தமிழக பாஜக தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. திருச்சி சூர்யா மற்றும் டெய்சி தொடர்பான ஆடியோ வெளியான நாளிலிருந்து மாநில பாஜகவில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், திருச்சி சூர்யா கட்சியிலிருந்து முழுவதுமாக தான் விலகுவதாகத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்களையும் அவர் அந்தக் கடிதத்தின் வாயிலாகத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் தாங்கள் தான் திமுகவுக்குப் போட்டி என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்தக் கருத்து தொடர்பாக திமுகவைச் சேர்ந்த குடியாத்தம் குமரனிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,
அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது தமிழகத்தில் பாஜக பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. இனி தமிழகத்தில் திமுகவா இல்லை பாஜகவா என்ற நிலையே இருக்கும். அதிமுக கட்சி நம்மோடு இனி போட்டியிட வாய்ப்பில்லை, தமிழகம் முழுவதும் வருகின்ற தேர்தலில் நம்முடைய வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை கூறியது போல இனி திமுக பாஜக இடையே தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
அண்ணாமலை சொல்வதைப் போல் எந்த நிகழ்வும் தற்போது நடைபெறவில்லை, திமுகவுக்கு போட்டியாக பாஜக எப்போதும் இருக்கப்போவதில்லை. இருக்கவும் இருக்காது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மட்டும்தான் போட்டி இருக்கும். தற்போது நிலைமையில் அதிமுகவே பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தற்போது தன்னை எம்ஜிஆர் போன்று நினைத்துக்கொண்டு சர்வாதிகாரம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார். அவர் ஒன்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா அல்ல. அவர் அதிமுகவில் ஒரு உறுப்பினர் என்ற அளவில் தான் அவரின் தகுதி இருக்கிறது. அவர் எந்தக் காலத்திலும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் இல்லை. எனவே திமுகவுடன் அதிமுக போட்டி என்ற நிலையே தற்போதைய சூழ்நிலையில் தடுமாறிக்கொண்டுள்ளது.
அண்ணாமலை பேச்சை எல்லாம் பெரிய சீரியராக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் வாயில் வந்ததை எல்லாம் பேசிக்கொண்டு இருப்பார். மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளி போல் அவர் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாத நிலையிலேயே தொடர்ந்து பேசி வருகிறார். அவரை அரசியல் கோமாளி என்று தான் நாம் அழைக்க வேண்டும். அந்த அளவுக்கு எந்த அரசியல் அறிவும் இல்லாமல் என்ன அந்த சூழ்நிலைக்குத் தோன்றுகிறதோ அதையெல்லாம் அவர் பேச வருகிறார். தமிழகத்தின் அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத அவர் இன்றைக்கு திமுகவின் போட்டி பாஜக எனக் கூறியுள்ளார். இதை அவர்கள் கட்சிக்காரர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவே அண்ணாமலையை ஒரு அரசியல் கட்சியின் தலைவராகக் கூட நினைக்கத் தகுதியில்லாதவர். அவர் வாயை வைத்துக்கொண்டு கட்சி நடத்திவிடலாம் என்று பார்க்கிறார். தொண்டர்களும், கட்சி இயக்கமும் ஒரு கட்சி வளர அடிப்படையான ஒன்று. ஆனால் பொய்யான தகவல்களைப் பரப்பி கட்சி வளர்க்க முடியாது என்பது கூட அண்ணாமலைக்குத் தெரியவில்லை, அவர் கட்சியைச் சார்ந்த எவரும் அவருக்குச் சொல்லியும் தரவில்லை. இன்றைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று என்று மாற்றி மாற்றிப் பேசும் அவர் எங்கே கட்சியை வளர்க்கப்போகிறார். அவர் வேண்டுமானால் பாஜக திமுகவுக்குப் போட்டி என்று மனதிற்குள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை என்று அவருக்கும் தெரியும், பாஜகவுக்கும் தெரியும். அவர்கள் கட்சிக்குள்ளேயே ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கிறது.
அதை மறைத்து திசைதிருப்ப இதை ஒரு ஆயுதமாக அவர்கள் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய பிரச்சனைகள் அவர்கள் கட்சிக்குள் எழுந்து வருகிறது. திருச்சி சூர்யா, டெய்சி என பல்வேறு பிரச்சனைகள் தினமும் அவர்கள் கட்சிக்குள் எழுந்து வருகிறது. யாரெல்லாம் அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்தார்களோ அவர்களே அண்ணாமலை மீது குற்றம் சொல்லும் நிலைமை கட்சிக்குள் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கள் பாஜகவில் அதிகம் எழுந்து வருகிறது. அவர்கள் நிலையையே இவ்வாறு இருக்க அவர்கள் எங்கே திமுகவுக்குப் போட்டியாக வரப் போகிறார்கள். உள்ளடிச் சண்டைகளைக் குறைக்கவே அண்ணாமலை திணறி வரும் சூழ்நிலையில், இதையெல்லாம் பேசி அவர்கள் கட்சி விஷயங்களை மறைக்கப் பார்க்கிறார். அண்ணாமலையின் இந்தப் பேச்சு அதற்கு வேண்டுமானால் பயன்படும். வேறு எதற்கும் உதவாது என்பது மட்டும் நிஜம்.