‘காப்பகத்தில் சேர்க்கப்பட்ட ஆதரவற்றோரை கடுமையாக சித்திரவதை செய்தார்கள். குரங்குகளையும் நாய்களையும் ஏவி கொடூரமாகக் கடிக்க வைத்தார்கள். காணாமலாக்கப்பட்டார்கள்... பாலியல் அத்துமீறல் செய்தார்கள்...’ இப்படிப்பட்ட பகீர் புகார்களுக்கு ஆளாகியிருக்கும் விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் உள்ள ஆதரவற்றோர் காப்பகமான அன்புஜோதி ஆசிரம விவகாரம் மேலும் மேலும் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. எந்தவித அனுமதியும் பெறாமல் நடத்தப்பட்டு வந்த இந்த காப்பகம் குறித்து வரும் புதிய தகவல்கள் திகிலூட்டுகின்றன.
இந்தக் காப்பகத்தை நடத்தி வந்த ஜூபின் பேபி, அவர் மனைவி மரியா உள்ளிட்ட 9 பேர் கைதான நிலையில், ஆசிரமத்தில் அரங்கேற்றப்பட்ட கொடுமைகள் குறித்து தீவிர விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த மரியாவுக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரையும் குழந்தைகளையும் விட்டுப் பிரிந்திருக்கிறார். பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த ஜூபின் பேபியை அவர் திருமணம் செய்திருக்கிறார். 2003 காலகட்டத்தில் ஜூபின் பேபியின் நண்பர் ஒருவர் கோவை பகுதியில் ஆதரவற்றோர் ஆசிரமம் நடத்தி வர, அவரது ஆலோசனையால் 2004-ல் குண்டலப்புலியூரில் இந்த ஆதரவற்றோர் காப்பகத்தை ‘அன்புஜோதி’ என்ற பெயரில் தொடங்கினர்.
தெருவில் திரிந்து கொண்டிருந்த சிலரை தங்கள் காப்பகத்தில் சேர்த்துக் கொண்டதோடு, அவர்களைக் காட்டி பணவசூலில் ஈடுபட்டிருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே இந்த பிசினஸில் கரன்சி மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. ஆசிரமத்தில் எண்ணிக்கை அதிகரித்ததும் புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியிலும் ஒரு கிளையைத் தொடங்கினர். மேலும், பெங்களூர் தொட்டகுப்பி பகுதியில் ஆசிரமம் நடத்தி வந்த ஆட்டோ ராஜாவோடு சேர்ந்து ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் ஆதரவற்ற இல்லம் நடத்தி வருபவர்களோடு தொடர்பு வைத்து ஆசிரமவாசிகளை அடிக்கடி இடம் மாற்றினர். இப்படி இடம் மாற்றப்பட்ட புதியவர்களை புகைப்படம் எடுத்து அதை வெளிநாடுகளுக்கு அனுப்பி நிதி வசூலித்திருக்கிறார்கள்.
ஆசிரமத்தில் தங்கியுள்ளோருக்கு சரியான குடிநீர், கழிப்பறை, தங்குமிட வசதிகள் வழங்கப்படவில்லையாம். இந்தக் காப்பகத்திலிருந்து 150 பேர் வரை மீட்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நோய்வாய்ப்பட்ட 20 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கிருந்த 13 பேரை பெங்களூருவில் இருக்கும் காப்பகம் ஒன்றுக்கு அனுப்பி வைத்திருப்பதாக காப்பக நிர்வாகிகள் கூறினர். அவர்களைப் பற்றி விசாரிக்க மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி தலைமையிலான ஒரு டீமை பெங்களூருவுக்கு அனுப்பினார். அந்த டீம் பெங்களூர் சென்ற போது, அங்கிருந்த ஆசிரம நிர்வாகி ஆட்டோ ராஜாவும் அங்கிருக்கும் வருவாய்த் துறையினரும் ஒத்துழைப்பு தர மறுத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரிகளாக ஏ.டி.எஸ்.பி. கோமதி, இன்ஸ்பெக்டர்கள் விழுப்புரம் ரேவதி, சேலம் குமார், கார்த்திகேயன், திருவண்ணாமலை தனலட்சுமி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்களிடம் மாவட்ட காவல்துறை ஏற்கனவே ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்திருக்கிறது.
ஜூபின் பேபி மீடியாக்களிடம், இந்த மருத்துவமனையில் உயிரிழந்த சுமார் 300 அனாதை உடல்களை தான் எரித்ததாகக் கூறியுள்ளார். இந்தப் பட்டியலில் ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களும் இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. அதேபோல், காப்பகத்தில் ஓட்டுநராக இருந்த பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டது பற்றியும் சி.பி.சி.ஐ.டி. டீம் விசாரித்து வருகிறது. இந்தக் காப்பகத்தின் மீது பாலியல் புகாரும் எழுந்திருப்பதால் தேசிய மகளிர் ஆணையமும் விசாரணையைத் துவக்கியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சௌரிராஜன் நம்மிடம், “இந்த ஆசிரமம் நடத்தும் விழாக்களில் காவல்துறை அதிகாரிகளும், அரசியல் புள்ளிகளும் கூட கலந்துக்கிட்டிருக்காங்க. அவர்களில் ஒருவர் கூட இந்தக் காப்பகம் குறித்து கேள்வி எழுப்பவில்லை என்பது வேதனைக்குரியது. இனியாவது இதுபோன்ற ஆதரவற்றோர் இல்லங்கள் மீது அரசு தீவிர கண்காணிப்பைச் செலுத்தவேண்டும்” என்கிறார் அழுத்தமாக.
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், மனநலம் பாதித்த ஒருவரை அன்புஜோதி ஆசிரமத்தில் 7 மாதங்களுக்கு முன்பு சேர்த்துள்ளார். அவரையும் இப்போது காணாததால், நான் தவறு செய்துவிட்டேனே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், சி.பி. சி.ஐ.டி. எஸ்.பி.யான அருண் பாலகோபாலன் தலைமையிலான குழுவினர் ஆசிரம வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர், “இந்த ஆதரவற்றோர் மையத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் ஆசிரமத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் அத்துமீறல்கள் பற்றித் தெரியவரும்” என்றார்.
அன்புஜோதி காப்பகத்தில் கைப்பற்றப்பட்டிருக்கும் ரத்தக்கறை படிந்த பாய்களும், மூங்கில்கள், ரத்தக்கறை படிந்த இரும்புச் சங்கிலிகளும், அங்கே நடந்துகொண்டிருந்த கொடூரங்களுக்கு சாட்சியங்களாக இருக்கின்றன. சைக்கோ மனம் படைத்தவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டும்.