நடிகர் சூர்யா முதன்முறையாக வக்கீலாக நடித்துள்ள படம், அதுவும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதைக்களம், சூர்யாவின் ஓடிடி ஹிட் செண்டிமெண்ட், ஆர்வத்தைத் தூண்டிய அட்டகாசமான ட்ரைலர் என பல்வேறு எதிர்பார்ப்புகளோடு ஓடிடியில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா..?
பழங்குடியினமான இருளர் இனத்தைச் சேர்ந்த மணிகண்டனை போலீஸார் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்கின்றனர். அவரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து சித்திரவதை செய்கின்றனர். இதை எதிர்த்து அவரது மனைவி லிஜோமோல் ஜோஸ் போராடுகிறார். இதற்கிடையே, காவல் நிலையத்திலிருந்து மணிகண்டன் தப்பிவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். போலீசார் மேல் லிஜோமோல் ஜோஸ்க்கு சந்தேகம் வர, வக்கீல் சூர்யாவுடன் இணைந்து போலீசார் மீது வழக்கு தொடர்கிறார். வழக்கு உயர் நீதிமன்றம் வரை செல்கிறது. அங்கு நடக்கும் வழக்கு விசாரணையில் மணிகண்டன் மேல் போடப்பட்ட திருட்டு வழக்கு நிரூபிக்கப்பட்டதா, மணிகண்டன் நிலை என்னவானது? என்பதே படத்தின் மீதிக் கதை.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீதான அடக்குமுறை மற்றும் அவர்களுக்கெதிரான அநியாயங்களைச் சமரசமின்றி அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் டி.ஜெ. ஞானவேல். தங்களை மேலானவர்களாக அறிவித்துக்கொண்டுள்ள சமூகத்தின் சில குறிப்பிட்ட சாரார், பழங்குடியின மக்களை எப்படி அணுகுகிறார்கள், அதேபோல் தங்களுடைய குற்றச்செயல்களை மறைக்க எப்படி அவர்களின் அறியாமையைப் பயன்படுத்துகின்றனர் என்பதை விரிவாகவும், அழுத்தமாகவும் அதேசமயம் விறுவிறுப்பான திரைக்கதையுடனும் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தியுள்ளது 'ஜெய் பீம்' திரைப்படம்.
பொதுவாக படம் வெற்றிபெற வேண்டுமானால் அதில் கமர்ஷியல் அம்சங்களைப் படக்குழு சேர்ப்பதுண்டு. ஆனால், இந்தப் படத்தில் அவ்வாறான கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்றாலும், அதையெல்லாம் தாண்டி அழுத்தமான கதையாடலும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், ஆழமான வசனங்களும் அயர்ச்சி ஏற்படாதவாறு அமைந்து படத்தை வெற்றிகரமாகக் கரைசேர்த்துள்ளது. மிகவும் ராவான ஒரு கதையைத் திறம்படக் கையாண்டு, சிறப்பாகத் திரைக்கதை அமைத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் டி.ஜெ. ஞானவேல்.
நாயகனாக வரும் நடிகர் மணிகண்டன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இருளர் இன வழக்காடல்களைச் சிறப்பாகக் கையாண்டு, அதற்கேற்ப நடித்து கவனம் பெற்றுள்ளார். இவரது அப்பாவியான நடிப்பும், கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பும் பார்ப்பவர்கள் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்திவிடுகிறது. இயக்குநரின் நடிகராகவே மாறியுள்ளார் மணிகண்டன். நாயகி லிஜோமோல் ஜோஸ் கேரளத்துப் பெண்மணியாக இருந்தாலும் சொந்தக் குரலில் அழகாக இருளர் மக்களின் மொழி வழக்கை அச்சு பிசகாமல் பேசி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கணவனை இழந்து வாடும் கர்ப்பிணிப் பெண்ணின் துல்லியமான உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தி அனுதாபம் கூட்டியுள்ளார்.
படத்தின் இன்னொரு நாயகனான நடிகர் சூர்யா எப்போதும்போல் தனது தரமான நடிப்பில் மிளிர்ந்துள்ளார். முதல்முறையாக வக்கீலாக நடித்திருக்கும் இவர், அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன நியாயம் செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்துள்ளார். காவல்துறையினரால் மலைவாழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராடும் இவரது கதாபாத்திரம் படத்துக்கு ஆணிவேராக அமைந்து வேகம் கூட்டுகிறது. போலீசாக நடித்திருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ், தனது அனுபவ நடிப்பின் மூலம் கவனம் பெற்றுள்ளார். சிறிது நேரமே வந்தாலும் இவரது கதாபாத்திரம் மனதில் பதிகிறது. சிறிய வேடத்தில் வரும் நடிகை ரஜிஷா விஜயன் தனக்கு கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார். இவரது நம்பிக்கை அளிக்கும்படியான கதாபாத்திரம் படத்துக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. மற்றபடி முக்கிய பாத்திரத்தில் வரும் இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் ஆகியோர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் மற்றும் காவல் நிலையம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்துக்குத் தூணாக இருந்து பலமளிக்கிறது. அதேபோல் பாடல்களும் படத்தின் தன்மையையும், உணர்ச்சிகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளன.
1995இல் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 'ஜெய் பீம்' படம், மலைவாழ் அப்பாவி மக்கள் மீது அதிகாரம் படைத்தவர்கள் மேற்கொண்ட வன்கொடுமைகளைச் சமரசமில்லாமல் விறுவிறுப்பாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
'ஜெய் பீம்' - சாட்டையடி!