
தொட்டதெல்லாம் தங்கம் என பொற்காலத்தில் இருக்கும் இயக்குநர் சுந்தர் சி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து லைம் லைட்டில் இருந்து வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 4 மற்றும் மதகஜராஜா ஆகிய படங்கள் மிகப்பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வரிசையில் அடுத்ததாக தற்போது கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் கோதாவில் குதித்திருக்கும் சுந்தர் சி இந்த முறையும் சிக்ஸர் அடித்தாரா, இல்லையா?
ஒரு சிறிய ஊரில், ஊர் பெரிய மனிதர்களாக வரும் மைம் கோபி மற்றும் அருள் தாஸ் ஆகியோர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஒரு மாணவி மர்மமான முறையில் காணாமல் போகிறார். இதனை கண்டு அதிர்ச்சியாகும் அந்தப் பள்ளியின் ஆசிரியராக இருக்கும் கேத்தரின் தெரசா காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்துக் கொடுக்க போலீசில் புகார் கொடுக்கிறார். இந்த குற்ற செயல்களை தடுக்க போலீஸிலிருந்து ரகசியமாக உளவு பார்க்க ஒரு அண்டர்கவர் ஏஜென்ட் போலீசை காவல்துறை அந்த பள்ளிக்கு ஆசிரியராக அனுப்புகின்றனர். அப்பொழுது அந்த பள்ளியில் பி.டி. வாத்தியாராக வேலைக்கு சேர்கிறார் சுந்தர் சி.

பள்ளிக்கு வந்த இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பலை தன் முகத்தை மறைத்துக் கொண்டு புரட்டி எடுக்கிறார். இதனை கேத்தரின் தெரசா கண்டுபிடித்து விட சுந்தர் சி தான் அந்த போலீஸ் அதிகாரி என முடிவெடுக்கிறார். ஆனால் வில்லன் கும்பல்களோ இந்த செயல்களை செய்தது மற்றொரு பி.டி. வாத்தியாரான வடிவேலு தான் என நினைத்து அவரை துரத்துகின்றனர். இந்த அதிரி புதிரிக்கு இடையே சுந்தர் சி போலீஸ் அதிகாரி இல்லை என உண்மை வெளியே தெரிய வருகிறது. அப்படி என்றால் இவர்களை உளவு பார்க்க வந்த அந்த போலீஸ் அதிகாரி யார்? சுந்தர் சி ஏன் அவர்களை போட்டு புரட்டி எடுக்க வேண்டும்? வில்லன்களின் குற்ற செயல்களில் இருந்து அந்தப் பள்ளி காப்பாற்றப்பட்டதா, இல்லையா? இடையே சுந்தர் சி மற்றும் அவரது கேங் இணைந்து பல கோடி ரூபாய் பணத்தை கொள்ளை அடிக்க முயற்சிக்கின்றனர்? அவர்கள் ஏன் அந்த கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்? அதில் வெற்றி பெற்றார்களா, இல்லையா? போன்ற கேள்விகளுக்கு விடையாக இந்த கேங்கர்ஸ் திரைப்படத்தின் மீதி கதை அமைந்திருக்கிறது.
சுந்தர் சி வழக்கம்போல் தனக்கு என்ன வருமோ மக்களுக்கு என்ன பிடிக்குமோ அந்த மாதிரியான ஒரு காமெடி அம்சங்களை வைத்துக் கொண்டு தன்னுடைய டிரேட்மார்க் திரைக்கதை அமைப்புடன் இந்த படத்தையும் உருவாக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க சுந்தர் சி யின் திரைக்கதை யுக்தியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஆரம்பித்தது முதல் மெதுவாக தொடங்கி போக போக கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து இரண்டாம் பாதியில் இருந்து ஜெட் வேகத்தில் பயணித்து குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் படு ஸ்பீடாக ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன் முடிகிறது. முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி மிகச் சிறப்பாக அமைந்து காட்சிக்கு காட்சி சிரிப்பலையில் திரையரங்கம் அதிர்கிறது. குறிப்பாக காட்சிக்கு காட்சி கெட்டப் மாற்றும் வடிவேலு ரசிகர்களை கவர்ந்து, பழைய வடிவேலுவாக கம் பேக் கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வேகமும் விறுவிறுப்பும் அதிகம் இருக்கும் நிலையில் அது முதல் பாதியிலும் இருந்திருந்தால் இப்படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். கதையாக பார்க்கும் பட்சத்தில் முதல் பாதியில் பெரிதாக கதை இல்லாமல் நகர்ந்து இரண்டாம் பாதியில் கதை ஆரம்பித்து அதற்கான காரணங்கள் என படம் நகர்ந்து போகப்போக ஜனரஞ்சகமான காட்சிகள் மூலம் சிறப்பாக அமைந்து மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி.

