அழகான அந்த ரோசப்பூ போன்ற தேகம் கொண்ட குழந்தை தமிழகத்தின் மலைவாசஸ்தலமான கொடைக்காணலில் உள்ள, இந்தியாவின் மிக முக்கிய பிரமுகர்களின் வாரிசுகள் பயிலும் பிரசன்டேஷன்பள்ளியில் தான் படித்துக்கொண்டு இருந்தார். தாய் – தந்தை – உடன்பிறந்தவர்களை பிரிந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டிவந்து அந்த மலைவாசஸ்தல பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, அவருக்கு துணையாய் இருந்தது நண்பர்கள் தான். சிட்டிகை போட்டால் படிக்கும் இடத்திலும் வேலைக்காரர்கள் வரும் ராஜவம்சம். மன்னராட்சி ஒழிக்கப்படாமல் இருந்திருந்தால் டெல்லி இவரது ஆட்சியின் கீழ்தான் இருந்திருக்கும். கொடைக்கானல் பிரசன்டேஷன் பள்ளியை சகாரா பாலைவனத்திலோ அல்லது காஷ்மீர் தால் ஏரி அருகிலோ தனக்கு விருப்பமான இடத்தில் அமைத்திருப்பார். 'அந்த அதிகாரம் தற்போது தம்மிடம்மில்லை, தன் குடும்பத்திடமும் கிடையாது. அதைப் பெறுவதற்காகத்தான் தன் தாய் போராடிக்கொண்டு இருக்கிறார். வருங்காலத்தில் அதிகாரத்தில் நாம் அமர வேண்டும்' என்கிற வேட்கை கொடைக்கானலில் படிக்கும்போதே அவரது மனதில் நீங்கா இடம் பிடித்தது. அந்த வேட்கை பிற்காலத்தில் நிறைவேறியது. கொடைக்காணலில் சபதமெடுத்து, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து ஆசையை நிறைவேற்றிக்கொண்ட மன்னர் வாரிசு வசுந்தரா ராஜே.
ராஜஸ்தான், இந்தியாவின் மேற்கு பகுதி மாநிலங்களில் ஒன்று. இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர வைத்த பொக்ரான் அணுகுண்டு இந்த மாநிலத்தில் உள்ள சகாரா பாலைவனத்தில்தான் வெடிக்க வைக்கப்பட்டது. அதனால் இன்றுவரை உலக நாடுகள் கண்காணிக்கும் பகுதியாக இருக்கிறது இப்பாலைவனம். சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் பகுதியும் ராஜஸ்தான்தான். காரணம் திரும்பிய பக்கமெல்லாம் அழகான அரண்மனைகள். இன்றளவும் பழமை மாறாமல் அப்படியே உள்ளன. அதனைப் பார்க்க சுற்றுலாப்பயணிகள் பெருமளவில் ராஜஸ்தான் வருகின்றனர். இப்படி பெருமைப்பட்டுக்கொள்ள ராஜஸ்தான் மக்களுக்கும், அரசுக்கும் ஆசையிருந்தாலும் உள்நாட்டு மக்கள் அதிக அச்சத்துடனும், வெறுப்புடனும், கொஞ்சம் ஆச்சர்யத்தோடும் பார்க்கும் மாநிலம் ராஜஸ்தான்.
இந்திய வரைபடத்தில் தலைப்பகுதியில் அமைந்துள்ள மாநிலமான ராஜஸ்தானுக்கும், அடிப்பாகத்தில் கால் பகுதியில் அமைந்துள்ள தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அது, மைசூரின் முன்னாள் ராஜ குடும்பத்தின் வாரிசான யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையாருக்கும் ராஜஸ்தானின் துன்கார்ப்பூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த திரிஷிகா குமாரிக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் அவர்களும் – நாமும் சம்மந்திகளாகியுள்ளோம். கோடி கோடியாய் பணம், கிலோ கணக்கில் தங்கம் வரதட்சணையாக தந்து பெண்ணை அனுப்பியுள்ளது ராஜஸ்தான் முன்னாள் மன்னர் குடும்பம். தெற்குக்கும் ராஜஸ்தானுக்கு இன்னொரு தொடர்பும் உண்டு. ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கொள்ளையர்கள் தமிழகத்தில் தங்கள் கைவரிசையைக் காட்டி ஒரு கட்டத்தில் நம் மாநிலத்தையே மிரள வைத்திருந்தனர். இப்படி தொடர்புகள் இருப்பது தெரிந்ததால்தானோ என்னவோ நீட் தேர்வு எழுத தமிழக பிள்ளைகளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு அனுப்பியுள்ளது சிபிஎஸ்இ போர்டு.
