Skip to main content

2022ஆம் ஆண்டில் பெண்களின் பாதுகாப்பு, பாலின சமத்துவம் சார்ந்த முக்கிய தீர்ப்புகள்

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

- தெ.சு.கவுதமன்

 

நீதிமன்றங்களின் தீர்ப்புகள், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகள் சில நேரங்களில் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதுண்டு. அதேபோல், இந்த ஆண்டில் பெண்களின் பாதுகாப்பு சார்ந்த 4 வழக்குகளில் நீதிபதிகளின் தீர்ப்பும் கருத்துக்களும் சமூகத்தில் பேசுபொருளாகியுள்ளது.

 

ff

 

கடந்த மே மாதத்தில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் குழந்தைகளுக்கான சமூக அந்தஸ்து சார்ந்த வழக்கு ஒன்றில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் குழந்தைகள், இச்சமூகத்தில் அனைவரையும்போல் மரியாதையுடனும் கண்ணியத்துடனும், சமமாக நடத்தப்பட வேண்டும். அதேபோல், விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்யும்போது அவர்களைத் தொந்தரவு செய்யவோ, அவர்களின் குழந்தைகளை அவமானப்படுத்தவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் காவல்துறையிடமிருந்து பாதுகாப்பளிப்பதாக இருந்தது.

 

அதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கேரள நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, பெண்களைக் கொச்சைப்படுத்துவதாகவும், பெண்களின் உடை நாகரிகத்தை அவமதிப்பதாகவும் உள்ளதாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான சந்திரன் என்பவர், இன்னொரு இளம் பெண் எழுத்தாளரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகாரளிக்கப்பட்டது. அதன் விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பெண் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் உடையணிந்திருந்தார் என்று சந்திரன் தரப்பில் அப்பெண்ணின் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. அதனடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பளித்த கேரள நீதிமன்றம், "அப்பெண் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டம் 354ஏ பிரிவு இதற்குப் பொருந்தாது. அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுக்கொள்ளப்படாது" எனக் குறிப்பிட்டு, சந்திரனுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த தீர்ப்பினை பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர்.

 

In 2022, women's safety, gender equality important judgments!

 

இதே தீர்ப்பைப்போல், மும்பை நீதிமன்றத்திலும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. 12 வயது சிறுமியை 39 வயதுடைய நபர் ஒருவர், பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அவர்மீது போக்சோ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது. ஆனால் நீதிபதி புஷ்பா கனேடிவாலா தனது தீர்ப்பில், ஆடை இல்லாத நிலையில் உடலோடு உடல் தொடுவதுபோல் நடந்துகொண்டால் தான் அது பாலியல் வன்கொடுமையாகக் கணக்கில் கொள்ளப்பட்டு போக்சோ சட்டம் போடப்படும் என்றும், அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் அதற்கெல்லாம் போக்சோ சட்டம் பாயாது என்றும் மிகவும் மோசமான தீர்ப்பை வாசித்தார். அது மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதேபோல், பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரையும், கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்ததையும், அந்த குற்றவாளிகளை மாலையிட்டு வரவேற்றதையும் மிகுந்த வருத்தத்தோடு பார்க்க வேண்டியிருக்கிறது.

 

இம்மாதத்தில் கேரள நீதிமன்றத்தில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகள் ஒரு வழக்கு தொடுத்தனர். உயர் கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகள், இரவு 9.30 மணிக்கு மேல் விடுதியிலிருந்து வெளியே செல்வதைக் கட்டுப்படுத்த, கடந்த 2019ஆம் ஆண்டு கேரள அரசு கொண்டுவந்த அரசாணை, மாணவிகளுக்கு மட்டும் எதிராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வு, "மாணவர்களையோ, ஆண்களையோ கட்டுப்படுத்தாமல் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் மட்டும் ஏன் இரவில் வெளியே செல்வதற்கான கட்டுப்பாடுகள்? மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவிகளுக்கு மட்டும் ஏன் இரவு 9.30 மணிக்குமேல் வெளியே செல்லத் தடைவிதிக்கிறீர்கள்?" என்று கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

 

மேலும், பெண்களும் இந்த சமூகத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும். இரவு 9.30 மணிக்கு மேல் வெளியே சென்றால் பெண்களுக்கு தலைகுனிவா? மலையே இடிஞ்சு விழுந்திடுமா? பெண்களுக்குப் பாதுகாப்பானதாக நாட்டை வைத்திருக்க வேண்டியது ஆள்பவர்களின் கடமை! பெண்களுக்கு ஆண்களால் தொந்தரவு என்று கருதினால், அப்படியான சமூக விரோதிகளைப் பிடித்து சிறையில் அடையுங்கள். அதை விடுத்து, பெண்களுக்கு பூட்டு போடுவது எந்தவிதத்தில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு ஆதரவான இந்த கருத்துக்கு பெண்கள் தரப்பில் ஆதரவையும், ஆண்கள் மத்தியில் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. பெண்களின் உரிமைகள், அவர்களின் முன்னேற்றம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளுக்கு நீதிமன்ற வழக்குகளும், தீர்ப்புகளும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. பெண்கள் குறித்த சமூகப் பார்வையை மாற்றுவதற்கு இன்னும் இன்னும் முற்போக்கான தீர்ப்புகள் வந்துகொண்டேயிருக்க வேண்டும்.