தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக்குழு தலைவரும், முன்னாள் ஒருங்கிணைந்த தஞ்சை மா.செ.வும், 12 ஆண்டுகள் ஒருங்கிணைந்த அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவரும், கலைஞருடன் இணைந்து பணியாற்றியவருமான அறந்தை ராஜன் (வயது 88). அறிஞர் அண்ணா பற்றிய மலரும் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அவருடனான சந்திப்பில் வெளிவராத தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. அறந்தை ராஜனின். குரலாகவே கேட்போம், “தஞ்சாவூர் ஜில்லாவில் அறந்தாங்கி அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் வசதியான குடுபத்தில் பிறந்தவன் என்றாலும் அண்ணா, கலைஞர், தி.மு.க மீது கொண்ட பற்றால் திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொண்டவன். அதனால் தான் இன்று வரை என் குடும்பத்தில் பல்வேறு ஜாதியினரும் உறுப்பினர்களாக உள்ளனர். ஜாதி, மதம், சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன்.
அறிஞர் அண்ணா உடல்நலமின்றி மருத்துவமனையில் இருக்கிறார் என்ற தகவல் அறிந்து கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் கூடி இருந்தோம். ஆனால் அண்ணா எங்களை விட்டு மறைந்தார். உடனே பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என்று ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. அண்ணா மறைந்தார் என்ற தகவல் வானொலி மூலம் அறிந்த தமிழக மக்கள் கொந்தளித்து கிளம்பி சென்னை வர முயன்றனர். அதனால் முழுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னை முழுவதும் போக்குவரத்து தடைபட்டது. அந்த மக்கள் கூட்டம் தான் ரெக்கார்ட் ஆனது. லாரிகளில் ஏறி லட்சக்கணக்காண தொண்டர்கள் கடைசியாக ஒருமுறையாவது அண்ணாவின் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று சென்னைக்கு வந்துவிட்டார்கள்.
ராஜாஜி ஹாலின் உள்ளே அண்ணாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கலைஞர் மற்றும் தலைவர்கள் சுற்றி நின்று கொண்டிருந்த போது எப்படியாவது அண்ணாவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று வந்த தொண்டர்கள் அரங்கத்தின் மேலே ஏறிவிட்டனர். மேற்கூறைகள் உடைந்து கொட்டியது. முதலில் கலைஞர், அண்ணாவின் முகத்திற்கு நேராக குனிந்து நின்று கொண்டார். அடுத்து அனைவரும் அண்ணா உடலில் ஓடுகள் கொட்டாமல் குனிந்து நின்று எங்கள் முதுகில் தாங்கிக் கொண்டோம். அப்போது தான் தெரிந்தது. கடைசியாக அண்ணாவின் முகத்தை காண தொண்டர்கள் ராஜாஜி ஹால் மேலேயும் ஏறிவிட்டார்கள் என்பது. பாரம் தாங்காமல் ஓடுகள் உடைந்து கொட்டுகிறது என்று. உடனே கலைஞர், அண்ணாவின் உடலை நுழைவாயிலுக்கு கொண்டு சென்றால் அனைவரும் காணலாம் என்றார். அப்படியே குனிந்தபடியே அண்ணாவின் உடலை மறைத்துக் கொண்டே நுழைவாயிலுக்கு கொண்டு வந்து வைத்தோம். அதன் பிறகு லட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு தான் மறைந்த அனைத்து தலைவர்களின் உடல்களும் நுழைவாயிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது என்பது வரலாறு” என்றார்.