Skip to main content

இதுக்கு மேல ஒரு ட்விஸ்ட்டு தேவையா? கழுகு - 2 விமர்சனம்

Published on 04/08/2019 | Edited on 05/08/2019

எளிய, அதிகம் தெரியாத ஒரு வாழ்க்கை... மென்மையான காதல்... களம் தாண்டாத நகைச்சுவை... அந்த மண்ணில் நிலவக்கூடிய வன்மம், நிகழக்கூடிய துரோகம்... அதனால் நிகழும் சோகம்... இவைதான் 2012இல் வெளிவந்த 'கழுகு' படத்தின் சாரமாக இருந்து ரசிகர்களை கவர்ந்தவை. மேலும் எடுத்துக்கொண்ட கதையின் மையத்திலிருந்து விலகாமல் பயணித்த திரைக்கதை படத்தில் நம்மை ஒன்ற வைத்தது. படத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி ஆகியோருக்கும் படத்தின் இயக்குனரான சத்யசிவாவுக்கும் நல்ல அடையாளமாகத் திகழ்ந்தது. யுவனின் இசையில் பாதகத்தி, ஆத்தாடி மனசுதான் பாடல்கள் மனதை இதமாக வருட, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாடல் ஆட்டம் போட வைத்தது. இத்தனை நேர்மறை அம்சங்களைக் கொண்ட படமான 'கழுகு' படத்தின் டைட்டிலில் 'கழுகு 2', அதே டீமால் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தனை நேர்மறை அம்சங்களையும் தக்கவைத்துள்ளதா? பணியாற்றியவர்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லுமா?

 

kazhugu krishna



ஜானி, காளி இருவரும் தேனி பகுதியில் சின்னச் சின்ன திருட்டு செய்து பிழைக்கும் திருடர்கள். கொடைக்கானல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட காட்டுப்பகுதியில் செந்நாய்களின் தாக்குதலுக்கு பயந்து யாரும் மரம் வெட்டும் வேலைக்கு வருவதில்லை. இதற்கு தீர்வாக பாதுகாப்புக்கு வேட்டைக்காரர்களை தேடுகிறார் லோக்கல் முக்கியஸ்தர். திருடர்களான ஜானியையும் காளியையும் தவறுதலாக வேட்டைக்காரர்கள் என்றெண்ணி தங்கள் ஊருக்கு அழைக்கிறார்கள். போலீசுக்கு பயந்து ஓடும் தங்களுக்கு அது ஒரு அடைக்கலமாக இருக்குமென்பதால் ஒத்துக்கொண்டு செல்கிறார்கள் போலி வேட்டைக்காரர்கள். போன இடத்தில் நாயகியுடன் காதல்... செந்நாய்களுடன் மோதல்... என்ன ஆனது முடிவு என்பதே கழுகு 2.

 

 

kazhugu bindhu madhavi



'கழுகு' படத்தைப் போலவே 'கழுகு 2' படத்திலும் எளிய வாழ்க்கை, காதல், துரோகம் அனைத்தும் இருக்கிறது. ஆனால் எப்படி இருக்கிறது என்பதுதான் படம் முடியும் வேளையில் நம் மனதில் தோன்றும் கேள்வி. முதல் காட்சியிலேயே காட்டுக்குள் நம்மை அழைத்துச் செல்லும் ராஜா பட்டாச்சார்ஜீயின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். நம்மை இறுதி வரை கைபிடித்து அழைத்துச் சென்று சேர்ப்பதும் அதுதான். கதையாக, செந்நாய் இருக்கும் காடு, காட்டை அழித்து பணம் ஈட்டும் மனிதர்கள், விவரம் தெரியாமல் அதற்கு உழைக்கும் மனிதர்கள் என ஈர்க்கும் 'கழுகு 2' திரைக்கதையாக மிகவும் தடுமாறுகிறது. திருடர்களாக வரும் கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட் இருவரையும் வேட்டைக்காரர்கள் என்று எம்.எஸ்.பாஸ்கர்  தவறாக எண்ணுவதற்காக அமைக்கப்பட்ட காட்சி ஒரு உதாரணம். அவ்வளவு வெகுளியாக அல்லது முட்டாள்தனமாக யாரேனும் இருப்பார்களா என்று தோன்ற வைக்கிறது எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள அந்த பாத்திரம். அதே பாத்திரம், கதையின் பின்பகுதியில் செயல்படும் விதம் மிக மிக வேறாக இருக்கிறது. இப்படி, ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு பாத்திரமும் மிக ஈசியாக டீல் செய்யப்பட்டிருப்பது படத்தின் பெரும் குறை.

ஆபத்தான செந்நாய்கள் நிறைந்த காடு, அதிலிருந்து மரங்களை வெட்ட பேராசை மனிதர் எடுக்கும் முயற்சி, அங்கு வந்து சேரும் ஹீரோ... என ஒரு படத்திற்கான நல்ல களம் அமைந்த பிறகும் திடீர் வில்லனாக ஒரு எம்.எல்.ஏ, முதுமக்கள் தாழி, அதன் பிறகு ஒரு துரோகம் என திரைக்கதை வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறது, எதிலும் அழுத்தமோ சுவாரசியமோ இல்லாமல். யுவனின் பின்னணி இசையும் காட்சிகளுக்கேற்ப சுமாராக இருக்கிறது. 'சகலகலா வள்ளி...' பாடல் மட்டும் தாளத்தில் காலாட்ட வைக்கிறது. செந்நாய்கள் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் நாகங்கள் நடிக்கும் ரீமேக் சீரியல்களை நினைவுபடுத்துகின்றன. கதை நடக்கும் காட்டுக்குள் நாம் நடமாடும் உணர்வை கொடுத்த ஒளிப்பதிவும் கலை வேலைப்பாடுகளும் படத்தின் நல்ல அம்சங்கள்.

 

 

kazhugu m.s.baskar



கிருஷ்ணா, பிந்து மாதவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பாத்திரங்களில் இயல்பாகப் பொருந்துகின்றனர். காளி வெங்கட் நடிப்பில் குறையில்லையென்றாலும் அவர் பேசும் காமெடி கவுண்டர் வசனங்கள் பெரும்பாலும் இடைச்செருகல் போன்ற உணர்வை தருகின்றன. தமிழ் சினிமாவின் சமகால ஃபேவரிட் வில்லன் ஹரிஷ் பரேடியின் வாயசைப்பும் வசனங்களும் பல இடங்களில் பொருந்தாத உணர்வு. படம் போக வேண்டிய பாதையைத்தாண்டிச் சென்று ’போதும் போதும்’ என்னும் அளவுக்கு இறுதியில் ஒரு திடீர் ட்விஸ்ட்டுடன் முடிகிறது.

உலகெங்கும் திரைப்படங்களின் சீக்குவல்கள் வெளியாவது நடக்கிறதுதான் என்றாலும் தமிழ் சினிமாவின் தற்கால ஹாட் ட்ரெண்டாக பார்ட்-2க்கள் இருக்கின்றன. இயல்பான தேவையோ வாய்ப்போ ஏற்படாமல் வணிகத்துக்காக மட்டும் எடுக்கப்படும் பார்ட்-2க்கள் பெரும்பாலும் வெற்றி பெறவில்லை. கழுகு-2 அந்த வரிசையில் இணைகிறது என்றே தோன்றுகிறது.           
             


                

சார்ந்த செய்திகள்