
“சாகப் போறோம்னு தெரிஞ்சுதான்.. எல்லாத்தயும் அனுபவிச்சிடனும்னு துடியா துடிச்சியா? வீடு தங்காம சுத்துனியா? மலை ஏறணும்.. மலை ஏறணும்னு காடு மேடெல்லாம் அலைஞ்சியே.. காட்டுத் தீயே உன் உசிர காவு வாங்கிருச்சே..”
-விருதுநகர் மாவட்டம் – வத்திராயிருப்பை அடுத்துள்ள மகாராஜபுரம் கிராமத்துக்கு, குரங்கணி விபத்தில் தீக்கிரையான அருண் பிரபாகரின் உடல் வந்து சேர்ந்தபோது, சொந்தபந்தங்கள் கதறினார்கள்.
சென்னையில் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றும் மனைவி சுரேகா, கணவனை சடலமாகப் பார்த்து மயங்கிச் சரிய, 8 வயது மகன் பிரணவ்வோ, சோகத்தை வெளிப்படுத்த தெரியாமல் அங்குமிங்கும் நடந்தபடி இருந்தான்.
“செத்தாலும் வாழ்ந்துட்டான்யா..” என்று பெருமிதப்பட்டார் அருண் பிரபாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அந்தக் கிராமத்துப் பெரியவர்.

அருண் பிரபாகர் கொண்டாடிய வாழ்க்கை இதுதான் –
படித்தோம்; பணியாற்றினோம்; குடும்பத்துக்காக வாழ்ந்தோம் என்ற சராசரி மனிதனாக இருக்க விரும்பவில்லை அருண் பிரபாகர். பரந்து விரிந்த உலகத்தில், சிறகு விரித்துப் பறக்கும் பறவையைப் போல வாழ வேண்டும் என்ற ஆசைப்பட்டார். அதுபோன்ற ஒரு வாழ்க்கைக்கு, அவருக்கு வழி காட்டியது சென்னை ட்ரெக்கிங் கிளப் என்ற பெயரில் இயங்கிய மலையேற்ற பயிற்சி அமைப்பு. காடு, மேடெல்லாம் ஏறி இறங்குவதில் அருண் காட்டிய தீவிரம், அவரை அந்த அமைப்பின் சிறந்த ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது. அவரது மலையேற்றத்தின் எண்ணிக்கை 2014-லிலேயே 100-ஐ கடந்துவிட்டது. மலையேற்றம் மட்டுமல்ல, ஆழ்கடலில் நீந்துவது, மோட்டார் பைக்கில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வது என, எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. லே, ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து பைக்கில் தொடங்கிய விரைவுப் பயணத்தை, 94 மணி நேரம் 25 நிமிடங்களில் கன்னியாகுமரியை அடைந்து நிறைவு செய்தார். லிம்காவின் தேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றார்.









அருண் பிரபாகரைப் போலவே திவ்யாவும், நிஷாவும் சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். மகளிர் தினத்தை வலிமையுடன் கொண்டாடுவோம் என்று அறிவித்து, மார்ச் 10 – 11 தேதிகளில், தமிழ்நாடு – கேரள எல்லையான கொழுக்குமலையில் 2 நாட்கள் மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்தது இவ்விருவர்தான். தற்போது நிஷா 99 சதவீத தீக்காயத்துடனும், திவ்யா 90 சதவீத தீக்காயத்துடனும் உயிருக்குப் போராடினர். இதில் திவ்யா தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிஸ்கோ சிஸ்டத்தின் ப்ராஜக்ட் மேனேஜரான, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட், சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் நிறுவனர் ஆவார். 40000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கிளப், லாப நோக்கமற்ற தன்னார்வ குழு என்று தன்னைப் பிரகடனப்படுத்தி உள்ளது. சென்னையில் வெள்ளம் வந்தபோது 130 பேர் உயிரைக் காப்பாற்றினார் பீட்டர் என்றெல்லாம் அப்போது செய்தியில் அடிபட்டார். குரங்கணி தீ விபத்தில் சிக்கி, மலையேறிய `10 பேர் இப்போது உயிரிழந்துவிட்ட நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, தலைமறைவாகிவிட்டார் பீட்டர். நீலாங்கரை போலீஸார் அவரைத் தேடி வருகிறார்கள்.
‘மலையேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் முறையான பயிற்சி பெற்றவர்கள் அல்ல; உரிய அனுமதி பெறாமல், மலைப்பகுதிகளுக்கு இளைஞர்களை அழைத்துச் சென்றார்கள்’ என, சென்னை ட்ரெக்கிங் கிளப் குறித்தும், அதன் நிறுவனர் பீட்டர் மீதும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பினாலும், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் ‘இவன் எங்களில் ஒருவன்! எங்கோ பிறந்த இவன், எங்களுக்கு இயற்கை மீதிருந்த காதலை அதிகமாக்கினான். மனிதர்களை இயற்கையோடு இணைந்து வாழச்செய்வதே இவன் நோக்கம். வசதி தேடி, வாழத் தெரியாமல் இருந்த மனங்களில், வழியில் கிடைப்பதெல்லாம் வரமென்று புரியவைத்தான். காட்டுத் தீ விபத்தின் உண்மை நிலையை மறைப்பதற்கு இவனைப் பலிகடா ஆக்கிவிட்டார்கள்.’ என்று பீட்டருக்காக உருகுகின்றனர்.
கை நிறைய சம்பாதித்தாலும், பெருநகர வாழ்க்கை என்பது பலருக்கும் இயந்திரத்தனமாகவே அமைந்துவிடுகிறது. இயற்கையை ரசிப்பதன் மூலம் அதிலிருந்து அவர்களால் விடுபட முடிந்தது. வார இறுதியிலோ, மாதக் கடைசியிலோ, புத்துணர்ச்சி பெற்று, பணிக்குத் திரும்புவதற்கான நல்லவழியாக, மலையேற்றத்தை தேர்வு செய்தார்கள். அதற்கும் இப்போது சோதனை வந்துவிட்டது.