Skip to main content

சூர்யாவின் ஃப்ளைட் சரியாக தரையிறங்கியதா? சூரரைப் போற்று விமர்சனம்

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

suriya

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரின் படம் திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக டிஜிட்டலில் வெளியாவது இதுவே முதல்முறை. மே மாதம் வெளியாக வேண்டிய சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படம், கரோனா அச்சுறுத்தலால் ரிலீஸ் தள்ளிப்போக, தற்போது தீபாவளி ரிலீஸாக ஓடிடியில் நேற்று இரவு வெளியானது. இதுவரை சூர்யாவின் நடிப்பில் வெளியான அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே, காப்பான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஆனால், இவை எதுவும் பொதுப்பார்வையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை. இதில் 24 படம் தொழில்நுட்ப ரீதியாகவும், கதை ரீதியாகவும் புதுமையாக இருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனால் அடுத்த படம் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படியான ஒரு படமாக இருந்தால்தான் வெற்றிபெற முடியும் என்பதற்காக ஃபார்முலா, டெம்பிளேட் மசாலா படத்தில் நடிக்கச் சம்மதிக்காமல், சுதா கொங்கராவுடன் இணைந்து இந்த புது முயற்சியை எடுத்தார் சூர்யா. தமிழ் சினிமாவின் உட்சநட்சத்திரங்களில் முக்கியமானவர் சூர்யா, அவர் ஒரு பெண் இயக்குனருடன் பிரம்மாண்ட பொருட்செலவில் நடிப்பது என்பது பலரையும் மிரட்சியடைய செய்தது எனலாம். ஏற்கனவே இறுதிச்சுற்று என்னும் படத்தில் பலருக்கும் தெரிந்திடாத கதைக் களத்தை அனைவருக்கும் பிடிக்கும்படி வழங்கியவர் சுதா. இந்த படத்தையும் அனைத்து தரப்பு மக்களையும் தன்னுடைய படைப்பால் கவர்ந்திருக்கிறாரா? 

 

எரிபொருள் தீர்ந்த தனது ஃப்ளைட்டை சூர்யா தரையிறக்கப் போராடும் காட்சியிலிருந்து விறுவிறுப்புடன் துவங்குகிறது படம். சூர்யாவுக்கு மாஸ் ஒப்பனிங் எதுவும் இல்லாமல் கதைக்கு ஒரு மாஸான ஒப்பனிங் கொடுத்து கதையை நகர்த்துகிறார் சுதா. அடுத்தடுத்து அவருடைய பின் கதைகளான அரசியல், பெற்றோர், காதல், ஏர் ஃபோர்ஸ் பணி, லட்சியம் என்று தொடங்கிய விறுவிறுப்புடனே படத்தின் முதல் பாதி முடிகிறது. பொம்மியாக வரும் அபர்ணாவுடன் நடைபெறும் ’மாறா’ சூர்யாவின் கலந்துரையாடல்கள் மணிரத்னம் படக் கதாபாத்திரங்களை ஞாபகப்படுத்துகின்றன. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே கலந்துரையாடல்கள் சினிமா தனத்துடனும், சில இடங்களில் உண்மை தனத்துடனும் பயணிப்பதால், நமக்குப் பெரிதாகத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, அதேசமயம் சளிப்பையும் கொடுக்கவில்லை. ஸ்டீரியோடைப் பெண் கதாபாத்திரத்திலிருந்து வேறுபட்டுக் காணப்படும் பப்ளியான, துடுக்கான அபர்ணா நம்மை எளிதில் கொள்ளைகொள்கிறார். சூர்யா, தனது லட்சியத்திற்காகப் போராடும்போது பேசப்படும் வசனங்கள் கூஸ்பம்ஸ் மொமண்ட்ஸ்களாக அமைகின்றன. திரையரங்கில் படம் வெளியாகியிருந்தால் விசில் சத்தமும், கை தட்டல் சத்தமும் காது ஜவ்வைக் கிழித்திருக்கும். ‘உறியடி’ விஜய்குமார் தான் இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். வசனத்தில் புரட்சியும் வெடிக்கிறது, சூர்யாவின் அரசியல் நிலைப்பாடும் ஆங்காங்கே அப்பட்டமாக வெளிப்படுகிறது. இதுவரை வெளியான படங்களிலிருந்து வேறுபட்டு, இந்த படத்தில் பாமர அரசியலைச் சகஜமாகவே பேசியிருக்கிறார் சூர்யா. அதனால்தான் அது சினிமா தனமாகத் தெரியாமல், படத்துடன் ஒன்றி தெரிகிறது. 

