குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 12 ஆம் தேதி இமாச்சலப்பிரதேசத்திலும், அடுத்த மாதம் 1 ஆம் மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத்திலும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பொதுவாக, இந்த மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு இடையே இருமுனைப் போட்டி நடந்து வந்த நிலையில், ஆம் ஆத்மியின் வருகையால் தற்போது மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
இந்த இரு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் இழந்த தங்களது அதிகாரத்தை மீட்டெடுக்கக் கடுமையாகப் போராடி வருகிறது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். இமாச்சலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச்செயலாளர் தரம்பால் தாக்கூர் காந்த் உட்பட முக்கிய நிர்வாகிகள் 26 பேர் பாஜகவில் இணைந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குஜராத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத்தில் உதய்ப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 10 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மூத்த தலைவர் மோகன் சிங் ரத்வா (78) தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ள அவர், வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மோகன் சிங் ரத்வா, எனது ஆதரவாளர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன் என்றும், பழங்குடியின மக்களுக்கு பாஜக அரசும், பிரதமர் மோடியும் செய்யும் பணிகளால் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைந்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பாஜக விரும்பினால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இப்படி கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் அடுத்தடுத்து காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைய, தினந்தோறும் புதுப்புது வகையில் சரிந்து கொண்டிருக்கும் காங்கிரஸ், பாஜகவை எப்படி எதிர்கொள்ளப் போகிறது எனக் கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.