொன்று உண்டு. குண்டுகல்யாணம், சிங்கமுத்து, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி என பல நகைச்சுவை நடிகர்களும் பல்வேறு கட்சிகளில் பேச்சாளர்களாகத் திகழ்கிறார்கள். இது அந்தக் காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. நடிகர் வடிவேலுவும் திமுக மேடைகளில் முழங்கியது குறிப்பிடத்தக்கது. 
 

vetrikondan


இப்படி, காமெடியாகப் பேசுவதற்கு என்றும் எதிர்க்கட்சியினரை தரைமட்டமாகத் திட்டுவதற்கு என்றும் வெவ்வேறு ரக பேச்சாளர்கள் இருப்பார்கள். ஆனால் தற்போது இவ்வகையினருக்கு இடம்கொடுக்காமல் நகைச்சுவையாகட்டும் இறங்கி விமர்சிப்பதாகட்டும் அனைத்தையுமே அமைச்சர்கள் உள்ளிட்ட முதன்மை பேச்சாளர்களே பேசுகின்றனர். திமுகவில் இந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் களத்தில் தீவிரமாகவும், முதன்மையாகவும் இருந்துவரும் உதயநிதி ஸ்டாலின் தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தமிழச்சி தங்கபாண்டியனை அழகான வேட்பாளர் எனக்கூறிவிட்டு, அறிவில் சொல்கிறேன் என்றார். அது அப்போது மீம் மெட்டீரியலானது.

இப்போது அதிமுகதான் இவற்றில் முதலிடம், அமைச்சர்கள் அனைவரும் சென்ற இடங்களிலெல்லாம் எதையாவது பேசித்தள்ளுகின்றனர். ஒரு பக்கம் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி என இந்த வரிசையை நீட்டிக்கொண்டே போகலாம் அந்தளவிற்கு அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக ஜெயலலிதா மறைந்தபிறகு பேச ஆரம்பித்தவர்கள்தான் இவற்றில் முக்கிய இடத்தை பிடிக்கின்றனர்.

செல்லூர் ராஜூ மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், "நடிகர் நடிகைகள் பிரச்சாரம் செய்தால் கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள், கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. குஷ்புவுக்கு வயதாகிவிட்டது. பிரதமர் மோடிதான் எங்கள் வீட்டு மாப்பிள்ளை. அவருக்கு எங்களால் பெண் கேட்டு செல்ல முடியும். ஆனால் திமுக கூட்டணியில் யார் மாப்பிள்ளை என்று தெரியாத நிலையில், எப்படி பெண் தருவார்கள்?  அதிமுக, திமுக என மாறி, மாறி சவாரி செய்த மார்க்சிஸ்ட் கட்சி ஒரு சொங்கிக் கட்சி" என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.
 

admk


திண்டுக்கல் சீனிவாசன், பாமகவின் சின்னத்தை மாம்பழம் என்று கூறுவதற்கு பதிலாக ஆப்பிள் என்று கூறினார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்து அதையே கூறினார். அதற்கு முன்பு "பிரதமர் நரேந்திர மோடி ஒரு பக்கம் போட்டியிடுகிறார், மோடியின் பேரன் ராகுல் காந்தி இன்னொரு பக்கம் போட்டியிடுகிறார்" எனக்கூறி அனைவரையும் திகைப்படைய செய்தார்.

ராஜேந்திரபாலாஜி, 'மோடியை எதிர்த்தவர்கள் லூசு பிடித்துச் சுற்றி வருகின்றனர்', 'எடப்பாடியை எதிர்த்தால் டெட்பாடி', ‘இந்தியாவின் ஸ்டண்ட் மாஸ்டர் மோடி’, 'தேர்தல் யுத்தத்தில் மோடிதான் எங்களின் கிருஷ்ணர், அர்ஜூனராக முதல்வர் பழனிசாமி உள்ளார்', 'மோடி எங்கள் டாடி' என்றெல்லாம் கூறி கூடிய மக்களை பதற வைத்தார். ஒரு கட்டத்தில் ராஜேந்திரபாலாஜி வந்தால் அங்கு நல்ல எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு என அவர் பக்கம் கவனம் திரும்பியது.

கூட்டணிக்கு முன்பு அதிமுகவை விமர்சித்த கட்சித் தலைவர்களெல்லாம் தற்போது மிகவும் திண்டாடி வருகின்றனர். அந்தவகையில் தேமுதிக, பாமக கட்சிகளும் விதிவிலக்கல்ல. முன்பு இவர்கள் அதிமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்தவர்கள். தற்போது அதே அதிமுக கூட்டணியில் இருக்கின்றனர். தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, பாமகவின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் அவ்வப்போது திமுகவை விமர்சிக்கும் போது, திமுக என்று கூறுவதற்கு பதிலாக அதிமுக என்று கூறி விமர்சனத்தை கிளப்புவார்.
 

admk


பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பன்ச்கள், எதுகை மோனை வசனங்கள், போன்றவற்றை பேசினார், பேசி வருகிறார். இந்த லிஸ்ட்டில் நாம் தவிர்க்கமுடியாதவர் மன்சூர் அலிகான், திண்டுக்கல்லில் அவர் அரசு வேலைகளில் மட்டுமே  ஈடுபடவில்லை. மற்ற அனைத்து வேலைகளையும் செய்துவிட்டார். குதிரை ஓட்டுவது முதல் கொத்து புரோட்டா போடுவதுவரை, செருப்பு தைப்பது முதல் சேல்ஸ் செய்வது வரை அனைத்து வேலைகளையும் பிரச்சாரத்துக்காக செய்துகொண்டிருக்கிறார். இப்படியாக இந்தத் தேர்தலில் இவர்களே நிறைய உளறியும், நகைச்சுவையாகப் பேசியும், நகைச்சுவை பேச்சாளர்கள் மற்றும் இரண்டாம் கட்ட பேச்சாளர்கள் ஆகியோருக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டனர் என்பதே உண்மை.