படத்தின் நாயகனாக வரும் சுந்தர் சி தனக்கு வழக்கமாக என்ன வருமோ அந்த நடிப்பையே இந்த படத்திலும் கொடுத்து படத்தையும் அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவி இருக்கிறார். இவருடன் கூடவே பயணிக்கும் வடிவேலு இந்த படத்தின் உண்மையான கதாநாயகனாகவே மாறி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு விண்டேஜ் வடிவேலுவை இந்த படத்தின் மூலம் நாம் காண்கிறோம். அந்த அளவு தனது டிரேட் மார்க் காமெடிகளை நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பாக கொடுத்து பார்ப்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி இருக்கிறார். படம் ஆரம்பித்து சிறிது நேரம் கொஞ்சம் தொய்வான காமெடி காட்சிகள் மூலம் மெதுவாக நகரும்படியான திரைக்கதை அமைப்பில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் போக போக வேகம் எடுத்து தனது ட்ரேட் மார்க் நகைச்சுவை காட்சிகள் மூலம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க செய்து தியேட்டர்களில் விசில்களையும் கைதட்டல்களையும் பறக்க விட்டிருக்கிறார். அவரின் பங்களிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அவரை எப்படி எல்லாம் பயன்படுத்தினால் மக்களுக்கு பிடிக்கும் என்பதை சிறப்பாக கையாண்டு இருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இதன் மூலம் வடிவேலு அடுத்த ரவுண்டுக்கு தயாராகியிருக்கிறார்.
நாயகி கேத்ரின் தெரசா வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். வில்லன்களாக வரும் ஹரிஷ் பேரடி, மைம் கோபி, அருள் தாஸ் ஆகியோர் அவரவர் வில்லத்தனங்களை வழக்கம் போல் காண்பித்து வழக்கமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். மற்றபடி படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் அதகளம் செய்து இருக்கிறார் நடிகர் பக்ஸ். குறிப்பாக திரையரங்கில் இவர்கள் செய்யும் ரகளை வேற லெவல். உடன் நடித்திருக்கும் முனிஸ்காந்த் தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக கொடுத்து அவரும் சிரிப்பலையை உண்டாக்கி இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சந்தான பாரதி, விச்சு உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து கதைக்கு நல்ல பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். கௌரவத் தோற்ற நாயகியாக வரும் வாணி போஜன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இன்னொரு கௌரவத் தோற்றத்தில் வரும் விமலும் கவனம் பெற்று இருக்கிறார்.

சத்யா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிக சிறப்பாக அமைந்து காமெடி காட்சிகளுக்கு மெருகேற்றி இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவில் சுந்தர் சி படங்களுக்கே உரித்தான காமெடி பிரேம்களை சிறப்பாக செட் செய்து அதன்மூலம் நகைச்சுவை காட்சிகளை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இதுவரை குடும்பப்பாங்கான கதைகளை வைத்துக்கொண்டு அதில் கிளாமர் மற்றும் காமெடி காட்சிகளை உட்புகுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்த இயக்குநர் சுந்தர் சி, இந்த முறை ஒரு கொள்ளை அடிக்கும் கதையை வைத்துக்கொண்டு நம்மூர் மக்கள் ரசிக்கும்படி இந்த கால காமெடி நடிகர்களை வைத்துக்கொண்டு ஒரு கிராமத்து கதைகளத்தில் குடும்பங்கள் கொண்டாடும் என்டர்டைன்மென்டாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார். இதன் மூலம் தான் ஒரு வெற்றியை இயக்குநர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கிறார். அதேபோல் விண்டேஜ் வடிவேலுவை நமக்கு திரும்ப கொடுத்திருக்கிறார்.
கேங்கர்ஸ் - காமெடி கிங் வடிவேலு இஸ் பேக்!