பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த பிறகு, அதில் பங்கேற்ற பல்வேறு பிரபலங்களும் அவரவருக்குத் தகுந்தாற்போல் ஒவ்வொரு படங்களில் கமிட் ஆகிக்கொண்டிருக்க, நடிகர் கவினும் 'லிப்ட்' படத்தில் நாயகனாக கமிட் ஆனார். இந்த படம் சில மாதங்களுக்கு முன்பே முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், கரோனா பரவல் காரணமாகத் தள்ளிப்போனது. இதையடுத்து, சில பிரச்சனைகளுக்குப் பிறகு தற்போது ஓடிடியில் வெளியாகியிருக்கும் இந்த 'லிப்ட்' கவினை அடுத்த தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளதா...?
வெளியூரிலிருந்து சென்னையில் இருக்கும் ஒரு ஐடி கம்பெனிக்கு டீம் லீடராக ட்ரான்ஸ்பர் ஆகி வரும் நடிகர் கவின் அங்கு எச்ஆர் ஆக இருக்கும் அம்ரிதா ஐயருடன் முட்டலும், மோதலுமாக இருக்கிறார். பிறகு கவின் மேல் அம்ரிதாவுக்கு கிரஷ் ஏற்படுகிறது. அதை அம்ரிதா கவினிடம் வெளிப்படுத்த, அதைக் கவின் ஏற்க மறுக்கிறார். இதனால் மீண்டும் இவர்களுக்குள் ஊடல் ஏற்படுகிறது. இதற்கிடையே ஓவர் டைம் செய்து வேலை முடிந்த பின்னர் இரவு வீடு திரும்புவதற்காகக் கவின் ஆபீஸ் லிப்ட்டுக்குள் நுழைகிறார். அப்போது லிப்டில் ஒரு பேயிடம் மாட்டிக்கொண்டு வெளியே தப்பிக்க முடியாமல் தவிக்க, அப்போது அங்கு அம்ரிதா ஐயரும் வருகிறார். அவரும் கவினுடன் சேர்ந்து பேயிடம் மாட்டிக்கொள்கிறார். இவர்கள் இருவரும் எவ்வளவோ முயற்சி செய்தும் பேய் அவர்களைத் தப்பவிடவில்லை. ஒருகட்டத்தில் இரவு 12.00 மணிக்கு இவர்கள் இருவரும் நடு இரவு 3.00 மணிக்கு இறந்து விடுவது போல் டிவியில் பிளாஷ் நியூஸ் ஓடுகிறது. இதைக்கண்ட இருவரும் அதிர்ச்சியாகிறார். இதையடுத்து இடைப்பட்ட 3 மணிநேரத்துக்குள் இவர்கள் இருவரும் பேயிடம் இருந்து தப்பித்தார்களா, இல்லையா..? என்பதே படத்தின் பரபரக்கும் கிளைமாக்ஸ்!
வழக்கமாகப் பேய் படங்களில் இருக்கும் அதே க்ளிஷேவான பயமுறுத்தும் காட்சிகளே இந்த படத்தையும் ஆக்கிரமித்துள்ளன. கரண்ட் கட், கும் இருட்டு, பயமுறுத்தும் நிழல், பக்கத்தில் கேட்கும் விசித்திரமான சத்தங்கள், 'திடீர் திடீர்னு உடையுதாம், சாயுதாம்' மொமெண்ட்ஸ்களே படத்தின் பெரும்பகுதி காட்சிகளில் நிறைந்து இருக்கின்றன. ஆனாலும், இவையெல்லாம் ஓரளவு ரசிக்கவைத்தது என்றே சொல்லலாம். படத்தின் ஆரம்பக்கட்ட ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை காட்சிகளைச் சிறப்பாகக் கையாண்டு ரசிக்கவைத்த இயக்குநர் வினித் வரபிரசாத், பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் நீளத்தை இன்னும் கூட குறைத்து, வித்தியாசமாக ரசிக்கும்படி கொடுத்திருக்கலாம். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே கணிக்கும்படியான காட்சியமைப்புகள் இந்த பயமுறுத்தும் காட்சிகளில் இருப்பதால் அங்கங்கே அயர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மற்றபடிப் படத்தின் இரண்டாம் பாதி வேகமாக நகர்ந்து இந்த அயர்ச்சியைப் போக்க முயற்சி செய்துள்ளது. குறிப்பாக ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகளில் வேகமெடுக்கும் படம், ஜெட் வேகத்தில் நகர்ந்து பரபரக்கும் காட்சிகளோடு முடிந்துள்ளது. படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதைக்கு அதிகமாக மெனக்கெட்ட இயக்குநர் வினித் அதே மெனக்கெடலை முதல் பாதி படத்துக்கும் சற்று போட்டிருக்கலாம்.
நாயகன் கவின் நடிப்பில் நன்றாக முதிர்ச்சி தெரிகிறது. காதல் காட்சிகளிலும் சரி, பேய்க்குப் பயப்படும் காட்சிகளிலும் சரி, வில்லத்தனம் காட்டும் காட்சிகளிலும் சரி அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி நடிப்பில் அடுத்த தளத்துக்குச் சென்றுள்ளார். துடுக்கான பெண்ணாக வரும் அம்ரிதா ஐயர் கவினோடு போட்டிப்போட்டு நடித்துள்ளார். இருவரும் பெரும்பாலான காட்சிகளில் மாறி மாறி ஸ்கோர் செய்துள்ளனர். சில காட்சிகளே வந்தாலும் காமெடியில் கலக்கியுள்ளார் 'இரும்புத்திரை பட புகழ்' அப்துல். இவரின் டைமிங் வசனங்கள் காட்சிகளை என்ஹான்ஸ் செய்துள்ளன. காயத்திரி ரெட்டி, கிரண் கொண்டா, பாலாஜி வேணுகோபால், முருகானந்தம் ஆகியோர் அளவான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகின்றனர்.
படத்தின் மிகப்பெரிய பலமாக பிரிட்டோ மைக்கேல் இசை அமைந்துள்ளது. படத்தில் 'ஹே ப்ரோ', 'இன்னா மயிலு' என இரண்டே பாடல்கள்தான் என்றாலும் அவற்றை ரசிக்கும்படி கொடுத்துள்ளார். அதேபோல் பின்னணி இசையும் படத்தைத் தாங்கிப்பிடித்துள்ளது. திகிலூட்டும் காட்சிகளை தன் இசையால் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இருட்டு சம்பந்தப்பட்ட காட்சிகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா.
பேய் காட்சிகளின் நீளத்தைச் சற்று குறைத்திருந்தால் தரமான பேய் படங்களின் பட்டியலில் 'லிப்ட்' இணைந்திருக்கும்.
'லிப்ட் ' - கவினை மேலே ஏற்றிவிட்டிருக்கிறது!