'மீசையை முறுக்கு' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் படம். இதற்கு முன்பு வெளியான 'நான் சிரித்தால்' படம் ஆதிக்கு பெரிதும் கைகொடுக்காத தருணத்தில், இந்த 'சிவகுமாரின் சபதம்' படம் அவருக்கு கைகொடுத்ததா, இல்லையா..?
காஞ்சிபுரத்தில் பட்டு நெசவு தொழில் செய்யும் தாத்தா இளங்கோ குமரனின் பேரனாக இருக்கும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி, தன் நண்பரான 'ஆதித்யா டிவி புகழ்' நடிகர் கதிருடன் ஊதாரியாக ஊர் சுற்றுகிறார். அவரை நல்வழிப்படுத்த ஆதியின் சித்தப்பாவான ப்ராங்க் ஸ்டார் ராகுலுடன் சென்னைக்கு அனுப்பப்படுகிறார் ஆதி. போன இடத்தில் ஆதிக்கு காதல், மோதல், சபதம் பல்வேறு கமிட்மெண்ட்டுகள் வர, அதை ஹிப்ஹாப் ஆதி எப்படி எதிர்கொண்டார் என்பதே 'சிவகுமாரின் சபதம்' படத்தின் மீதிக்கதை.
தனது படங்களுக்கே உரித்தான கலகலப்பு நிறைந்த திரைக்கதை மூலம் படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஆதி. ஆதியின் ஹிட் டெம்ப்லேட்டான யூத்ஃபுல்லான தாளம் போடவைக்கும் பாடல்களும், இன்ஸ்பிரேஷனான காட்சிகளும், எதார்த்தமான காமெடி காட்சியமைப்பும் இந்தப் படத்திலும் இடம்பிடித்து ரசிகர்களை ஆங்காங்கே பரவசப்படுத்துகிறது. ஆனாலும், கடந்த படங்கள் அளவுக்கு இந்த டெம்ப்லேட் இந்தப் படத்திற்கு கைகொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் இயக்குநராக ஆதி சிறப்பாக செயல்பட்டாலும், நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சற்று தடுமாறியுள்ளார். இதனாலேயே நடிப்பின் மூலம் காட்சிகளை நகர்த்தும் சில இடங்களில் எல்லாம், காட்சிகள் மனதில் ஒட்ட மறுக்கிறது. ஒரு காட்சியாக பார்க்கும்போது பல எபிசோடுகள் ரசிக்கும்படி இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஆங்காங்கே சற்று அயர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல் நாயகி குடும்பம் மற்றும் பிளாஷ்பேக் சம்பந்தப்பட்ட காட்சிகள் சீரியல் எஃபெக்ட்டை தருகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியைக் குழப்பத்தோடு (எப்படியாவது முடிக்க வேண்டும் என்று) முடித்ததுபோல் தோன்றுகிறது.
தாத்தா பேரன் பாசப்பிணைப்பை அழகாக காட்சிப்படுத்தியுள்ள ஆதி, அவருடைய உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள காட்சிகளை ஆழமாக காட்ட தவறியுள்ளார். அதேபோல் நெசவு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அதிக ஆழமில்லாமல் மேம்போக்காக காட்சிப்படுத்தியுள்ளது திரைக்கதைக்கு சற்று மைனஸாக அமைந்துள்ளது. பல இடங்களில் காமெடி காட்சிகள் கலகலப்பாக அமைந்து அயர்ச்சியைக் குறைத்துள்ளது. குறிப்பாக ப்ராங்க் ஸ்டார் ராகுல், கதிர் ஆகியோர் காமெடி காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்து கிச்சிக்கிச்சி மூட்டியுள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுடைய பன்ச் வசனங்கள் மற்றும் முகபாவனைகள் மூலம் நன்றாகவே சிரிப்பு காட்டியுள்ளனர். இதுவே படத்துக்கு சற்று பலம் சேர்த்துள்ளது.
வழக்கமான கதாநாயகியாக வரும் மாதுரி அழகாக இருக்கிறார். வழக்கமான காட்சிகளில் நாயகனோடு டூயட் பாடியுள்ளார். தேவைப்படும் இடங்களில் நாயகனோடு ட்ராவல் செய்துள்ளார். தாத்தாவாக வரும் இளங்கோ குமார், அந்தக் கதாபாத்திரத்துக்கு நல்ல தேர்வு. உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் சரி, ஜனரஞ்சகமான காட்சிகளிலும் சரி நன்றாக நடித்து, புதுமுகம் என்ற உணர்வை வரவிடாமல் பார்த்துக்கொள்கிறார். வில்லி கதாபாத்திரத்தில் வரும் நடிகை சீரியல் வில்லியாக தென்படுகிறார். வில்லனாக வரும் நடிகர் வில்லத்தனம் காட்ட மறுத்துள்ளார்.
அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கிறது. குறிப்பாக நெசவு சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை. இயக்குநராக ஓரளவு வெற்றிபெற்ற நடிகர் ஆதி, இசையமைப்பாளராக சற்று சறுக்கியுள்ளார். படம் முழுவதும் பின்னணி இசையைக் காட்டிலும் பாடல்களே அதிகமாக ஒலிப்பது சலிப்பைத் தருகிறது. குறிப்பாக எல்லாக் காட்சிகளிலும் பின்னணி இசை கேட்டுக்கொண்டே இருப்பது படம் பார்க்கும்போது எரிச்சலை ஏற்படுத்தி, நெருடலைக் கூட்டியுள்ளது. இது பெரும்பாலும் இதற்கு முன் வெளியான எல்லா ஆதி படங்களிலும் தென்பட்டாலும்... அவை ரசிக்கும்படி இருந்ததால் அதிகம் கவனிக்கப்படாமல் போனது. ஆனால் இந்தப் படத்தில் அதிகம் ரசிக்கும்படி இல்லாத திரைக்கதையைத் தாண்டி பாடல்கள் என்று கவனிக்கப்படும்போது மேலே குறிப்பிட்டுள்ள குறைகள் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இனிவரும் காலங்களில் ஹிப்ஹாப் ஆதி இதைக் கன்சிடர் செய்தால் நல்லது!
ஹிப்ஹாப் தமிழா ரசிகர்களை மனதில் வைத்து பல காட்சிகள் அமைத்துள்ளதால் அவர்களுக்கான படமாகவே இது அமைந்துள்ளது. மற்றபடி, ஃபேமிலி ஆடியன்ஸ் கலகலப்பான காட்சிகளை மட்டும் ரசிக்கவே அதிக வாய்ப்புள்ளது.
சிவகுமாரின் சபதம் - ஆதிக்கும் ஆடியன்ஸுக்கும் ஏமாற்றம் இல்லை!