
அதிமுக முன்னாள் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் எக்ஸ் எம்பியுமான டாக்டர் லட்சுமணன் திமுகவுக்கு தாவியுள்ளார். இவர் ஆர்தோ ஸ்பெஷலிஸ்ட். தீவிர அதிமுக விசுவாசியாக இருந்து வந்தார். விழுப்புரத்தில் கிளினிக் வைத்து நடத்தி கொண்டிருந்த நேரத்தில் அவ்வப்போது சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கட்சியில் சீட்டு கேட்பதுண்டு. எப்படியும் அதிமுக அரசியலில் உள்ளே நுழைந்து ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்று தணியாத தாகத்தில் இருந்து வந்தார். இவரது நெருங்கிய உறவினர் கடலூர் மாவட்ட மந்திரி சம்பத். 2011ல் சம்பத் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார் லட்சுமணன். சசிகலா ஆதரவும் கிடைத்தது. அப்புறம் என்ன? அப்போது கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த சண்முகத்தை மாற்றி விட்டு லட்சுமணனை மாவட்ட செயலாளராக அறிவித்தது கட்சித் தலைமை. இவர் மா.செ. பதவிக்கு வந்ததும் சண்முகத்தின் ஆதரவாளராக இருந்த பல்வேறு நபர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டு புது நபர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன.
சூட்டோடு சூடாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாமலை ஓட்டல் அருகில் சுமார் 80 அடி உயரம் கம்பம் நட்டு அதிமுக கொடியை பறக்க விட்டார். தமிழகத்தில் இந்த அளவு உயரத்தில் எந்த மாவட்ட செயலாளரும் கட்சிக் கொடியை பறக்க விட்டதில்லை என்று கின்னஸ் சாதனையில் இடம் பிடிப்பது போல ஜெ வின் மனதில் இடம் பிடித்தார். அதனால் இவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியும் கிடைத்தது.
ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அவருக்கு ஓடிச்சென்று ஆதரவளித்த முதல் மாவட்ட செயலாளர் லட்சுமணன். அதன்பிறகு எடப்பாடியார் கை ஓங்கியது. உடனடியாக லட்சுமணனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு சண்முகத்திடம் வழங்கப்பட்டது. சண்முகத்தின் ஆதரவாளர்கள் சந்தோஷத்தில் மிதந்தனர்.

பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பு படலம் நடந்தது. மீண்டும் மாவட்ட செயலாளர் பதவியைப் பிடிக்க லட்சுமணன் கடும் முயற்சி செய்தார். பலாக்காய்க்கு ஆசைப்பட்டு கிளாக்காய் கிடைத்தது போல. லட்சுமணனுக்கு மாநில அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அதில் லட்சுமணன் திருப்தி அடையவில்லை. மேலும் சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கும் முயற்சி செய்தார். அதற்கும் தடையாக இருந்தார் அமைச்சர் சண்முகம்.
சமீபத்தில் கட்சி தலைமை தமிழகம் முழுவதும் மாவட்டங்களைப் பிரித்து மாவட்டத்தில் மாவட்ட ஒன்றிய பதவிகள் நிரப்பப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே லட்சுமணன் ஆதரவாளர்களாக பதவி வகித்தவர்களின் பதவிகள் மாற்றப்பட்டு சண்முகத்தின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தற்போது இரண்டு சட்டமன்ற தொகுதிக்கு 3 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு பல மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 சட்டமன்ற தொகுதிகளை பிரித்து புது மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
அப்போது லட்சுமணன் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து அதில் ஒரு மாவட்ட செயலாளர் பகுதி பிடிப்பதற்கு ஓபிஎஸ் மூலம் கடும் முயற்சி செய்தார். முடியவில்லை. எடப்பாடி வரை முயற்சி செய்தார். ஆனால் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சண்முகம் மாவட்டத்தை பிரித்தால் கட்சியில் கோஷ்டி பிரச்சனை அதிகரிக்கும். இதனால் தேர்தலில் வெற்றி பெறுவது பாதிக்கப்படும் எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் மாவட்டத்தை பிரிக்க கூடாது என்று ஒருங்கிணைப்பு குழுவினரிடம் கறாராக கூறி உள்ளார். அதனால் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்கள் ஏற்கனவே விழுப்புரம் தெற்கு வடக்கு என இருந்ததைப் போன்று தற்போது கள்ளக்குறிச்சி விழுப்புரம் என்று அறிவிக்கப்பட்டு சண்முகம் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

இப்படி பல்வேறு விதங்களிலும் அதிமுக அரசியலில் முன்னேற கடும் முயற்சி செய்து தோல்வியடைந்த லட்சுமணன் தனது அரசியல் குருவான ஓபிஎஸ் கை இனி உயர்வதற்கு வாய்ப்பில்லை என்று தீர்மானமாக முடிவு எடுத்த நிலையில், திமுகவில் சேர்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தத் தகவல் இபிஎஸ்சுக்கு தெரியவர டாக்டர் லட்சுமணன் திமுகவில் சேராமல் இருப்பதற்கு அமைச்சர் சண்முகத்தை பேசச் சொல்லியுள்ளனர். அந்த அளவிற்கு இறங்கி போக முடியாது என்று மறுத்துவிட்டாராம் சண்முகம்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளருமான குமரகுரு மூலம் லட்சுமணனிடம் பேசப்பட்டுள்ளது. அதற்கு லட்சுமணன் எடப்பாடியார் மீது எனக்கு கோபம் இல்லை. ஆனால் எங்கள் மாவட்ட அமைச்சர் சண்முகம் பதவியில் இருக்கும் வரை என்னால் அதிமுகவின் அரசியல் செய்ய முடியாது, விடமாட்டார்கள். எனவே கட்சி மாற முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் நிற்பதற்கு திமுக தலைமை உறுதியளிக்கப்பட்டதன் அடிப்படையில் தான் டாக்டர் லட்சுமணன் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் கோலியனூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, வானூர் தொகுதி செயலாளர் சிவா, மாணவரணி முன்னாள் செயலாளர் சரவணன், தொழில்நுட்ப பிரிவு மணவாளன், இளைஞர் அணி முருகன், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏழுமலை, வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் உட்பட பலர் அண்ணா அறிவாலயத்தில் விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி, பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலையில் ஸ்டாலின் தலைமையை ஏற்று அக்கட்சியில் இணைந்துள்ளார் டாக்டர் லட்சுமணன்.
இவர் திமுகவுக்கு கட்சி மாறி அதிர்வேட்டு வெடித்துள்ளார். இந்த வேட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இதேபோன்று வேட்டு சத்தம் கேட்கும் என்கிறார்கள் அதிமுகவில் அதிர்ச்சியில் உள்ள கட்சித் தொண்டர்கள்.
லட்சுமணன் கட்சி மாறியதையடுத்து சண்முகத்தின் ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதன் எதிரொலியாக பல்வேறு ஊர்களில் லட்சுமணன் மாவட்ட செயலாளராக இருந்தபோது கொடியேற்றி கல்வெட்டு திறந்து வைத்தார். அந்த கல்வெட்டுகளில் லட்சுமணன் பெயர் இருப்பதால் இப்போது கடப்பாரை கொண்டு அந்த கல்வெட்டுகளில் உள்ள லட்சுமணன் பெயரை பெயர்த்து வருகிறார்கள் சண்முகத்தின் ஆதரவாளர்கள். டாக்டர் லட்சுமணன் திமுகவுக்கு மாறியதால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக செல்வாக்கு குறையுமா? திமுகவிற்கு கூடுமா? என்பது வரும் சட்டமன்ற தேர்தலில் தெரியவரும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.