''2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிகளில் பெரிய மாற்றம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கூடுதல் சுமை என அகில இந்திய காங்கிரஸ் தனித்து விடப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை'' என நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். மேலும், ''அடிக்கடி கை கழுவுங்கள், இது கரோனா சொல்லிய பாடம். நிரந்தரமாய் கையை கழுவுங்கள், இது மோடி ஜி, பீகாரில் உணர்த்திய பாடம். வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்'' என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான விஜயதரணி நக்கீரன் இணையதளத்திடம் கூறுகையில்,
''2021 தமிழக சட்டமன்றத் தேர்தலை பீகார் தேர்தலோடு ஒப்பிடக் கூடாது. தமிழகம் எப்போதும் பாஜகவை ஆதரிக்காத மாநிலம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பாஜகவுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.
தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் பல ஆண்டு காலமாகவே இடம்பெற்றுள்ளது. தி.மு.க - காங்கிரஸ் கட்சி கூட்டணியைப் பிரிக்க யாராலும் முடியாது. பா.ஜ.க சதி வலைகள் விரிக்கப்படுவது இப்போது உணர முடிகிறது. இதற்கெல்லாம் ஒருபொழுதும் தி.மு.க இசைந்துகொடுக்காது. தி.மு.க, காங்கிரஸ் மட்டுமல்ல, தி.மு.க தலைமையில் உள்ள மற்ற கட்சிகளும் இசைந்து கொடுக்காது. கூட்டணியில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்தோடு பயணிக்கிற விதத்தில் உள்ளனர்.
ஏதாவது ஒரு சதி வலையை, பா.ஜ.க விரிக்கும். அதனால்தான் குஷ்பு இப்படிக் கூறியுள்ளார். குஷ்பு கனவு தமிழகத்தில் பலிக்காது. தி.மு.க தலைமையிலான கூட்டணி ஒற்றுமையாக நின்று பாசிச சக்திகளைத் தூக்கி எறியும். இதனை குஷ்பு உணர்வார். கூட்டணி வலுவாக உள்ளது என்பதை வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுக்கு மக்கள் புரிய வைப்பார்கள்'' எனக் கூறியுள்ளார்.