Skip to main content

திரில்லர் படம் வெற்றிக்கனியை பறித்ததா? - 'மெரி கிறிஸ்துமஸ்' விமர்சனம்!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
merry christmas movie review

அந்தாதுன் படம் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். இந்த முறை ஹிந்தி மட்டும் அல்லாமல் தமிழிலும் கால் பதித்திருக்கிறார். அதுவும் தமிழ் ரசிகர்களுக்காக விஜய் சேதுபதியும், ஹிந்தி ரசிகர்களுக்காக கத்திரினா கைஃபும் இணைத்து அவர்களோடு கூட்டணி சேர்ந்து மீண்டும் ஒரு திரில்லர் படம் மூலம் பொங்கல் ரேசில் களம் கண்டுள்ளார். இந்த ரேஸில் அவர் வெற்றிக்கனியை பறித்தாரா இல்லையா?

ஒரு கொலை குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் ஜெயிலில் தண்டனையை அனுபவித்து விட்டு மீண்டும் மும்பைக்கு திரும்புகிறார் விஜய் சேதுபதி. வந்த இடத்தில் அவருக்கென்று யாரும் இல்லை. இருந்த அவரது தாயும் ஏற்கனவே இறந்து விடுகிறார். இதனால் மனம் நொந்து போன அவர் சற்று இளைப்பாற ஒரு ரெஸ்ட்டோபாருக்கு செல்கிறார். போன இடத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தாயான கத்ரீனா கைஃப் தன் மகளோடு அதே ரெஸ்ட்ரோபாரில் இருக்கிறார். அங்கு விஜய் சேதுபதிக்கும், கத்ரீனா கைப்புக்கும் எடுத்த எடுப்பிலேயே பார்த்த மாத்திரத்தில் நட்பு ஏற்படுகிறது. இருவரும் கத்ரீனா கைஃப் வீட்டிற்கு மது அருந்த செல்கின்றனர். போன இடத்தில் கத்ரீனா கைஃப் கணவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடைக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் சேதுபதி, போலீசுக்கு பயந்து அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார். இருந்தும் விதி அவரை மீண்டும் கத்ரீனா கைஃப் வீட்டிற்கு கொண்டு செல்கின்றது. இதையடுத்து அந்த கொலையை செய்தது யார்? இந்தக் கொலையை துப்புத் துலக்க வரும் போலீஸிடம் இருந்து விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் தப்பித்தார்களா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

எப்பொழுதும் போல் தன் வழக்கமான திரைக்கதை பாணியை இந்தப் படத்திலும் சரியான திருப்பங்களுடன் கொடுத்து மீண்டும் வரவேற்பைப் பெறும் வகையிலான ஒரு ஃபீல் குட் திரில்லர் படம் கொடுத்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். படம் ஆரம்பித்து ஸ்டேஜிங்கிற்கு வெகு நேரம் எடுத்துக் கொண்டாலும் போகப் போக அழுத்தமான திருப்பங்கள் நிறைந்த காட்சி அமைப்புகள் படத்தோடு நம்மை ஒன்ற வைத்து அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறச் செய்து அதற்கு ஏற்றவாறு பல்வேறு டிவிஸ்டுகள் நிறைந்த திரைக்கதை அமைத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். முதல் பாதி சற்றே மெதுவாக ஆரம்பித்தாலும் போகப்போக வேகம் எடுத்து இரண்டாம் பாதி நல்ல கிரிப்பிங்காக அமைந்து இறுதியில் எதிர்பாராத வகையில் டிவிஸ்டுகள் நிறைந்த கிளைமாக்ஸோடு முடிந்து பொங்கல் ரேசில் வெற்றிக்கனியை பறித்திருக்கிறது.

பொதுவாக எப்போதும் நடிப்பால் கைத்தட்டல் பெறும் வகையில் நடிக்கும் விஜய் சேதுபதி, திரில்லர் படங்கள் என்றாலே இன்னும் ஒரு படி மேலே போய் ஜஸ்ட் லைக் தட் நடித்து ரசிகர்களை எளிதாக கவர்ந்து விடுவார். அந்த வகையில் இந்த திரில்லர் படத்திற்கும் அதை அவர் செய்யத் தவறவில்லை. படத்தில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. இருந்தும் கிடைக்கின்ற சின்ன சின்ன கேப்புகளில் எல்லாம் அழகான வசன உச்சரிப்புகள், முகபாவனைகள் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றிருக்கிறார். இவருக்கு சரிசம போட்டியாளராக சிறப்பான நடிப்பை தன் அனுபவ நடிப்பால் வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றுள்ளார் நாயகி கத்ரீனா கைப். நாய்களுடன் காட்டும் கெமிஸ்ட்ரி ஆகட்டும், தன் பெண் குழந்தை மேல் பாசம் காட்டும் தாயாகவும் ஒரு சேர சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் உடல் மொழி ஆகியவையும் கவரும்படி இருக்கச் செய்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். படம் முழுவதும் இவர்கள் இருவருமே ஆக்கிரமித்திருப்பதால் மற்றவர்களுக்கு அதிக வேலை இல்லை. இருந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் போலீஸ் அதிகாரிகள் ராதிகா சரத்குமார், சண்முகராஜன், மூத்த நடிகர் ராஜேஷ், கவின்ஜே பாபு, வாய் பேச முடியாத சிறுமி உட்பட பலர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசில் புகுந்து விளையாடுகின்றனர். குறிப்பாக போலீசார் துப்பறியும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ராதிகா அண்ட் கோ. 

மது நீலகண்டன் ஒளிப்பதிவில் கத்ரீனா கைஃப் சம்பந்தப்பட்ட வீடு, அதனுள் நடக்கும் காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேர காட்சிகளில் இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக கலர்ஃபுல்லாகவும் அதேசமயம் திரில்லருக்கான எலிமெண்ட்ஸ்களையும் சரியான கலவையில் கொடுத்து படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இவருடன் இணைந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் டேனியல் பி ஜார்ஜ். இவரது பின்னணி இசை படத்திற்கு மிக சிறப்பாக உயிரூட்டி உள்ளது.

ஒரே ஒரு வீட்டுக்குள் நடக்கும் ஒரு கொலை சம்பவத்தை வைத்துக்கொண்டு திரில்லர் பாணியில் சிறப்பான அதிரடி திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையுடன் கொடுத்து பார்ப்பவர்களுக்கு பரவசத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம்.

மெரி கிறிஸ்துமஸ் - நிறைவான திரில்லர்!

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!