ஐடியில் வேலை பார்க்கும் காதலர்களின் இன்றைய சூழலைச் சொல்லும் மற்றுமொரு படம்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனான ஜி.வி. பிரகாஷ், ஐடி கம்பெனியில் வேலை கிடைத்து தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருவுக்குச் செல்கிறார். சென்ற இடத்தில் நண்பர்கள் ரூமில் தங்கிக்கொண்டு குடியும் கும்மாளமுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரது நண்பர் ஒருவருக்கு விபத்து ஏற்பட, அவர் தன் காதலியுடன் அவளது பிளாட்டுக்குச் சென்றுவிடுகிறார். அந்தப் பிளாட்டுக்கு ஜி.வி. பிரகாஷும் செல்கிறார். போன இடத்தில் ஜிவியும் அங்கேயே தங்கிவிட, அந்த பிளாட்டில் இருக்கும் திவ்யபாரதிக்கும் ஜிவிக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக திவ்யபாரதி கர்ப்பம் அடைகிறார். இந்த கர்ப்பத்தைக் கலைக்க ஜிவி முற்படுகிறார். இதை எதிர்த்து நாயகி திவ்யபாரதி தரப்பு 'குடும்ப வன்முறை' என வழக்குத் தொடுக்கிறது. அதன் பிறகு கோர்ட்டில் என்ன நடந்தது? என்பதே ‘பேச்சிலர்’ படத்தின் மீதிக் கதை.
ஒரு கதை எந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறதோ அந்த அளவு அந்தப் படத்தின் வெற்றி என்பதும் உறுதி செய்யப்படும். அந்தவகையில் இக்கால திடீர் மாடர்ன் இளைஞர்களின் கதையை உண்மைக்கு மிக நெருக்கமாகவும், அதேசமயம் மிக போல்டாகவும் காட்டியுள்ள ‘பேச்சிலர்’ படம், எங்கோ ஓரிடத்தில் தடுமாறியிருக்கிறது. அது எங்கே என்றால், படத்தின் நாயகன் யார் என்பதில் நிகழ்ந்திருக்கும் குழப்பமே முதல் காரணம். எதையுமே யோசிக்காமல் நிறைய தவறு செய்து, அதைப் பற்றிக் கவலைப்படாமல் சுயநலமாகவே இருக்கும் நாயகன் ஜி.வி. ஒருபக்கம், மிகவும் ப்ரொபஷனலான, போல்டான, லவ்வபில் ஆன பெண்மணியாக நாயகி திவ்யபாரதி ஒருபக்கம். இதில் யாருடைய பார்வையில் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற குழப்பமே படத்திற்குப் பாதகமாக அமைந்துவிட்டது. நாயகனாகப் பார்க்கப்பட்ட ஜி.வி. இடைவேளைக்குப் பிறகு கதையின் வில்லனாக மாறுகிறார், திவ்யபாரதி கதையின் நாயகனாக மாறுகிறார்.
முதல் பாதியைச் சற்று கலகலப்பாகவும் சுவாரசியமாகவும் எடுத்துச் சென்ற இயக்குநர் சதீஷ் செல்வகுமார், இரண்டாம் பாதியைச் சரியாகக் கொடுக்கத் தடுமாறியிருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதும் படம் நாயகியை மையமாகக் கொண்டிருந்தாலும், நாயகனை மட்டுமே முன்னிறுத்திப் பல லாஜிக் மீறல்களோடு காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர். சில இடங்களில் அவை ரசிக்கும்படியாக இருந்தாலும், அவற்றைச் சரியென ஏற்றுக்கொள்ள மனம் ஏனோ மறுக்கிறது. அதேபோல் படத்தின் நீளமும் அயர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவே படத்திற்குப் பின்னடைவாகவும் மாறிவிடுகிறது. மற்றபடி, டெக்னிக்கலாக படத்தின் மேக்கிங் சிறப்பாக அமைந்துள்ளது. பல காட்சிகள் லைவ் ஆக இருப்பது படத்திற்கு பிளஸ்சாக மாறியிருக்கிறது. அழுத்தமான கதைக்களம் கொண்ட இப்படத்தை மலையாள படமான ‘பிரேமம்’ ஸ்டைலில் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் சதீஷ் செல்வகுமார்.
நாயகன் ஜி.வி. பிரகாஷ் தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். படம் முடியும்போது அவர் கதாபாத்திரம் மீது எரிச்சல் ஏற்படும்படி நடித்து நடிப்பில் கவனம் பெற்றுள்ளார். படத்தின் மற்றொரு நாயகனாகப் பார்க்கப்படும் நாயகி திவ்யபாரதி நடிப்பில் முதல் படம் என்ற உணர்வை எங்குமே தரவில்லை. தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை மிகத் தைரியமாகவும், திறம்படவும் சமாளித்து நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியுள்ளார். இவருக்கும் ஜிவிக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியே படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் வரும் முனிஸ்காந்த் மற்றும் பக்ஸ் பகவதி பெருமாள் ஆகியோர் மனதில் பதியும்படி நடித்துள்ளனர். இவர்களுடன் வரும் ஜிமெயில் நண்பர்கள் ஆங்காங்கே ஸ்கோர் செய்துள்ளனர்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல். மலையாளப் படத்தைப் பார்த்த எஃபெக்ட்டை இப்படத்தில் கொடுத்துள்ளார். படத்தில் வரும் இரண்டு பாடல்கள் நன்று. குறிப்பாக, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படப் புகழ் சித்து குமாரின் பின்னணி இசை படத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. இன்றைய இளைஞர்களின் பல்ஸை சரியாகப் பிடித்து அதற்கேற்றாற்போல் பின்னணி இசை அமைத்து ரசிக்க வைத்துள்ளார்.
இன்றைய 2K கிட்ஸ் காலத்தில் இருக்கும் ரிலேஷன்ஷிப் என்பது பல்வேறு பரிணாம வளர்ச்சியைப் பார்த்துவிட்டது. ஆனால், இந்தக் காதல் தனது ஒவ்வொரு பரிணாமத்திலும் சந்தித்த பொதுவான மற்றும் முக்கியமான ஒரு சிக்கலை எடுத்துக்கொண்டு, அதனை இன்றைய சூழலுடன் பொருத்தி, ரசிகர்களுக்கு வழங்குவதில் சற்றே சறுக்கியிருக்கிறது இப்படம்.
‘பேச்சிலர்’ - ஏமாற்றுக்காரன்!