கரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட பத்து மாத இடைவெளிக்கு பிறகு 'மாஸ்டர்' பட ரிலீஸ் மூலம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது தமிழ் திரையுலகம். எனினும் தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் வெளிவந்துள்ள 'மாஸ்டர்' அனைவராலும் ரசிக்கப்பட்டாரா?
குடி போதைக்கு அடிமையான கல்லூரி பேராசிரியராக வரும் விஜய் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தவராகவும் அதே சமயம் அதிகாரிகளால் வெறுக்கப்படுபவராகவும் இருக்கிறார். இதனால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக அனுப்பப்படுகிறார். அங்கு இருக்கும் மாணவர்களை சீரழித்து தன் தொழில் ஆதாயத்திற்காக விஜய் சேதுபதி பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை விஜய், விஜய் சேதுபதியிடம் இருந்து காப்பாற்ற முற்படுகிறார். இதனால் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் ஜெயித்தார்கள், விஜய் சேதுபதியின் இந்த செயலுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதே மாஸ்டர் படத்தின் மையக் கதை.
விஜய் இதில் மிகவும் ஸ்டைலிஷாக வருகிறார். அவரின் 'ஸ்வேக்' படம் முழுவதும் பரவசப்படுத்துகிறது. மற்ற படங்களை காட்டிலும் இதில் அவர் இயல்பான மனிதராகவே பல காட்சிகளில் தென்படுகிறார். அது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. இருந்தும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட இடங்களில் அவர் தன் மாஸ் இமேஜில் இருந்து வெளியே வந்து அண்டர் பிளே செய்யும் காட்சிகள் முழு திருப்தியாக இல்லை.
நாயகனின் கதையை காட்டிலும் படத்தின் வில்லனாக வரும் விஜய் சேதுபதியின் கதை அழுத்தம் நிறைந்ததாக அமைந்துள்ளது. அதுவே படத்தின் அரணாக இருந்து காத்திருக்கிறது. அந்த வாய்ப்பை மிக சிறப்பாகப் பயன்படுத்தி விஜய்க்கு டஃப் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. கூடவே எப்போதும்போல் விஜய் சேதுபதியின் குறும்பு கலந்த வில்லத்தனமும் விஜய் ரசிகர்களையும் கூட கவர்வது போல உள்ளது. குறிப்பாக விஜய்யும் விஜய் சேதுபதியும் சந்தித்துக்கொள்ளும் காட்சி 'பக்கா மாஸ்' என்று சொல்லத்தக்கது.
விஜய்க்கு என பிரத்தியேக பில்டப் காட்சிகள், கேமராவை பார்த்து பேசும் பன்ச் வசனங்கள்,சர்ச்சையை கிளப்பும் அரசியல் விமர்சனங்கள் என டெம்பிளேட் விஷயங்களை தவிர்த்து மாஸ்டர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இருந்தும் ரசிகர்களை கவரும் வகையில் கதையோடு சேர்ந்த சில கூஸ்பம்ப் மொமெண்ட்டுகளை அமைத்து தியேட்டரை அதிரவைத்துள்ளார். குறிப்பாக கபடி ஆடும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி அதற்கு சான்றாக அமைந்துள்ளது. படத்தின் முக்கிய பிரச்னையாக இருப்பது நீளம். கதைக்குள் செல்லவே நெடுநேரம் எடுத்துக்கொள்கிறது படம். முதல் பாதி நீளத்தை காட்டிலும் இரண்டாம் பாதி நீளம் இன்னும் அதிகமாக இருப்பது அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் திரைக்கதையின் வேகமும் ஒரே சீராக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை சற்று குறைத்துள்ளது.
விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் பெரும் பிம்பத்திற்கு நடுவே மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் மகேந்திரன், பூவையார், சாந்தனு, '96' கௌரி கிஷன், 'விஜய் டிவி' ரம்யா, தீனா ஆகியோர் ஆங்காங்கே பளிச்சிட்டுள்ளனர். அவரவர் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் நெடுக பல சின்னச் சின்ன சுவாரசியமான ஐடியாக்களை பயன்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். ஆனால், ஒரு முழுமையான படமாக ரசிக்க வைப்பதில் 'ஏதோ குறையுதே' என்ற உணர்வை ஏற்பட விட்டுவிட்டார். தரமான, தீவிரமான படங்கள் எடுக்கக்கூடிய இயக்குனர் மிகப்பெரிய நாயகனை கையாளும்போது ஏற்படக்கூடிய நேர்மறை விளைவுகளும் இந்தப் படத்தில் இருக்கின்றன, எதிர்மறை விளைவுகளும் இருக்கின்றன.
மாஸ்டர் படத்தின் மற்றுமொரு பலமாக அமைந்துள்ளது சத்யன் சூர்யன் ஒளிப்பதிவும், அனிருத்தின் அதிரடி இசையும். கல்லூரி சம்பத்தப்பட்ட காட்சிகளை கலர்ஃபுல்லாகவும், சீர்திருத்தப் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகளை 'ரா'வாகவும் காட்டி ரசிக்க வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன். அனிருத்தின் வாத்தி கம்மிங் மற்றும் வாத்தி ரெய்டு பாடல்கள் குத்தாட்டம் போட வைத்துள்ளது. குறிப்பாக பின்னணி இசையில் எப்போதும்போல் மாஸ் காட்டியுள்ளார். பல காட்சிகள், இசையால் சிறப்பாகின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்களை தியேட்டர்களுக்கு பாதுகாப்புக்கு நெறிமுறைகளோடு படையெடுக்க வைக்கும் விதமாக வெளிவந்துள்ள மாஸ்டர் படம் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதாக அமைந்துள்ளது.
ஆனாலும், மாஸ்டர் - கண்டிப்பும், கலகலப்பும் கொஞ்சம் குறைவு!