மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த ஐந்து நாட்களாக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது நம்மிடம் பேசிய அவர், டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க, நாங்கள் 200 பேர் தயாராக இருந்தோம். ரயில் டிக்கெட் எடுத்திருந்தோம். 24 -ஆம் தேதி திடீரென போலீசார் எங்களை வீட்டுச் சிறையில் வைத்துவிட்டனர். 200 டிக்கெட்டுக்களும் வீணாகிவிட்டது.
காவல்துறை உயர் அதிகாரிகளிடம் டெல்லிக்குச் செல்ல எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரினோம். அவர்கள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் திருச்சியில் நடத்த உள்ளோம்.
இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். போராட்டத்தில் ஈடுபட்ட 223 பேரை மண்டபத்தில் அடைத்தனர். நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
பிரதமர் மோடி இரண்டு மடங்கு லாபம் தருகிறேன் என்று கூறினார். அவர் கூறியதுபோல் எங்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும். நெல் ஒரு கிலோ, 18 ரூபாய் 88 பைசா தருகிறார்கள். அதனை 42 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள். செய்யவில்லை. கரும்புக்கு ரூபாய் 2,750 தருகிறார்கள். அதனை 7,500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள். செய்யவில்லை.
அரசு ஒரு விலையை நிர்ணயித்துக் கொடுத்தால்தான் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் போய்விட்டால் அவர்கள் ஒப்பந்தத்தின்படி விலையைக் கொடுத்துவிடுவதாகச் சொல்லுவார்கள். ஆனால் தரம் குறைவு என்று சொல்லி விலையைக் குறைத்து ஏமாற்றுவார்கள்.
புதிய வேளாண் சட்டத்தை ஏற்க முடியாது. இவர்கள் சொல்லும் சட்டத்தை வைத்து சிவில் கோர்ட்டுக்குப் போக முடியாது. ஆர்.டி.ஓ., கலெக்டரிடம் போகச் சொல்கிறார்கள். அவர்கள் ஆளும் கட்சியினர் சொல்வதைக் கேட்பார்கள். அங்கு சென்றால் 100 -க்கு 99 சதவீதம் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்காது. ஆர்.டி.ஓ.வுக்கு இருக்கும் வேலைகளில் எங்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்பது கஷ்டம். நடைமுறைக்கு ஒத்துவராது. எனவே, நடைமுறைக்கு ஒத்துவாராத புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள் என்றார்.