தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் வெளியீடாக, ‘என் அருமைக் கன்னுக்குட்டி’ எனும் விழிப்புணர்வுக் குறும்படம் வெளியாகியுள்ளது. இப்படம், 'தாகூர் சர்வதேச திரைப்பட விழா', 'டோக்கியோ திரைப்பட விழா', 'விரிஜின் ஸ்ப்ரிங் சினிமா விழா' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றுள்ளது. திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ள இக்குறும்படம், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை கிராமத்துப் பின்னணியோடு மிக நேர்த்தியாகச் சொல்லியுள்ளது. பிள்ளைகளின் கல்விக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளின் கல்விக்கு துணை நிற்பதே பெற்றோரின் கடமை என்பதை உணர்த்துகிறது இத்திரைக்கதை.
கூகுள் மேப் கூட காட்டாத குக்கிராமம் ஆறாமணி. கல்லூரிப் பேராசிரியையான ரித்விகா, அந்த கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். காலைநேர பரபரப்பில், தனது குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஸ்கூட்டியை வீட்டுக்கு வெளியே எடுக்கிறார். அப்போது அவரின் பெண்குழந்தை, "அம்மா.. ஸ்கூல்ல என்ன எல்லாரும் 'ஸ்கூட்டி குட்டி', 'ஸ்கூட்டி குட்டி'ன்னு கிண்டல் பண்றாங்கம்மா" எனப் புகார் சொல்ல, அதுக்கு நீ என்ன சொன்ன எனக் கேட்கிறார். "நான் போடி எருமைன்னு" சொன்னேன் என்கிறது குழந்தை. பால் குடுக்குற எருமையை அப்படிச் சொல்லலாமா எனக் கேட்டுவிட்டு அதை எப்படி எதிர்கொள்வது எனக் குழந்தைக்கு அறிவுரை சொல்கிறார். செல்லும் வழியில், தன் பசுமையான பால்ய நினைவுகளை அசைபோடுகிறார் ரித்விகா.
ரித்விகாவின் அப்பாவாகவும் எருமைப் பால் வியாபாரியாகவும் வருகிறார் 'ஜோக்கர்' பட நடிகர் குரு சோமசுந்தரம். படிக்காத பாமரரான அவர், தனது மகள் நன்றாகப் படித்துப் பெரிய ஆளாக வரவேண்டும் என ஆசைப்படுகிறார். பள்ளிக்குச் செல்ல ஒன்றரை கிலோமீட்டர் நடக்க வேண்டும். அவ்வளவு தூரம் நடந்தால், மகளின் பிஞ்சுப் பாதம் நோகும் என்பதால், எருமை மாட்டின் மீது மகளை அமர்த்தி 'அருமை கன்னுக்குட்டி.. என்னருமை கன்னுக்குட்டி' எனப் பாடியவாறு ஊர்வலம்போல பள்ளிக்கு அழைத்து வருகிறார். இதனால், ரித்விகாவை சக மாணவர்கள் 'என் எருமை கன்னுக்குட்டி' எனக் கேலி செய்தனர். இது மகள் படிப்புக்கு இடையூறாக இருந்துவிடுமோ என அஞ்சிய குரு சோமசுந்தரம், அடுத்த நாளே கேலி செய்த மாணவர்களின் தெருவுக்குச் சென்று அவர்களின் பெற்றோரிடம் சத்தம் போடுகிறார்.
"என்ன பொழுதுக்கும் படிச்சிட்டே இருக்க, வந்து சாமான கழுவு" என அடிக்கடி வீட்டு வேலை செய்யச் சொல்கிறார் ரித்விகாவின் அம்மா. அதெல்லாம் வேணாம், படிப்புதான் உனக்கு முக்கியம். நீ படி என மனைவியின் பிற்போக்குத்தனங்களை விமர்சிக்கிறார் குரு. பருவம் அடைந்ததும் ரித்விகாவின் தோழிகள் படிப்பை நிறுத்திவிட்டார்கள். சிலர் திருமணமாகி வேறு ஊருக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், ரித்விகாவின் அப்பா அப்படி எந்த தொந்தரவும் மகளை நெருங்கிவிடாமல் பார்த்துக் கொண்டார். இப்படி மகளின் படிப்புக்கு இடையூறாக நிற்கும் எல்லா களைகளையும் வெட்டித் தள்ளுகிறார் பாசக்கார அப்பா. தான் படித்ததுபோல் மகளையும் படிக்க வைக்க வேண்டும் என உறுதியுடன் இருக்கிறார் ரித்விகா.
"பெண் குழந்தைகளின் படிப்பை எக்காரணத்தைக் கொண்டும் பாதியில் நிறுத்தாதீங்க" எனும் சமூகக் கருத்தைச் சுமந்து வருகிறது 'என் அருமைக் கன்னுக்குட்டி'. தனது மகள் படித்துப் பெரிய ஆளாக உயரவேண்டும் எனும் ஒரே சிந்தனையோடு வெள்ளந்தியாக வலம்வரும் குரு சோமசுந்தரம் அப்ளாஸ் அள்ளுகிறார். மிக இயல்பான உடல்மொழியில் ரித்விகா ஸ்கோர் செய்கிறார். கிராமத்து பசுமை, பின்னணி, நிகழ்காலம் மற்றும் ஃபிளாஷ்பேக் உள்ளிட்ட காட்சியமைப்பில் உதவி ஒளிப்பதிவாளரான வீர குமார் கவனம் ஈர்க்கிறார். ஜி.ஜி.எம் இசையில் உருவான, 'அரும கன்னுக்குட்டி... என் அரும கன்னுக்குட்டி..' பாடல் நிச்சயம் கேட்போரை வசீகரிக்கும் ரகம். இந்த விழிப்புணர்வு குறும்படத்தை இயக்குநர் வளர்மதி எழுதி இயக்கியுள்ளார்.
ஓபனிங் சீனில், "என்னங்க பால கொதிக்கவச்சி அணைச்சிடுங்க.. மறந்துடாதிங்க" எனக் கணவரிடம் சொல்லிவிட்டு, ரித்விகா வேலைக்குச் செல்லும் காட்சியில் உள்ளது, பெண் கல்வியின் முக்கியத்துவம். சிறந்த முயற்சி. பாராட்டுகள்!