சிந்து சமவெளி நாகரிகம் செழித்திருந்த பகுதி ராஜஸ்தான். கி.மு. 405 முதல் 435 வரை ஆண்ட இந்திய - ஸ்கைதியர்களின் வழித்தோன்றல்களான மேற்கு சத்ரபதிகள் உஜ்ஜைனியைக் கைப்பற்றியதிலிருந்து சாகா வம்சம் ஆளத் தொடங்கியது. சாகா வம்சம் ஆளத் துவங்குவதற்கு முன்பு குர்ஜார் மக்கள் அதிகாரம் செலுத்தினர். பின்னர் வந்த ஆண்டுகள் அந்த சமூக மக்கள் அதிகாரம் குறைந்து அந்த சாதியை சேர்ந்தவர்கள் குறுநில மன்னர்களாகிவிட்டனர். ஜாட், மீனா, பில், ராஜபுரோகிதம், சாரானா, யாதவர், பிஸ்நோய் மற்றும் புல்மாலி ஆகிய சமூகத்தினர்கள் குறுநில மன்னர்களாக இருந்தனர்.
மைசூர் ராஜகுடும்பம் - ராஜஸ்தான் துர்க்காபூர் ராஜ குடும்பம் திருமணம்
அதன்பின் மவுரியப் பேரரசு, மாளவாக்கள், அர்ஜுன்யர்கள், குஷானர்கள், குப்தர்கள் மற்றும் ஹூணர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதன்பின் அதிகாரம் கைமாறி 400 ஆண்டுகள் ராஜபுத்திரர்கள் கட்டுப்பாட்டில் இன்றைய ராஜஸ்தான் பகுதிகள் இருந்தன. அவர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற சாளுக்கியர்களும் பார்மர்கள், சவுகான்களும் நடத்திய போர் ராஜஸ்தான் வரலாற்றில் அழிக்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்தது. முகலாயப் பேரரசர் அக்பர், ராஜஸ்தானை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தார். முகலாயர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்ததும் ராஜஸ்தான் பல பகுதிகளாக பிரிந்து மீண்டும் பல குறுநில மன்னர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. மராத்திய மன்னர்கள் ராஜஸ்தான் மீது படையெடுத்து அந்தப் பகுதிகளை தங்களது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். அதன்பின் ஆங்கிலேயர் வருகை அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவான ராஜபுதனா மண்டலத்தை சுதந்திரத்துக்கு பின்னர் வல்லபாய் பட்டேல், சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தபோது பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ராஜஸ்தான் பகுதியில் அமைந்திருந்த பல சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டப்படி 1956 நவம்பர் 1ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதயமானது.
இந்தியாவின் வடமேற்கில் ராஜஸ்தான் அமைந்துள்ளது. அதன் எல்லைகளாக பாகிஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மத்தியபிரசேதம், குஜராத் உள்ளன. தலைநகரம் ஜெய்ப்பூர். இந்த மாநிலத்தில் உள்ள ஒரே மலைவாசஸ்தலம் மவுண்ட் அபு நகரம் தான். ராஜஸ்தானின் பெரும்பான்மையான வடமேற்கு பகுதிகள் வறண்ட தார் பாலைவனத்தால் கவரப்பட்டிருக்கின்றன. இதனால் ராஜஸ்தானின் வானிலை, மழைக் காலத்தை தவிர மற்ற பருவங்களில் மிகவும் வறண்ட நிலையிலேயே இருக்கும். கோடைக்காலத்தில் 110 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும். ராஜஸ்தானின் மவுண்ட் அபு நகரம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இதமான வானிலையை கொண்டிருக்கும்.
இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜஸ்தானி முக்கிய மொழியாகும். ராஜஸ்தானி மொழிக் குடும்பத்தில் ராஜஸ்தானி, மார்வாரி, மால்வி மற்றும் நிம்மாடி ஆகிய மொழிகள் உள்ளன. பேசும் மொழியாகவும் அலுவல் மொழியாகவும் இந்தி இருக்கிறது. பெரும்பான்மை மக்கள் ராஜஸ்தானி மொழியையே பேசுவார்கள். இது தவிர பிலி, பஞ்சாபி மற்றும் உருது மொழிகளும் புழக்கத்தில் உள்ளன. ராஜஸ்தானில் பேசப்படும் மொழிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மையான மக்களால் ராஜஸ்தானி மொழியே பேசப்பட்டாலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதுதவிர முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்கள் சிந்தி என்ற மொழியில் உரையாடிக் கொள்கின்றனர். இந்த மொழி அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் இந்திய மொழியியல் அமைப்பு வைத்துள்ளது.
இது நில அமைப்பிலும் அரசாட்சி வரலாற்றிலும் ராஜஸ்தானின் பின்னணியாகும். ராஜஸ்தானில் முக்கிய சமூகமாக இருப்பவர்கள் ராஜபுத்திரர்கள். இவர்களைப் பற்றி தவறாகக் காட்டப்படுவதாகத்தான் 'பத்மாவத்' படத்துக்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த ராஜபுத்திரர்களின் பின்னணி என்ன, அவர்களுக்குப் போட்டியாக இருப்பது யார், பத்மாவத் படத்தில் காட்டப்பட்டது உண்மையா போன்ற இன்னும் பல தகவல்களோடு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா பற்றி அடுத்த பகுதியில் வரும் திங்கள் கிழமை (14-மே-18) காண்போம்.
அடுத்த பகுதி
பவாரியாக்கள்... பத்மாவத்... ராஜஸ்தானில் சாதி ஆதிக்கம்! முதல்வரைத் தெரியுமா #7
முந்தைய பகுதி