கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கரும்பு, நெல், சோளம், கம்பு, காய்கறிகள் மற்றும் பூ வகைகள் என பல்வேறு விதமாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விருத்தாசலம் பகுதியில் எள் சாகுபடி அறுவடை தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. அதனால் அறுவடை செய்த எள் செடியில் இருந்து, எள்ளைப் பிரித்தெடுப்பதற்காக, விவசாயிகள் வெப்பம் அதிகமாகக் கிடைக்கக் கூடிய களம் மற்றும் நெடுஞ்சாலைகளில் உலர்த்துகின்றனர். அவ்வாறு விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை பிரித்தெடுப்பதற்காக உலர்த்த முக்கிய இடங்களாக விருத்தாச்சலம்- கடலூர் மற்றும் சிதம்பரம் புறவழிச்சாலைகளைப் பயன்படுத்துகின்றனர். தங்களுக்குத் தேவையான விவசாயப் பொருட்களை மட்டும் எடுத்துவிட்டு மீதமுள்ள விவசாயக் கழிவுகளைச் சாலையோரம் டன் கணக்கில் குவித்து வைத்துள்ளனர்.
இதனால் சாலை ஓரங்களில் கிடக்கும் விவசாயக் கழிவுகளை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்துவதால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான மரங்கள் கருகி நாசமாகிறது.
அதேசமயம் இந்தக் கழிவுகளை நல்ல இயற்கை உரங்களாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் விவசாயிகள். அவர்கள் விவசாய சாகுபடிக்குப் பின் கிடைக்கும் விவசாயக் கழிவுகளை ஆர்கானிக் முறையில் பதப்படுத்தி நல்ல உரமாக மாற்ற இயலும் என்ற நம்பிக்கையில் சாலையோரம் கிடக்கும் அனைத்துக் கழிவுகளையும் வாகனத்தின் மூலம் எடுத்துச் சென்று பதப்படுத்தி நல்ல இயற்கை உரமாக மாற்றுகின்றனர்.
தற்போதுள்ள காலகட்டத்தில் விவசாயிகள் ரசாயன பொருட்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் போது அவர்களுக்குச் செலவுகள் அதிகமாகிறது. மேலும் விளைநிலங்களின் இயற்கை தன்மையும் குறைகிறது. இவற்றைப் போக்க இயற்கையான பொருட்களைப் பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரங்களுக்கு விவசாயிகள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ மண்புழு உரம் எட்டு ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளையக்கூடிய பொருள்களில் கிடைக்கக்கூடிய கழிவுகளைப் பயன்படுத்தி சிறப்பான முறையில் மண்புழு உரம் தயாரிக்க முடியும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலத்தில் விளையக்கூடிய விவசாயப் பொருட்களை உரங்களாக மாற்றவேண்டும் என்றும் , பொதுச் சொத்துக்களுக்கும், மற்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், சாலையோரங்களில் விவசாயிகள் கழிவுகளை ஒதுக்கித் தள்ளுவதைத் தவிர்த்துவிட்டு, அக்கழிவுகளைச் சிறப்பான முறையில் உரமாக மாற்றும் முயற்சியில் அனைத்து விவசாயிகளும் ஈடுபடவேண்டும் என்று இயற்கை விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் தமிழக அரசு சாலையோரம் உள்ள விவசாயக் கழிவுகளை அகற்றுவதைத் தவிர்த்துவிட்டு, இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கழிவுகளைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான உதவிகளையும், அவற்றைப் பதப்படுத்தி, இயற்கை உரங்கள் உற்பத்தி செய்ய நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் இயற்கை விவசாயம் மென்மேலும் வளரும் என்றும், அதன்மூலம் நஞ்சில்லா உணவுப் பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கும் என்கின்றனர்.