 

சுதா கொங்கரா, இயக்குனராக படத்தை ஒரு விமானம் போல பிரம்மாண்டமாக உருவாக்கினாலும், பயணிகளைக் கவனமாக தன்னுடன் அழைத்துச்செல்லும் பைலட் போல சூர்யா தனது முழு நடிப்புத் திறமையைக் காட்டி நம்மைக் காட்சிகளோடு பயணிக்க வைக்கிறார். மற்ற படங்களைவிட இதில் அதீத கவனம் செலுத்தியே நடித்திருக்கிறார் என்று படம் பார்த்து முடியும் வரை உணர்த்திக்கொண்டே இருக்கிறார். படம் முழுவதும் சூர்யாவே கண்ணில் இருக்கிறார். அவ்வப்போது, மற்ற கதாபாத்திரங்கள் அவருடன் கலந்துரையாடிவிட்டுச் செல்கின்றன. 

 

திரைக்கதையாய் பார்த்தால் இன்னும் ஒரு வலுவான எழுத்து இருந்திருக்க வேண்டும், இருந்திருந்தால் மாஸ்டர் பீஸ் என்று பேசப்பட்டிருக்கும். படம் பார்க்க புது முயற்சிப்போல தெரிந்தாலும், சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் நிறைய டெம்பிளேட் திரைக்கதைகள் தென்படுகிறது. டெம்பிளேட் என்றவுடன் ஞாபகம் வருவது, இப்படத்தின் வில்லன்தான். இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படும் அதே சானிடைஸரை கையில் ஊற்றி சுத்தம் செய்துகொள்ளும் பழைய டைப் வில்லன். ஒரு வலுவான ஹீரோ கதாபாத்திரத்திற்கு இவ்வளவு மோசமான கதாபாத்திர கட்டமைப்பைக் கொண்ட வில்லன், பார்வையாளர்களுக்கு ஒட்டவில்லை. சூர்யாவுக்கு இந்த படத்தில் எதிரியாக இருப்பது அதிகாரமும், பணமும் என்பதால்தான், சூர்யாவின் பிரச்சனை நமக்கு ஒட்டிக்கொண்டு, அவருடைய கதாபாத்திரம் வெற்றிபெற வேண்டும் என்று எண்ணம் உருவாகிறது. சானிடைஸர் வில்லனின் வில்லத்தனத்தால் அது இல்லை. முதல் பாதியில் கவனமாக டேக் ஆஃப் செய்யப்பட்ட படம், இரண்டாம் பாதியில் மேகத்துக்கு நடுவே செல்லும் ப்ளைட் போல பயணிகளான நமக்கு ஆட்டம் காட்டியது. ஆமாம், இரண்டாம் பாதியில் திரைக்கதை சுவாரஸ்யத்தைக் குறைக்கவே செய்தது (பயோபிக்களின் வழக்கமான பிரச்சனை தான்), ஆனால் க்ளைமேக்ஸில் அனைத்தும் சரிகட்டப்பட்டது.

 

suriya

 

 

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறான ‘சிம்பிளி ஃப்ளை’ புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் சூரரைப்போற்று என்பது பலரும் அறிந்ததே. ஆனால், படம் முழுக்க அவருடைய வாழ்க்கையைப் பற்றி பேசவில்லை, அவருடைய வாழ்க்கையிலிருந்து அடிப்படை கதை, சில உண்மை சம்பவங்களை எடுத்துக்கொண்டு சினிமாவுக்காக பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் முழுவதும் வரும் கனவுகளை நோக்கிய பயணம் இளைஞர்களின் மனதைக் கட்டிப்போடும் காட்சிகளாக இருக்கின்றன.

 

சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கும் ‘பூ’ ராம், அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி இருவருமே தங்களின் கதாபாத்திரத்திற்குத் தேவையானதைச் சிறப்பாகக் கொடுத்துவிட்டனர். அதேபோலதான், கருணாஸ், காளி வெங்கட், சூர்யாவின் ஏர் ஃபோர்ஸ் நண்பர்களாக வரும் விவேக், சைத்தன்யா உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை அழகாகச் செய்துவிட்டனர். இதுபோன்ற கதைகளில் முதலில் வில்லன்போல காட்டப்பட்டு, கடைசியில் ஹீரோவே போதும் என்ற அளவிற்கு நல்லது செய்யும் ஒரு கதாபாத்திரம் இருப்பார்கள். அந்த கதாபாத்திரத்தில்தான் மோகன்பாபு நடித்திருக்கிறார். ஜீவி பிரகாஷ், படம் வெளியாகுவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பாடல்களைக் கொடுத்தது மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் முழு பலத்தைக் கொடுத்திருக்கிறார். எங்கெங்கு தேவையோ அந்தந்த இடத்தில் மட்டுமே பின்னணி இசையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சூரரைப்போற்று படத்தை மிகவும் க்ளாஸாக காட்டியதற்கு முக்கிய பங்கு பெறுபவர் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ரெட்டி.

 

க்ளைமேக்ஸில், சூர்யா வெற்றிபெற்றாரா பெறவில்லையா என்பதையே த்ரில்லிங்காக காட்டியது, இரண்டாம் பாதி ஆகியவை படம் ஏற்படுத்திய சோர்வை தவிடுப்பொடியாக்கியது. மொத்தத்தில் சூரரைப்போற்று மூலம் சூர்யா மீண்டும் தனது சினிமா வெற்றியை டேக் ஆஃப் செய்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்