இன்று மதிமுக தலைவர் வைகோவின் பிறந்த நாள் (சான்றிதழ் படி). அவர் அதைக் கொண்டாடுவதில்லை, அதனால் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவதில்லை. இந்த ஆண்டு, மதிமுகவின் வெள்ளி விழா ஆண்டு. அந்தக் கட்சி தொடங்கப்பட்டபோது புயலான செயல், வீச்சான பேச்சு, இளைஞர்கள் அபிமானம், நாடாளுமன்றத்தில் செயல்பாடு, திராவிட உணர்வு, தமிழ் தேசிய கனவு, விடுதலைப் புலிகள் பாசம் என வைகோவின் பின்னே தொண்டர்கள் கூடியதற்கு பல காரணங்கள் இருந்தன. 25 ஆண்டுகள் கழித்து வைகோ அப்படியே இருந்தாலும் தமிழக அரசியல் களத்தில் அவரது நிலையென்பது மாறியிருக்கிறது. தோல்விகள் அவரை தொடர்ந்திருக்கின்றன. தொடர் போராட்டங்கள் அவரை அழைத்துக்கொண்டே இருக்கின்றன. மாறிய கூட்டணிகள் அவரது அரசியல் நிலைப்பாட்டை கேள்வி கேட்டன. இடையில் பல இரண்டாம் கட்ட தலைவர்களும் மாவட்ட செயலாளர்களும் கட்சியை விட்டு சென்றுவிட்டார்கள். இத்தனைக்கும் பிறகு மதிமுகவின் தொண்டராக இருக்க என்ன காரணம் இருக்கிறது என்று ஒரு இளம் தொண்டரைக் கேட்டோம். தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். தொண்டருக்கு என்ன காரணம்? கேட்டோம்...
எனது பெயர் வசந்தபிரியன், சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவன். போலியா நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி நான். உதயசூரியனை தவிர்த்து வேறு சின்னத்தை அது கூட்டணியாக இருந்தாலும் வாக்களிக்கத் தயங்குகிற கலைஞர் வெறியர்கள் என் பாட்டனும் என் தந்தையும். பாட புத்தகங்களே படிக்க விரும்பாத சிறு வயதில், என் உடல் நிலையால், விளையாடிக் களிப்படையும் வாய்ப்புகளும் மற்றவர்களோடு ஒப்பீடுகையில் சற்று குறைவு என்பதால் வார இதழ்கள் என் நண்பர்கள். அப்படி கண்ணில் படுகிற புத்தகங்களையெல்லாம் புரட்டிப் பார்க்க காரணமாக அமைந்த பெயர் ரஜினிகாந்த்.
இப்போது கூட ரஜினி யை பிடிக்காதவர்களும் கொண்டாடும் பாட்ஷா காலத்து ரஜினியை ஒரு சிறுவனாக நான் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், 'ரஜினி அரசியலுக்கு வருகிறார்' என்ற பொருள்பட இதழ்களின் அட்டைப்பட வாசகங்கள் இருந்தபோது அதே ஈர்ப்பு அரசியல் மீதும் விழுந்தது. அப்பொழுது ஜெயலலிதா கருணாநிதி தவிர்த்து பல அரசியல் பெயர்கள் அறிமுகமாகியது. அதில் மிக முக்கியமான மூன்று பெயர்கள், ஆர்.எம்.வீ. மூப்பனார், வைகோ. 1998 பாரளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்து, மதிமுக இடம்பெற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. வாஜ்பாய் பிரதமராகத் தயாரான போது கூட்டணி கட்சிகள் எல்லாம், அமைச்சர்கள் எண்ணிக்கை, துறை விருப்பம் என வாஜ்பாயைத் திணற வைக்கின்றன என்ற செய்திகளே வலம் வந்தபோது, மதிமுக எம்பிகளின் நிபந்தனை அற்ற ஆதரவு கடிதத்தை வைகோ வாஜ்பாய்க்கு அனுப்பினார். ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வாஜ்பாய் வைகோவை கூப்பிட்டு அமைச்சர் மதிமுகவிற்கு அமைச்சர் பதவி கொடுத்தபோது, அதை பிடிவாதமாய் மறுத்து 'மத்திய அரசில் பங்கு பெற கூடாது என்பது எனது கொள்கை' என்கிறார். இந்த செய்தியைப் படித்த அந்தத் தருணமே வைகோ எனும் தலைவன் மீது நான் கொண்ட அன்பின் முதல் விதை.
ஈழ ஆதரவு, பிரபாகரன் நட்பு, ஸ்டெர்லைட், முல்லை பெரியாறு, நியூட்ரினோ போராட்டங்கள் என வைகோவின் செயல்பாடுகள் வெளியுலகம் அறிந்தவைதான். அதைத் தாண்டி ஒரு தொண்டனாக மதிமுகவில் தொடர மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் தொண்டர்கள். மதிமுக தொடங்கப்பட்ட போது, ஒரு பெரும் இளைஞர் பட்டாளம் திராவிடத்தையும், விடுதலைப் புலிகளையும், ஒரு சேர நேசித்த முதல் தலைமுறை வைகோ பின்னே வலம் வந்தது. அந்த இளைஞர் பட்டாளத்தின் வயது இப்போது ஐம்பதை நெருங்கி, அல்லது தாண்டிய தலைமுறை ஆகி விட்டது. ஆனாலும் இந்த இயக்கத்தின் ஆணிவேர் இவர்கள்தான். அவர்களின் தலைவனை 93-ல் எவ்வளவு ஆர்வத்தோடு வெறித்தனமாக நேசித்தார்களோ, அதே நேசம் இன்று வரை நீடிக்கிறது. தொடர் தோல்விகள் அவர்களின் எதிர்பார்ப்புகளை மாற்றி இருந்தாலும், தங்களது தலைவனை விட சிறந்தவர் எவரும் இல்லை என்ற இறுமாப்பு இத்தனை வருடங்களில் அவர்களுக்குக் குறையவே இல்லை...
