1975ல் வெளிவந்த 'டாக் டே ஆப்டர் நூன்' ஹாலிவுட் படத்தை தழுவி வெளிவந்துள்ள படம் 'கொரில்லா'. சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்யும் ஜீவா, ஐ.டி கம்பெனியில் வேலையிழந்த சதீஷ், நடிகராகத் துடிக்கும் விவேக் பிரசன்னா மற்றும் காங் என்ற சிம்பன்சி குரங்கு ஆகியோர் நண்பர்களாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்களது வீட்டில் கீழ் போர்ஷனில் வசிக்கும் ஏழை விவசாயி மதன்குமார் சென்னையில் பணம் சம்பாரிக்க வழி தேடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே இவர்கள் நால்வருக்கும் பணத்தேவை அதிகரிக்கிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர்கள் நான்கு பேரும் ஒரு கட்டத்தில் குரங்குடன் சேர்ந்து வங்கியை கொள்ளையடிக்க முடிவு செய்து வங்கிக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து விடுகின்றனர். அப்போது போலீஸ் வங்கியை சுற்றிவளைத்து விடுகிறது. இதன் பிறகு இவர்கள் போலீசிடம் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதே 'கொரில்லா'.
நகைச்சுவை படமாக உருவாக்க முயற்சி செய்யப்பட்டுள்ள இப்படத்தில் விவசாயிகளின் கடன் பிரச்சனையையும் சேர்த்து ரசிக்கவைக்க முயன்றுள்ளார் இயக்குனர் டான் சாண்டி. ஆரம்பத்தில் கலகலப்பாக திருட்டு, காதல், நட்பு என வழக்கமான முறையில் நகரும் படம் பிற்பகுதியில் பேங்க் கொள்ளை, விவசாய பிரச்சனை என திசை திரும்புகிறது. இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் ஓரளவு ரசிக்க வைத்துள்ளன. ஆனால் விவசாய பிரச்சனையை பேச இந்த கதை களத்தை தேர்ந்தெடுத்தது சரியா என்ற கேள்வி பெரிதாக எழுகிறது. தமிழ் திரைப்படங்களில் சமீப காலமாக அரசியலையும் மக்கள் பிரச்சனைகளையும் பேசும் போக்கு அதிகரித்திருக்கிறது. உண்மையில் இது சரியாக நடந்தால், மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்தான். ஆனால், பொருந்தாத, தேவையில்லாத கதைக்களத்தில் திடீரென நுழைக்கப்படும்போது, தங்களது தாய்ப்பாசம், தங்கை பாசம், நட்பு என்ற கமர்சியல் செண்டிமெண்ட் வரிசையில் விவசாயிகள் பாசத்தையும் சேர்த்துவிட்டார்களோ என்று கவலைப்பட வைக்கிறது. விவசாயிகளுக்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் போதும். தமிழ் சினிமா அதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு லோக்கலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜீவா. பழைய பக்கத்துவீட்டு பையன் ஜீவாவாக வரும் அவர் தனக்கு கொடுத்த வேலையை நன்றாகச் செய்துள்ளார். இருந்தும் கதை தேர்வில் இவருக்கு ஏற்பட்ட சறுக்கல் இன்னும் தொடர்கிறது என்றே தோன்றுகிறது. 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே ஒரு பாட்டுக்கும், சில சீன்களுக்கும் வந்து செல்கிறார். ஜீவா கூடவே வரும் சதிஷ், விவேக் பிரசன்னா, மதன் குமார் ஆகியோர் தங்கள் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நக்கலான போலீஸ் அதிகாரியாக வந்து ரசிக்கவைத்துள்ளார் நடிகர் ராதாரவி. மேலும் லொள்ளுசபா சாமிநாதன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் காங் குரங்கு ஆகியோர் இரண்டாம் பாதியை தங்கள் காமெடி மூலம் தாங்கிப்பிடிக்க முயற்சி செய்துள்ளனர். யோகிபாபு வரும் காட்சிகள் சிரிக்கவைக்கின்றன, உண்மைதான். ஆனால், எத்தனை நாளைக்கு அவரது உருவத்தை மட்டுமே வைத்து சிரிப்பை உண்டாக்க முடியும்? அதைத்தாண்டி கொஞ்சமேனும் இயக்குனர்கள் யோசிக்கவேண்டும்.
சாம்.சி.எஸ் இசையில் யாரடியோ பாடலும், பின்னணி இசையும் நன்று. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு ஒரு டிராமாவை எந்த அளவு படமாக்க முடியுமோ அப்படி படமாக்கியுள்ளது. இப்படத்தில் விவசாயக் கடன் பிரச்சனையும், காங் குரங்கும் அவசியமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. ஆனால், அது இரண்டையும் நமபித்தான் படத்தையே எடுத்திருப்பார்கள் போல. லாஜிக், பொருத்தம், தொடர்பு என்றெல்லாம் யோசிக்காமல் சிரிக்கத் தயாராக இருப்பவர்களை இந்த ‘கொரில்லா’ கொஞ்சம் குதூகளப்படுத்தும்.