Skip to main content

பாலியல் சர்ச்சையில் இருந்து மீண்டு அதிமுக மா.செ. ஆனது எப்படி? 

Published on 28/07/2020 | Edited on 29/07/2020
paranjothi

கடந்த எம்.பி. தேர்தலுக்கு முன்பு திருச்சி மாவட்ட அதிமுகவில் உள்ள அனைத்து முத்திரையர் பிரமுகர்களும் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஒருங்கிணைந்து முத்திரையர்களுக்கு திருச்சி மாவட்டத்தில் முக்கிய பொறுப்பு வேண்டும் என முதல்வர் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தனர்.

 

ஆனால் முதல்வர் எடப்பாடியோ உங்களில் ஒருவரை நீங்களே தேர்ந்தெடுங்கள் என்று சொல்ல, அந்த ஒருவர் யார் என்பதை தற்போது வரை யாரை சொல்வது என்கிற குழப்பம் நீடித்துக்கொண்டே இருந்தது.

 

காரணம் இந்த சமூகத்தில் இருக்கும் அதிமுக முக்கிய பிரபலங்கள் கு.ப.கிருஷ்ணன், பரஞ்சோதி, கே.கே.பாலசுப்ரமணியன், எஸ்.எம்.பாலன், வளர்மதி, அண்ணாவி,  சிவபதி, பிரின்ஸ் தங்கவேல், செல்வராஜ்,  பரமேஸ்வரி என பெரிய பட்டியலே உள்ளது. 

 

அதிமுகவை பொறுத்தவரையில் இவர்கள் அனைவருக்குமே ஜெ. பல முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தங்களுடைய பதவியை இழந்திக்கிறார்கள்.

 

இந்த போட்டியில் ஜெ.வினால் நேரடியாக ஒரங்கட்டப்பட்ட என்.ஆர்.சிவபதி, சில காலம் அமைதியாக இருந்துவிட்டு எடப்பாடி வந்தவுடன் அவரும் நானும் மாமா, மாப்பிள்ளை என பேசிக்கொள்ளும் பழக்கம் என பெருமையாக பேசிக்கொண்டு, கரோனோ காலத்திலும்  வீட்டை விட்டு வெளியே வராமல் அடுத்த மா.செ. நான்தான் என புறநகர் அதிமுக அரசியலை அவ்வப்போது குழப்பிக்கொண்டே இருந்தார். 

 

ஆனால் முதல்வர் எடப்பாடி தரப்பில், சிவபதிக்கு மா.செ. வாய்ப்பு எல்லாம் கிடையாது, சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் அதுவரை கட்சியை வளர்க்கின்ற வேலைய பாருங்கள் என்று அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் மா.செ. போட்டியில் பரஞ்சோதி – கே.கே.பாலசுப்ரமணியன், பிரின்ஸ்தங்கவேல் ஆகியோர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இதில் பரஞ்சோதி ஓ.பி.எஸ். தனி அணி அமைத்தபோது அவருடன் சென்று தீவிர ஆதரவாளர் என்கிற அங்கீகாரம் கிடைத்தது.

 

அதுவும் இல்லாமல் பரஞ்சோதியின் முக்கிய சர்ச்சையாக இருந்த, திருச்சி குமரன்நகரை சேர்ந்த டாக்டர் ராணி, ''அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தன்னை 2வது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தனது பணம்  மற்றும் நகையை வாங்கி வைத்துக்கொண்டு திரும்ப தராமல் மோசடி செய்து  விட்டதாகவும்'' புத்தூர் அரசு மருத்துவமனை போலீசில் செய்திருந்தார்.

 

கடந்த 2011ம் ஆண்டு அரசு மருத்துவமனை  போலீசார் பரஞ்சோதி, அவரது உதவியாளர்கள் சம்பத்குமார், செல்வகுமார்  ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது சம்பந்தமான வழக்கு திருச்சி  ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-4 கோர்ட்டில் நடந்து வந்தது.  பரஞ்சோதி உள்பட 3 பேரும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி மதுரை  ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்தனர். 

 

கடந்த 29.9.16 அன்று இந்த மனு நீதிபதி கல்யாண சுந்தரம்  முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, பரஞ்சோதி உள்பட 3  பேரும், டாக்டர் ராணியும் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி இந்த வழக்கில் தாங்கள்  சமாதானமாக செல்வதாக கூறி அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். மதுரையில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்துக்கு ரூ.75,000 நன்கொடை செலுத்தும்படி ஐகோர்ட் உத்தரவிட்டது. நன்கொடை செலுத்தப்பட்டதை தொடர்ந்து  பரஞ்சோதி, சம்பத்குமார், செல்வகுமார் ஆகிய 3 பேர் மீதும் திருச்சி  கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்து நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்திலே வாபஸ் பெறப்பட்டதால், பாலியல் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு, பரஞ்சோதிக்கு மா.செ. வாய்ப்பு கிடைத்துள்ளது. 

 

கடந்த முறை 2012 ஆண்டு நடைபெற்ற மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கே.என்.நேருவுக்கு எதிராக நின்று வெற்றிபெற்ற அனுபவம், அவருக்கு கூடுதல் அங்கீகாரத்தை கொடுத்ததால் இந்த பதவி கிடைத்துள்ளது. 

 

மண்ணச்சநல்லூர், முசிறி, ஶ்ரீரங்கம் ஆகிய தொகுதிகள் உள்ளடக்கியது. இதில் வளர்மதி ஏற்கனவே ஶ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் மீண்டும் அந்த தொகுதி கேட்க வாய்ப்பு இருக்கிறது. வளர்மதி அரசியலில் பரஞ்சோதிக்கு ஜூனியர் என்பதால் தற்போது ஶ்ரீரங்கம் தொகுதி யாருக்கு என்பதில் பயங்கர போட்டி ஏற்பட்டுள்ளது.

 

அடுத்த சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்றதால் தற்போதே அதிமுக தேர்தல் களம் சூடுபறக்க ஆரம்பித்துள்ளது.