இரண்டாவது பலம் இரண்டாவது கட்ட தலைவர்கள். பல கட்சிகளில் தொண்டர்கள் ரசித்தாலும் தலைவர்கள் இரண்டாம் கட்ட தலைவர்களை விரும்புவது இல்லை. ஆனால் வைகோ, ஒரு சிறந்த பணியை எவரேனும் செய்தால், அவரை முன் நிறுத்தி இவர் பின்னே நிற்பார். அது சில நேரங்களில் அவருக்கு பாதகமாய் அமைந்திருந்தாலும் இப்பொழுதும் கடை பிடிக்கிறார். இதனால்தானோ என்னவோ வைகோவை விட்டு விலகியவர்கள் அவரை பெரும்பாலும் விமர்சனம் செய்வது இல்லை. மேடைகளில் தலைவர்களின் செயல்பாடுகள் ஒரு தொண்டனைப் போலவே இருக்கும். வைகோவே அப்படித்தான். கூட்டத்தை ஒழுங்கு செய்வது, எல்லொரும் அமர இடம் பிரிப்பது என சாதாரணமாக உலவும்போது, இரண்டாம் கட்ட தலைவர்களும் அதையே பிரதிபலிக்கிறார்கள்.
புகைப்படம் : சிவா சாருகேஷ்
மூன்றாவது, மாவட்ட செயலாளர்கள். இன்று கோடிகளிலும், லட்சங்களிலும் மிதப்பவர்களே பல கட்சிகளில் மாவட்ட செயலாளர் ஆக முடியும். ஆனால் மதிமுகவில் சரிபாதி மாசெகள் ஆயிரங்களில் வருமானம் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் போராட்டம், பொதுக்கூட்டம் என அனைத்திற்கும் ஈடு கொடுத்துப் பயணிக்கிறார்கள். வைகோவும் அதை புரிந்து கொண்டவராக பெரிய மேடை, சிறிய மேடை என பிரித்து பார்ப்பது இல்லை. சமீபத்தில் நீயுட்ரினோ எதிர்ப்பு நடை பயணத்தில், நூற்றுக்கணக்கில் தொண்டர்கள் இருப்பதை சிலர் கேலி செய்தபோது, 'என் கட்சிக்காரனை அதிகம் சிரமபடுத்த விரும்பவில்லை' என வெளிப்படையாகவே சொன்னார்.
தொண்டர்களுடனான நேரடி தொடர்பை கடைபிடிக்கும் தலைவராக வைகோ இன்று வரை இருக்கிறார். வைகோவிற்கும் எங்களுக்கும் இடையிலான புரிதல் அலாதியானது. சேலத்தில் நான் நேரில் கண்ட ஒரு சம்பவமே அதற்கு உதாரணம். மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசும் போது ஒருவர் உற்சாகமாய் குறுக்கிட்டார். அதைப் பார்த்த வைகோ அவர் குடித்து இருப்பதை அறிந்து வெளியேறச் சொல்லிவிட்டார். கூட்டம் முடிய சில நிமிடங்கள் முன்பு அவர் மீண்டும் நுழைய முயல, மற்றவர்கள் தடுத்தார்கள். ஆனால் வைகோ அவரை அனுமதித்தார். இதில் நெகிழ்ந்த அந்த தொண்டர், 'தலைவா இனி குடிக்க மாட்டேன்' என சொல்ல உடனே மகிழ்ந்த வைகோ அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 'நாம் நேசித்த தலைவர் திட்டிவிட்டாரே' என அவரும் போகவில்லை. பேச்சில் குறுக்கிட்டதால் இவரும் விட்டு விடவில்லை. தலைவனின் கண்டிப்பை தொண்டன் ஏற்கிறார். தொண்டனின் அன்பை தலைவன் ஏற்கிறார். அத்தனையும் தாண்டி, என்னை அள்ளி அணைத்துக்கொண்ட இயக்கமிது. ஒரு பொழுதும் என்னைத் தனியாக உணர விடாத இயக்கம் இது. அதுவும் ஒரு காரணமே. இன்னொன்னும் இருக்கு, இந்த வயசிலும் அவரோட சுறுசுறுப்பும் ஸ்டைலும் யாருக்கு வரும்?
தவறான கூட்டணி முடிவுகள்தான் தோல்விகளுக்குக் காரணம் என்கிறார்கள். அதை சிலர் சந்தர்ப்பவாதம் என்றும் விமர்சிக்கிறார்கள் அந்த முடிவுகளை அவர் சுயநலத்துக்காக எடுக்கவில்லை என்று நான் நம்புகிறேன். இன்றைய அரசியல் சூழலில் பொதுமக்களும் போராட்டக் களங்களுக்கு வருவது சாதரணமாகிவிட்டது. இதை 25 வருடங்களாக மதிமுக செய்து வருகிறது. இனியாவது அதன் உழைப்பிற்கான வெற்றிகளை ஈட்ட வேண்டும் என்பதுதான் என் ஆசை.