
தமிழ் சினிமாவில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை பற்றி பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன. மாதத்திற்கு இந்த கதையை மையப்படுத்தி ஏதாவது ஒரு படம் வெளியாகி கொண்டே இருக்கும் இந்த சூழ்நிலையில் பிரேம்ஜி வழக்கம்போல் இல்லாமல் மாறுபட்ட நடிப்பில் சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ஒரு கதை அமைப்பை கொண்ட இந்த வல்லமை படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படம் சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? பார்ப்போம்...
காது கேளாத மனைவியை இழந்த பிரேம்ஜி கிராமத்தில் இருந்து தன் மகளோடு சென்னைக்கு குடியேறுகிறார். வந்த இடத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் உதவியுடன் சிறிய வீடு எடுத்து வாடகைக்கு தங்கி மகளை பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளியில் சேர்த்து விட்டு தானும் போஸ்டர் ஒட்டும் வேலையை செய்து கொண்டு பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். மிகவும் அமைதியான மிகவும் பாவப்பட்ட நபரான அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார். அந்த சமயம் ஒரு நாள் தன் மகளுக்கு பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வருகிறது. இதைக் கண்டு பதறிய அவர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். தன்மகள் வயதிற்கு வந்துவிட்டாலோ என எண்ணும் பிரேம்ஜிக்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் மகளை யாரோ ஒருவர் மயக்க நிலையில் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அவருக்கு தெரிய வருகிறது. இந்த விஷயம் தன் மகளுக்கும் தெரிய வர அந்த சிறுமி தன்னை இப்படி செய்த நபரை தண்டிக்காமல் விடக்கூடாது என முடிவெடுக்கிறார். இருவரும் பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபரை தேடி கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சி கைக்கூடியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

வழக்கமாக விரல் வித்தை காட்டுவது, பஞ்ச் வசனம் பேசுவது, எந்நேரமும் மது போதையில் மிதந்து கொண்டிருப்பது, முடிகளை கலைத்து விளையாடுவது, நடிகர்களுடன் சப்போர்ட்டிங் ஆக சுற்றித் திரிவது என பயணித்து வந்த பிரேம்ஜி இந்த முறை கதையின் நாயகனாக உருவெடுத்து இருக்கிறார். மிகவும் சாமானிய மனிதனாக வரும் அவர் சாமானியன் செய்ய முடியாத ஒரு விஷயத்தை தன் சிறிய மகளோடு எப்படி செய்கிறார் என்பதை எதார்த்தம் கலந்து ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகளைப் பெற்ற அப்பாக்கள் பதறும் படியான ஒரு கதை அமைப்பை எடுத்துக்கொண்டு கொடூர மனிதர்களை தண்டிக்க யார் வேண்டுமானாலும் முயற்சிக்கலாம் அதேசமயம் கொடூர மனிதனை தண்டிக்க தந்தையோ தாயோ முடிவெடுக்காமல் பாதிக்கப்பட்ட சிறுமியே முடிவெடுத்து அதற்கான முயற்சி எடுப்பது என்ற புதுமையான கதை கருவை எடுத்துக்கொண்டு அதன் மூலம் எதார்த்த படமாக இந்த படத்தை கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் கருப்பையா முருகன்.
இயக்கம் மட்டுமல்லாமல் பாடல்களை எழுதி படத்தை தயாரிக்கவும் செய்து பிரேம்ஜியை எதார்த்த நாயகனாகவும் ஆக்கி அதன் மூலம் எளிய மனிதர்களின் வாழ்வியலை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி அதனுள் யாரும் யூகிக்க முடியாத ஒரு விஷயத்தை கையில் அதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு தாங்களே தண்டனை அளிக்கும்படியான கதை அமைப்புக்குள் நாயகர்களை உலா வரச் செய்து அதன் மூலம் சமூகத்துக்கு ஒரு விழிப்புணர்வான கதையை கொடுத்திருக்கிறார். என்னதான் எதார்த்த மனிதர்களின் கதையாக இருந்தாலும் சாமானிய மனிதர்களின் வாழ்வியலை அப்படியே கண்முன் கொடுத்திருந்தாலும் திரைக்கதையில் பல்வேறு லாஜிக் மீறல்கள் கண்கூடாக தெரிவது படத்தை அயர்ச்சி அடைய செய்கிறது.

அதேபோல் படம் முழுவதும் ஆங்காங்கே பல்வேறு விதமான வேகத்தடைகள் இருப்பதும் படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் எதார்த்த வாழ்வியலை அப்படியே காட்டிய இயக்குநர் எதார்த்தமான விஷயங்களை அப்படியே காட்ட ஏனோ தவற விட்டிருக்கின்றார். நம்ப முடியாத அளவுக்கு ஒரு விஷயத்தை எப்படி ஒரு சாமானிய மனிதன் சிறுமையை வைத்துக் கொண்டு செய்ய முடியும் என்ற ஒற்றை வரி கதையை வைத்துக்கொண்டு அதை நம்பும்படியாக கொடுக்காமல் கொஞ்சம் சரிவை சந்திந்திருக்கிறார். இது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. மற்றபடி கதை சமூகத்துக்கு தேவையான ஒன்றாக இருப்பதும் படத்தில் நடித்திருக்கும் மாந்தர்கள் அதற்கேற்றவாறு எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
மேற்குறிப்பிட்டது போல் பிரேம்ஜி வழக்கமான நடிப்பை விட்டு விட்டு எதார்த்தமான ஒரு நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்தி நடிப்பில் கவனம் பெற்று இருக்கிறார். ஒரு மகளுக்கு தந்தையாக நடித்திருக்கும் அவர் அப்படியே ஒரு ஏழை தந்தையை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார். சில இடங்களில் வழக்கம் போல் ஓவர் ஆக்டிங் இருந்தாலும் பல இடங்களில் நெகிழவைக்கும் நடிப்பை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். பிரேம்ஜியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி திவ்யதர்ஷினி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். பக்கத்து வீட்டு இளைஞராக வரும் நபர் வட மாநில சாயலில் தமிழில் பேசியிருக்கிறார். மற்றபடி போலீஸ் அதிகாரியாக வரும் முத்துராமன், சூப்பர் குட் சுப்பிரமணியன் மற்றும் தொழிலதிபர் ரஜித், அவரது ஓட்டுநர் சுப்பிரமணியம், பள்ளி உதவியாளர் திலீபன் ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக கொடுத்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர்.

பாடல்களை காட்டிலும் பின்னணி இசையில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.கே.. ஒளிப்பதிவை கையாண்டிருக்கும் சூரஜ் நல்லுசாமி எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் பெண் குழந்தைகள் வாழும் அவல நிலையை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் கருப்பையா, கதையை அழுத்தமாக சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் படி கூறியிருந்தாலும் திரைக்கதையில் ஏனோ சற்றே தடுமாறி இருக்கிறார். அதை சரி செய்திருந்தால் இந்த படம் நிச்சயம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக அமைந்திருக்கும்.
வல்லமை - வலிமை குறைவு!